Wednesday, February 28, 2007

மடுவில் கிளைமோர் தாக்குதல்: 2 சிறார்கள் உட்பட 4 பேர் காயம்.

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007]

மன்னாரில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 2 சிறார்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

மடுத் தேவாலயத்திலிருந்து ஆண்டான்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மடு தேவாலயத்திலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பரப்புக்கடந்தான் பெரியவயலில் இன்று புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 4 வயதுச் சிறுமியும் 15 வயது சிறுவனும் அவர்களது பெற்றோரும் காயமடைந்துள்ளனர்.

ஹென்றி அந்தோனிமுத்து (வயது 40), அவரது மனைவியான ஹென்றி உச்சித்திரா (வயது 42), அவர்களின் பிள்ளைகளான ஏஞ்சலி சியாமி (வயது 4), ஹென்றி சாம் சுரேந்திரன் (வயது 15) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இவர்கள், உடனடியாக மன்னார் அடம்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மன்னாருக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவினரால் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மடு விளாத்திக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நேற்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் பாடசாலை அதிபர் ஒருவர் கொல்லப்பட்டும் கோட்டக்கல்வி அதிகாரி ஒருவர் காயமடைந்திருந்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற 2 ஆவது சம்பவம் இதுவாகும்.