Saturday, March 17, 2007

'சிறிலங்கா அரசிற்கும் கருணா குழுவிற்கும் இடையிலான உறவை மறைப்பது கடினம்': த ஏஜ்

[சனிக்கிழமை, 17 மார்ச் 2007] "சிறிலங்கா அரசாங்கம், கருணா குழுவினருடனான தமக்குள்ள தொடர்புகளை மறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் அரசியல் வேறுபாட்டை தோற்றுவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு கருணா குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை கோரியிருந்தனர். ஆனால் அரசோ அதனை செய்யவில்லை ஏனெனில் அது அவர்களுக்கு நன்மையானது. தற்போதைய கிழக்கின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னர் அரசாங்கத்திற்கும் கருணா குழுவினருக்கும் இடையிலான உறவை மறைப்பது கடினமாகியுள்ளது." அவுஸ்திரேலியா மெல்பேணிலிருந்து வெளிவரும் 'த ஏஜ்' பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் கொனி லவெற்றினால் எழுதப்பட்ட பத்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அப்பத்தியில் தெரிவிக்கப்பட்ட முக்கிய பகுதிகள் வருமாறு: நீங்கள் சேவை நோக்கத்துடன் இணைந்தவர்கள், நீங்கள் சேவை செய்பவர்கள், எனவே தற்போது நீங்கள் சென்று இதனைச் சொல்லுங்கள். பெரிய மனிதர் இரு சிறார்களை அவர்களது தாயார்களிடம் ஒப்படைக்கும் முன்னர் கூறியவை இவை. நாங்கள் கடத்தப்படவில்லை, எங்களின் விருப்பத்துடனேயே இணைந்தோம். ஆனால் இராணுவப் பயிற்சியை நாம் விரும்பவில்லை, பாடசாலைக்கு செல்ல விரும்பினோம். அவர்கள் எங்களை செல்ல அனுமதித்தனர் என 15 வயது நிரம்பிய ராம் மற்றும் முரளி (இது அவர்களின் சொந்தப் பெயர்கள் அல்ல) ஆகிய இருவரும் தெரிவித்தனர். அவர்கள் தமது கருத்துக்களை 'த ஏஜ்' பத்திரிகைக்கு கருணா குழுவினரின் மட்டக்களப்பு நகர முகாமில் இருந்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலான சிறார் படையினர் பேசுவதற்கு விரும்பவில்லை. இந்த கதை உண்மையாக இருந்தாலும் அது கருணா குழுவினரில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. மட்டக்களப்பு நகரம் இராணுவப் படைக்கலங்களால் நிறைந்துள்ளது. சில மக்களே கருணா குழுவினர் தொடர்பாக பேச முன்வந்தனர். கருணா குழுவினர், வெள்ளை வான்களில் கட்டாய இராணுவப் பயிற்சிக்காக சிறார்களை கடத்திச் செல்கின்றனர். கடத்தப்பட்ட சிறார்களின் பெற்றோர்களும் தாம் பழிவாங்கப்படலாம் என அச்சமடைந்துள்ளனர். பொது அமைப்புக்கள் இதனை வெளிக்கொண்டு வந்துள்ளன. சிறார்கள் விடுதலை செய்யப்படுவது அதிகரித்துள்ளன. ஆனால் அவர்கள் மீண்டும் கடத்தப்படலாம். சிறிலங்காவில் சிறார் படைச்சேர்ப்பில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டுள்ளனர். எனினும் தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கருணா குழுவினரின் சிறார் படைச்சேர்ப்பில் அரசாங்கம் உதவி வருவதாக இரு அனைத்துலக சமூகத்தின் அறிக்கைகள் கண்டனம் செய்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் வாகரையில் இடம்பெற்ற சமரின் போது சிறிலங்கா இராணுவத்தினருக்கு கருணா குழுவினரின் சிறார் படை உதவியதாக சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இராணுவம் அதனை மறுத்திருந்தது. கருணா குழுவினர் தாம் 58 சிறார்களை கடந்த 3 மாதத்தில் விடுதலை செய்திருந்ததாக தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களால் கடத்தப்படும் சிறார்களுடன் ஒப்பிடும் போது இது சிறிய எண்ணிக்கை என ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் நிதியம் தெரிவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட முரளி மற்றும் ராம் இருவரும் தமக்கு வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே கருணா குழுவினருடன் இணைந்ததாக கூறியுள்ளனர். எனக்கு கருணாவை தெரியாது. வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக நான் கருணா குழுவினரில் இணையத் தீர்மானித்தேன் என ராம் தெரிவித்தார். முரளியின் நிலையும் இதே போன்றதே. சிறார் படைச்சேர்ப்பு தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என இராணுவம் மறுத்துள்ளது. கருணா 2004 ஆம் ஆண்டு கிழக்கின் கட்டுப்பாட்டை இழந்தபோது தமது படையினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். தற்போது அவர் படையினரை சேர்க்கிறார். சிறார் படைச்சேர்ப்பு தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அது தற்போதும் நடைபெறுகிறதா என்பதும் எனக்கு தெரியாது என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். யுனிசெஃப்பின் தரவுகளின் படி 1,500 சிறார்கள் கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இது மூன்றில் ஒரு பகுதி என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்களும் ஆயுத மோதல்களுக்குமான சிறப்பு பிரதிநிதி அலன் றொக் ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினர் இந்த சிறார் கடத்தலில் உதவி வருவதாக தெரிவித்துள்ளனர். கருணா குழுவினர், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 200 சிறார்களைக் கடத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைவிட 3 மடங்கு அதிகம் என கூறப்படுகின்றது. இது தவிர 18 - 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களும் நூற்றுக்கணக்கில் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் இருந்தோ அல்லது அதற்கு முன்னரோ சிறிலங்கா அராங்கத்திற்கு இந்த கடத்தல்கள் தொடர்பாக தெரிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் கடும் பாதுகாப்பு மிகுந்த பகுதியிலேயே கடத்தல்கள் இடம்பெறுகின்றன. அங்கு இராணுவம் மற்றும் காவல்துறையினரின் காவல் நிலைகள் அதிகம் உள்ளன. போர் நிறுத்தம் தற்போது உள்ளதாக கொள்ளமுடியாது. ஆனால் அதனை வெளிப்படையாக கைவிடுவதாக கூறுவது போரை ஆரம்பிப்பதாக கொள்ளப்படும் என்பதால் யாரும் அதனைக் கூற விரும்பவில்லை என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு பகுதிக்கான அரசாங்கத்தின் பிரதிநிதியான 82 வயதான வண. ஹரி மில்லர் தெரிவித்துள்ளார். மில்லர் 1948 ஆம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பில் வசித்து வருகின்றார். அவர் சிறிலங்காப் படையினராலும், காவல்துறையினராலும் மேற்கொள்ளப்பட்ட 8,000 மனித உரிமை மீறல்களுக்கான தரவுகளை கொண்டுள்ளார். சிறார் கடத்தலில் இராணுவத்தினரின் தொடர்பையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: இராணுவக் காவல் அரணுக்கு சமீபமாக கருணா குழுவினர் வெள்ளை வானில் சிறுவன் ஒருவனை கடத்திக் கொண்டு சென்றதனைப் பார்த்த அந்த சிறுவனின் தாயாரின் வாக்குமூலம் என்னிடம் உள்ளது. படையினர் எல்லா வாகனங்களையும் சோதனை செய்வதுண்டு. ஆனால் வெள்ளை வானை சோதனையின்றி அனுமதித்திருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு அது கருணா குழுவினரின் வான் என்பது நன்கு தெரியும். கருணாவிற்கு மனிதவலு தேவை என்பதால் இராணுவமும் காவல்துறையினரும் அவரின் சிறார் படைச்சேர்ப்பை அனுமதித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் மோதல்கள் ஆரம்பித்தால், கருணா அங்கு இருப்பதனை படையினர் விரும்புகின்றனர். எனவே கருணாவிற்கு தேவையான ஆயுதங்களை படையினர் விநியோகிப்பார்கள் என்றார் அவர். சிறிலங்கா அரசாங்கம், கருணா குழுவினருடன் தமக்குள்ள தொடர்புகளை மறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் அரசியல் வேறுபாட்டை தோற்றுவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு கருணா குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை கோரியிருந்தனர். ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு நன்மையானது. தற்போதைய கிழக்கின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னர் அரசாங்கத்திற்கும் கருணா குழுவினருக்கும் இடையினால் உள்ள உறவை மறைப்பது கடினமாகியுள்ளது. இராணுவத்தினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் உள்ள தொடர்புகளை சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அலன் றொக்கின் அறிக்கையை அடுத்து சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, சிறார் கடத்தலில் இராணுவத்தனரின் பங்களிப்பு தொடர்பாக விசாரணைகளை நடத்துவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் அது இன்று வரை ஆரம்பிக்கப்படவில்லை. அரசாங்கம், விடுதலைப் புலிகளையே குற்றம்சாட்டி வருகின்றது. ஆனால் அரசாங்கம் அதே போல கருணா குழுவினரை குற்றம் சாட்டுவார்கள் என நான் நினைக்கவில்லை என யுனிசெஃப் பேச்சாளர் கோடன் விஸ் தெரிவித்துள்ளார். கருணா குழுவினரின் சிறார் கடத்தல்களில் இராணுவத்தினரின் தொடர்புகள் குறித்து அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்கள் அதனை முக்கியமாக எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். கருணா, தேர்தலில் நிற்பது சாத்தியமற்றது. ஏனெனில் அவரது தலை வெளியில் காணப்பட்டவுடன் விடுதலைப் புலிகளின் கைத்துப்பாக்கிக் குழு அவரை கொன்று விடுவார்கள் என கருணா குழுவினரின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கத்தின் ஆதரவுடன் அவரால் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். போர் இடம்பெறும் போது விடுதலைப் புலிகளுக்கும், கருணா குழுவினருக்கும் சிறார்கள் தேவைப்படுவார்கள். முரளியைப் போல அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றது. நான் உங்களுடன் பேசுவதால், அவர்கள் என்னை மீண்டும் கடத்திச் செல்லமாட்டார்கள் என நான் நம்புகிறேன் என முரளி தெரிவித்தார். ஆனால் அவரது தாயாரிடம் எந்த மாற்றங்களும் இல்லை, அவர் இராணுவக் காவல் அரண்களைக் கடந்து தனது மகனை எவ்வாறு கொழும்புக்கு கூட்டிச்சென்று தனது குடும்பத்துடன் இணைப்பது என்ற வழியை தேடுபவராக காணப்படுகின்றார். புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.