[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007] மட்டக்களப்பில் புல்லுமலைப் பகுதியில் இருந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியின் மேற்குப்பகுதி முனையான புல்லுமலையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பு அதிரடிப்படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலுடன் நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தி படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தியதுடன் அவர்களை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்தனர். இதில் சிறப்பு அதிரடிப்படையினரின் 6 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 20 சிறிலங்கா அதிரடிப்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பிகே எல்.எம்.ஜி- கோல்ற் கொமாண்டோ உட்பட்ட துப்பாக்கிகளும் ஆர்.பி.ஜிக்களும் என 20-க்கும் அதிகமான ஆயுதங்களும விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளையில் படுவான்கரையின் தென்பகுதியில் உன்னிச்சைப் பகுதியில் முன்னகர்வை மேற்கொண்ட படையினருக்கு எதிரான தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிப்பதாவது: சிறிலங்காப் படையினரின் தொடர் எறிகணை வீச்சால் மட்டக்களப்பு நகரும் படுவான்கரைப் பகுதிகளும் அதிர்ந்த வண்ணம் உள்ளன. மட்டக்களப்பு நகர மத்தியில் உள்ள வெபர் அரங்கு மற்றும் படைத்தளங்களில் உள்ள ஆட்டிலெறிகள், மோட்டார்கள், பல்குழல் எறிகணை செலுத்திகள் இடைவிடாது தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றன. இதனால் மட்டக்களப்பு நகரம் தொடர்ந்து அதிர்ந்த வண்ணமுள்ளது. இதனால் வெபர் அரங்கிற்கு அருகில் உள்ள வின்சென்ற் மகளிர் பாடசாலையில் 6 மாணவர்கள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர். இவர்கள் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து எறிகணைத் தாக்குதலால் பாடசாலை நடத்தப்பட முடியாதிருப்பதாக குறிப்பட்டு பாடசாலையை விட்டு மாணவிகளை வீடு செல்லுமாறு பாடசாலை அதிபர் பணித்தார். இதேபோல் மட்டக்களப்பு மத்திய கல்லூரியும் மூடப்பட்டது . இதேவேளை படுவான்கரையின் மக்கள் வாழ் கிராமங்களில் செறிவாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான கிராமங்கள் பயிர்செய் நிலங்களில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன. படுவான்கரைக்குள் மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். மட்டக்களப்பில் சகல செல்லிடப்பேசி இணைப்புக்களும் சிறிலங்காப் படையினரால் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் தொலை அலை இணைப்பு தொலைபேசிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. படுவான்கரையில் மக்கள பெரும் அவலத்துக்குட்பட்டுள்ளனர். புதினம்.கொம்.
Friday, March 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.