[சனிக்கிழமை, 31 மார்ச் 2007] ஈழத் தமிழர்களின் தனியரசுக்கான போராட்டம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை இன்று அடைந்துள்ளது. விடுதலைப் போராட்டமானது தனது இறுதி இலக்கினை நோக்கிய பயணப் படிமானத்தில் மிகத்திடமாகவும் உறுதியாகவும் நிலைபெற்றுவிட்டது. இந்த இறுக்கமான நிலையினை தளர்வுறுச் செய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதில் எதிரியானவனும், கொள்கைப் பற்றுறுதி அற்ற முன்னாள் போராளிக்குழுக்களும், எண்பது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமது குழுவினது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டதன் பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் போராளிக்குழுக்களின் ஒரு சில புலி எதிர்ப்பு உறுப்பினர்களும் தத்தமது நாடுகளில் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை வெளிப்படையான உண்மை. இந்த நிலையில், ஸ்ரீலங்கா அரசானது பாரிய மனிதவுரிமை மற்றும் மனித அவலங்களை தனது கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வாழும் எமது சகோதரர்கள் மீது மிகவும் கொடூரமான முறையில் மேற்கொண்டுவருகின்றது. ஜே.ஆர் ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டீ.பி. விஜேதுங்க, சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோரினால் நடத்தப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கைகள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் இன்று துட்டகைமுனுவின் வாரிசு எனக் கூறிக்கொள்ளும் மஹிந்த ராஜபக்ஸ சகோரார்களால் நன்கு திட்டமிட்ட முறையிலும் கொடூரமான செயற்பாடுகள் மூலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் முக்கியமாக நாம் இன்று கவனிக்க வேண்டியது என்னவெனில், இன்றைய சிங்கள அரசாங்கத்தின் படையினராலும், புதிதாக அரசியல் பாதைக்கு திரும்புவதற்கு, ஒற்றையாட்சி முறையே சிறந்ததது என தனது வெற்று அரசியல் ஞானத்தை வெளிக்காட்டி வரும் துணைப்படையினராலும் மேற்கொள்ளும் கடத்தல், காணாமல் போதல், உத்தியோகப்பற்றற்ற கைது மற்றும் தடுப்புக் காவல் என்பன தமிழர்கள் மீது மேற்கொள்ளும் ஒரு விதமான மனஅழுத்த போரியல் முறை என்பதை நாம் இங்கு கவனத்தில் எடுத்தல் வேண்டும். தமிழர்களை தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து இடம்பெயரச் செய்தல், தொடர் இடப்பெயர்வுகளை ஏற்படுத்தி அகதிகளாக்குதல், திறந்த வெளித்தடுப்பு முகாம்களில் அகதிகளாக வாழச்செய்தல், தமிழர்கள் மீது விமானக்குண்டுகளை, பீரங்கிக்குண்டுகளை வீசி உயிர் பற்றிய மரணபயத்தை ஏற்படுத்ததல், பொருளாதார தடைகளை விதித்து அன்றாட வாழ்க்கைச் சுமைகளைச் சுமத்துதல் இவைகள் யாவும் மொத்தத்தில், ராஜபக்ஷவினாலும் அவரது சகோதரர்களின் வழிநடத்தலில் - தமிழர்களுக்கு கொடுக்கும் மிக ஆழமான அழுத்தங்களாகும். இந்தவகையான ஆழமான அழுத்தங்களை, தமிழர்கள் மீது பிரயோகிப்பதன் மூலம், தமிழர்கள் இதுவரை காணாத அல்லது நன்கு அனுபவப்படாத ஒரு போரியல் உத்தியென ஸ்ரீலங்கா அரசு நினைப்பது மட்டுமல்லாமல் செயற்படுத்தியும் வருகின்றது. இருப்பினும், இந்தவகையான புதிய போரியல் யுக்தியை எதிர்கொள்வதற்கு களத்தில் உள்ள மக்களை விடுதலைப்புலிகள் ஓரளவுக்கேனும் தயார்படுத்தி வருகின்றமை கண்கூடு. ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டினை கைப்பற்றுவதற்கு ஸ்ரீலங்காப் படைகள் தமது முழுப்பலத்தினையும் ஒன்று குவித்து படை நடவடிக்கையை மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் குடாநாட்டு மக்களை தமது சொந்த வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னி பெருநிலப்பரப்பிற்கு செல்லுமாறு விடுதலைப்புலிகள் அறைகூவல் விடுத்தனர். இந்த இடப்பெயர்வு மக்களுக்கு பல சொல்லெணாத் துயரங்களை ஏற்படுத்தியிருந்தமை நாம் யாவரும் அறிந்த ஒன்று. எனினும், காலப்போக்கில் விடுதலைப்புலிகளின் அறைகூவலால் பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்வியலை புதிய வடிவத்தில் செப்பனிட்டு சிறப்பாக உயர்த்தியிருந்ததோடு, புலிகளைப் பாராட்டியதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த வகையில், இன்று கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்துவரும் இடப்பெயர்வும், யாழ்ப்பாண இடப்பெயர்வு போன்றதொரு சூழலை எமக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது. கிழக்கு இடப்பெயர்வு இடப்பெயர்வு மனித அவலத்தின் முக்கிய சாட்சியாகவும், போரின் குறியீடாகவும் அமைந்துவிடுகின்றது. இந்த வகையில் ஈழப்போரின் நான்காம் கட்டம் வாகரையிலிருந்து ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது என்றே கருத இடமுண்டு. வாகரைப் பகுதி மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது, அவர்களின் போக்குவரத்துப் பாதைகளை மூடியும், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் செல்வதையும் ஸ்ரீலங்காப் படைகள் தடுத்திருந்தனர். மாறாக, விடுதலைப்புலிகள் மக்களை தமது கேடயமாக பாவிக்கின்றனர் என்ற பிரச்சாரத்தை தமது ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரப்படுத்தியுமிருந்தனர். இந்தப் பிரச்சாரங்களை மேற்குலகமும், ஒரு சில அரச-சார்பற்ற சர்வதேசத் தொண்டர் நிறுவனங்களும் நம்பியும் இருந்தன. யுத்தம் ஒன்று இடம்பெறும்போது அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களை பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்லுமாறு பணிக்கவேண்டியதும், அல்லது அவர்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க வேண்டியதும் ஒரு அரசாங்கத்தின் கடமை என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகரையில் இடம்பெற்ற ஸ்ரீலங்காப்படைகளின் ஆக்கிரமிப்பு அல்லது நில அபகரிப்பு நடவடிக்கையின்போது அவ்வாறானதோர் அறிவித்தலை அரசாங்கம் மக்களுக்குத் தெரிவித்திருக்கவில்லை. படை நடவடிக்கை உக்கிரமடைந்தபோது, மக்கள் பாரிய சிரமங்களின் மத்தியில் காட்டு வழியினூடாக மட்டக்களப்பு நகருக்குள் வந்தனர். இந்த நிலையில்தான,; விடுதலைப்புலிகள் வாகரையில் இருந்து பின்வாங்கும் முடிவினை மேற்கொண்டனர். விடுதலைப்புலிகள் முற்றாக பின்வாங்கிய பின்னர் உள்நுழைந்த படையினர் மக்களற்ற நகரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை நாம் எல்லோரும் அறிந்த விடயம். வாகரை மக்களை ஒரு மாதத்திற்குள் மீளக் குடியேற்றம் செய்வோம் என சூளுரைத்த ஸ்ரீலங்கா அரசு, இன்றுவரை மக்களை குடியேற்றவில்லை என்பது அப்பட்டமான உண்மை.மாறாக, சிங்களப் படைகள் வாகரையில்; பரந்துபட்ட அளவில் தற்போது நிலைகொண்டுள்ளனர். ஸ்ரீலங்காப் படைகளின் பிரச்சார வார்த்தைகளில் கூறுவோமேயானால், வாகரை மக்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றி விட்டோம், புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதேயாகும். இந்தப் பிரச்சார உத்தி தென்பகுதி சிங்கள மக்களையும் இனவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்கு பெரிதும் உதவியிருக்கின்றது. வாகரையில் செயற்படுத்திய அதே தந்திரோபாயத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி செயற்படுத்துவதற்கு அரசு தீர்மானித்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி பாரிய பல்குழல் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டது. மக்களை தொடர்ந்தம் ஒருவகையான மன அழுத்தத்திற்குள் கொண்டுசெல்வதற்கு ஸ்ரீலங்கா அரசின் படை வல்லுநர்கள் முடிவுசெய்தனர். இந்தவேளையில், விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நகர்வானது ஸ்ரீலங்கா அரசினை மிகவும் ஒரு இக்கட்டான ஒரு நிலைக்குள் தற்போது தள்ளியிருக்கின்றது. ஸ்ரீலங்காப் படைகள் பாரிய மனிதப் படுகொலையை ஆரம்பிப்பதற்கு முன்னராக, மக்களை இடம்பெயர வைத்தனர் புலிகள். அன்று, யாழ்குடா மக்களை வன்னிப் பகுதிநோக்கி நகர வைத்த புலிகள் இன்று மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி நகர வைத்துள்ளனர். இந்த விடயம் எல்லோருக்கும் வியப்பாக இருக்கலாம். ஆனால், புலிகளின் இந்த நகர்வு அரசாங்கத்தினை இக்கட்டான ஒரு சூழ்நிலைக்குள் தள்ளியிருக்கினறது. மட்டக்களப்பு மக்களை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றப்போவதாக பிரச்சாரப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்காப் படைகளின் போர் முனைப்பு தற்போது தொடர்வதா? அல்லது கைவிடப்பட வேண்டுமா? என்ற தொங்குநிலையை அடைந்துள்ளது. ஏனெனில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்த மக்கள் தற்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெருமளவில் சென்று குவிந்த வண்ணம் உள்ளனர். சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் அகதிளாக்கப்பட்டு நகருக்குள் உட்பிரவேசித்துள்ளனர். வடக்கு மாகாணத்தைப் போல் அல்லாது சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறைந்த பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குகின்றது. எனவே, அகதிகளாக இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. எந்த மக்களை விடுவிப்பதாக கூறிக்கொண்டு போரை ஆரம்பித்த ஸ்ரீலங்கா அரசு, அந்த மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்பட்டுள்ளமை உண்மை. இதைவிட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவறற்றின் பிரசன்னம் அதிகமாகவுள்ளமையினால் தனது படை நடைவடிக்கையை நியாயப்படுத்துவதில் அல்லது தொடங்குவதில் தடங்கல்களை ஸ்ரீலங்கா அரசு எதிர்நோக்குகின்றது. இந்த நிலையில்தான், தற்போது வடபோர்முனையின் ஏதாவது ஒரு பகுதியில் ஆரம்பிப்பதற்கான பரீட்சைகளில் ஸ்ரீலங்காப் படைகள் ஈடுபட்டுள்ளனர்.
Saturday, March 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.