[சனிக்கிழமை, 10 மார்ச் 2007]
"இலங்கைத் தீவில் தற்போது இடம்பெறுவது மனிதவதை, மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பனவற்றிற்கும் அப்பால், இன அழிப்புக் கூறுகளைக் (Genocide) கொண்டுள்ளது" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் திருமதி. செல்வி தெரிவித்துள்ளார்.
"ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் அமைப்பின் (UN Human rights council) 4 ஆவது கூட்டத்தொடர், தமிழீழத் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் பெரும் மனிதவதை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக தீவிர கவனத்தைச் செலுத்தி தாக்கமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
"கடந்த 15 மாத காலத்தில் 1,400-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காப் படைகளாலும் அதன் துணைப் படைகளாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், மிரட்டப்பட்டும் உள்ளனர். அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக திருகோணமலை மாவட்டத்திலும் பிற பகுதிகளிலும் சிறிலங்காப் படைகள் போர்க்குற்றங்களைப் புரிந்து வருகின்றமை விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதாபிமான நிறுவனங்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களை கண்டிப்பதற்கும், விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் அனைத்துலக மனித உரிமைகள் பொறிமுறை முன்வர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"மனித உரிமைகள் அமைப்பின் 2 ஆவது கூட்டத் தொடரில் இது தொடர்பான விவாதங்கள் ஆரம்பமாகியது" என்பதை சுட்டிக்காட்டிய அவர், "அனைத்துலக சமூகத்தின் மனித உரிமைகள் கரிசனைகள் தொடர்பான பிரகடனங்களில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமாயின் தாக்கமுள்ள நடவடிக்கைகள் இப்போது மிக அவசியமாகின்றது" என்று கூறினார்.
"இலங்கைத் தீவில் தற்போது இடம்பெறுவது மனிதவதை, மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பனவற்றிற்கு அப்பால், இன அழிப்புக் கூறுகளைக் (Genocide) கொண்டுள்ளது. ஏனெனில், கடந்த 15 மாதங்களில் கொல்லப்பட்ட தமிழர்களில் 80 வீதத்தினர் குறித்த வயது எல்கைளைக் கொண்டவர்கள். (20 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்).
வெளிப்படையாகச் செயற்படும் தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாட்டுத் தலைவர்கள் படைகளால் படுகொலை செய்யப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். தமிழ் ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. தமிழ் மக்கள் தொடர்ச்சியான பொருளாதாரத்தடை அச்சுறுத்தலுக்குள் வைக்கப்பட்டுள்ளனர். இவை தமிழ் மக்களின் இன அடையாளத்தினை குறிவைத்த நடவடிக்கைகளாகவே இருக்கின்றன" என்று கோடிட்டுக் காட்டினார்.
சிறிலங்காவின் அனைத்துலக மேற்பார்வையுடன் கூடிய விசாரணைகள் பற்றி கருத்துத் தெரிவித்த அவர்,
"மனிதவதை தொடர்பாக அனைத்துலக ரீதியாக எழுந்த கவனத்தை திசை திருப்பவே சிறிலங்கா இந்தப் புதிய விசாரணை ஆணைக்குழுவினை அமைத்தது" என்றும், "கடந்தகால அனுபவங்களில் எந்த சிறிலங்கா ஆணைக்குழுக்களும் உண்மைக் குற்றவாளிகளை இனங்காட்டவுமில்லை, தண்டிக்கவும் இல்லை, குற்றங்களை முறையாக விசாரிக்கவும் இல்லை" என்றும் தெரிவித்தார்.
"அனைத்துலக மன்னிப்புச்சபை போன்றவற்றின் அபிப்பிராயங்களையும் மீறி, அனைத்துலக தரப்பு இந்த விசாரணைக் குழுவினை ஏற்று கண்காணிப்புக்குழுவிற்கு நிபுணர்களை நியமித்தமை வியப்பினை தருவதாயினும் போர்க்குற்றங்களையும், மனித வதைகளையும் புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை இந்த அனைத்துலக நிபுணர்கள் உறுதிப்படுத்தினால் அது வரவேற்புக்குரியது" என்றும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிலவும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர்,
"தமிழீழ செயற்பாடு நாட்டின் நிர்வாகப் பகுதிகளில் (defacto state) பொதுமக்களிற்கு எதிரான படுகொலைகள், காணாமல் போதல், சித்திரவதைகள் என்பன இடம்பெறுவதில்லை. சிறிலங்காவின் கடும்போக்கு ஆங்கில ஊடகங்கள் உட்பட பலதரப்பு பத்திரிகைகளும் சுதந்திரமாக இங்கு விநியோகிக்கப்படுகின்றன. இராணுவ நலன்சார் பகுதிகள் தவிர்ந்து பிற பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செய்திகளை திரட்டிட அனுமதிக்கப்படுகின்றனர்" என்பதையும் சுட்டிக்காட்டினார்.
"சிறிலங்காவின் விமானத் தாக்குதல்கள், ஊடுருவல் அணிகளின் கிளைமோர் தாக்குதல்கள், கட்டுப்பாட்டு எல்லைகளில் இருந்து மேற்கொள்ளப்படும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதான மோட்டார் தாக்குதல்களே இப்பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட மனிதசிக்கல்" என அவர் விபரித்தார்.
"தமிழீழ நீதித்துறை, காவல்துறை மற்றும் சிறைச்சாலை நிர்வாகங்கள் என்பன தொடர்பாக விபரித்த அவர், " அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல அனைத்துலக தரப்பின் பிரதிநிதிகள் இந்த துறைகளுக்குச் சென்று பார்வையிட்டு வருவதாகக்" கூறினார்.
மேலும், "தமிழீழ சட்டங்கள் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகத்" தெரிவித்த அவர், "இந்த ஆண்டு ஆரம்பம் முதல் தமிழீழ சிறுவர் பாதுகாப்புச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டமை அனைத்துலக சிறுவர் விவகாரங்கள் தொடர்பான கரிசனைக்கு இந்த செயற்பாடு, நாடு கொடுக்கும் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதாகக்" கூறினார்.
தமிழீழப் பகுதிகளில் நிலவும் வரி மற்றும் தண்டம் (tax and penalty) முறைகள் பற்றி விபரித்த அவர், "விதிக்கப்பட்ட சட்ட நடைமுறைகளின் கீழ் தமிழீழ நிதித்துறை வரி மற்றும் வங்கி விவகாரங்களைக் கையாள்கின்றது" என்றும், "இவை சாதாரண அரச நடைமுறைகள்" என்றும் கோடிட்டுக் காட்டினார்.
இந்தப் பகுதிகளில் மாற்று அரசியல் கட்சிகள் செயற்பட முடியாது என்ற சிறிலங்கா அரசின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த அவர், "தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டு, இராணுவத் துணைக்குழுக்களாக இயங்குபவை தவிர பிற கட்சிகள் எங்கள் பகுதிகளில் செயற்பட எதுவித தடைகளும் இல்லை" என்று கூறினார்.
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பல கட்சிகளின் கூட்டமைப்புத் தலைவர்கள் இந்தக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுயாதீனமாகச் செயற்படுகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார். "ஆனால், சிறிலங்காவில், அதன் அரசியலமைப்பின் 6 ஆவது சட்டத்திருத்தத்தின் கீழ், தமிழீழம் தொடர்பாகப் பேசும் அரசியல் கட்சிகள் செயற்பட முடியாது" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"தமிழ் மக்களின் விடுதலைப் போர் மனித உரிமைகள் தொடர்பான மேன்மையான அடித்தளத்திலேயே கட்டப்பட்டது" என்று கடந்த அனைத்துலக மனித உரிமைகள் நாள் செய்தியில் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தமையை திருமதி. செல்வி இங்கு மீள வலியுறுத்தினார்.
புதினம்.கொம்.
Saturday, March 10, 2007
'இலங்கைத் தீவில் இன அழிப்பே இடம்பெறுகிறது': விடுதலைப் புலிகளின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர்.
Saturday, March 10, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.