Wednesday, February 28, 2007

'விடுதலைப் புலிகளுக்கும் மகிந்தவிற்கும் தொடர்புள்ளது': ரணில்

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]

"கடந்த அரச தலைவர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது தேர்தலின் இறுதி முடிவுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக" ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறீகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

"வடக்கு மற்றும் கிழக்கில் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தது தான் மகிந்தவின் வெற்றிக்கு காரணம். கடந்த அரச தலைவர் தேர்தலின் போது மகிந்தவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதும் ஏன் மகிந்தவின் சகோதரர்கள் மௌனமாக இருக்கின்றனர்?

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்திருந்ததுடன் நாட்டையும் பிளவுபடுத்தியிருந்தனர். இது தான் மெடமுலனே சிந்தனை. தற்போது நாம் கொண்டுள்ள மகிந்த சிந்தனையில் ஜே.வி.பி மற்றும் கெல உறுமயவிற்கு மகிந்த போர் நிறுத்தத்தை இல்லாது செய்வதாகவும், விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதாகவும் கூறியிருந்தார் ஆனால் மெடமுலனே சிந்தனை அதன் மறுபக்கமாகும்.

முன்னாள் அமைச்சர்களான சிறீபதி மற்றும் மங்கள ஆகியோரை அரச தலைவர் நீக்கியதும் மகிந்தவின் சகோதரர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பினால் தான்.

சிறீபதி, பசில் ராஜபக்ச, மங்கள, ரிரான் அலஸ் ஆகியோர் விடுதலைப் புலிகளுடன் அரச தலைவர் தேர்தலின் போது கலந்துரையாடியதாக முன்பு வதந்திகள் பாவியிருந்தன. ஆனால் அது தற்போது தீவிரமான குற்றச்சாட்டாக மாறியுள்ளது. இது தொடர்பாக அண்மையில் சிறீபதியும் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அந்த அறிக்கையை பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்க மறுத்திருந்தார், எனினும் சுதந்திரக் கட்சிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் பிரதமருக்கு தெரிந்திருக்காமல் இருக்கலாம் என சிறீபதி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மக்களை வாக்களிக்க விடாது தடுத்தது தேர்தல் முடிவுகளை முற்றாக மாற்றியமைத்திருந்தது. மிகக்குறுகிய 180,000 வாக்கு வித்தியாசத்திலேயே மகிந்த வெற்றியீட்டியிருந்தார்.

வடக்கு கிழக்கு மக்களை வாக்களிக்க அனுமதித்திருப்பின் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும். சில சகோதரர்கள் நாட்டை ஆட்சி செய்வதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி பாரிய போராட்டங்களை நடத்தும்" என்றார் அவர்.