[சனிக்கிழமை, 10 மார்ச் 2007] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரை நோக்கி சிறிலங்காப் படையினரால் நடத்தப்படும் பீரங்கி மற்றும் பல்குழல் எறிகணை வீச்சுக்களால் 48 மணிநேரத்தில் கொக்கட்டிச்சோலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து 40,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக சமூகத்தின் கவனத்தை பெறாது மற்றுமொரு மனித அவலத்தை மட்டக்களப்பு சந்தித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி இது தொடர்பாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "சிறிலங்கா இராணுவத்தினர் மட்டக்களப்பின் நகர், வவுணதீவு, செங்கலடி, முறக்கொட்டாஞ்சேனை, கிரான் ஆகிய பகுதிகளில் இருந்து மேற்கொள்ளளும் பீரங்கித் தாக்குதல்களால் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் இருந்து பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த தாக்குதல் பொதுமக்களின் சொத்துக்களுக்கும், விளை நிலங்களுக்கும் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான மோதல்கள் என்ற போர்வையில் சிறிலங்காப் படையினர் பொதுமக்கள் மீது திட்டமிட்டு தாககுதல்களை நடத்தி வருகின்றனர். அனைத்துலக சமூகம் கொழும்பு மீது அழுத்தங்களை பிரயோகித்து இதனை நிறுத்த முன்வரவேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார். "சிறிலங்கா அரசு போரை தொடர்வது, வெளிப்படையாக தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராக தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் சிறிலங்கா முழுவதற்கும் போரை விரிவுபடுத்தியுள்ளது" என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இதனிடையே சிறிலங்கா படையினரால் திறக்கப்பட்ட மூன்றாவது களமுனையான புல்லுமலை மீதான சிறப்பு அதிரடிப்படையினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
Saturday, March 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.