Saturday, March 24, 2007

மன்னாரில் தமிழர் புனர்வாழ்வுக்கழக வாகன அணிமீது கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி- 4 பேர் படுகாயம்.

[சனிக்கிழமை, 24 மார்ச் 2007] மன்னார் பெரியமடுப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிவாரணப் பணி வாகனம் மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுப் பணியாளர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். வாகனமும் முற்றாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் பெரியதம்பனைப் பகுதியில் இருந்து பெரியபண்டிவிரிச்சான், சின்னப்பண்டிவிரிச்சான் மற்றும் மடுப்பிரதேசத்தை அண்டிய மக்கள் குடியிருப்புக்களை நோக்கி, சிறிலங்காப் படைகளால் நேற்று முன்தினத்தில் இருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட படை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்துகொண்டிருந்த மக்களை மீட்டு, அவர்களுக்கான நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனர்த்த முகாமைத்துவப்பிரிவுப் பணியாளரான முத்துராசா அருளேஸ்வரன் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவி நிறைவேற்றுப் பணிப்பாளரான வடிவேல் இரவிச்சந்திரன் வெளிநாட்டுப்பிரிவின் திட்டப் பணிப்பாளர் சீனித்தம்பி பரமேஸ்வரன் அக்கராயன் அபிவிருத்தி நிறுவனப் பணிப்பாளரான செல்வரட்ணம் நிக்சன் மன்னார் மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவிப் பணிப்பாளரான தேவசகாயம்பிள்ளை மத்தியூஸ் ஆகியோர் படுகாயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரிய தம்பனைப் பகுதியில் இருந்து பெரியபண்டிவிரிச்சான், சின்னப் பண்டிவிரிச்சான் மற்றும் மடு தேவாலயப் பகுதி உட்பட அதனை அண்டிய மக்கள் குடியிருப்புக்களை நோக்கி எறிகணைகள் மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கப் படைகள் தொடர்ச்சியாக நடத்தி வருவதால் அவ்விடங்களிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து மர நிழல்களிலும் பாதுகாப்பான இடங்கள் தேடி சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதனையடுத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் அவ்விடங்களுக்கு வாகனங்கள் சகிதம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்றிச்சென்று அவர்களுக்கான நிவாரண உதவிகளையும் மேற்கொண்டிருந்தனர். இதன் போதே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிவாரணப் பணி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கப் படைகளின் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் உட்பட ஏனைய பிரிவுகளும் மக்களுக்கான நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளியிட்டுள்ள தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.