Tuesday, February 27, 2007

'விடுதலைப் புலிகளை மட்டும் குற்றம் சாட்ட முடியாது': யூனிசெஃப்.


[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007]

சிறார்களை படைகளில் சேர்ப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளை மட்டும் குற்றம் சாட்டமுடியாது என்றும் சிறிலங்காப் படையினரும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் மேற்கொண்டு வரும் சிறார் படைச்சேர்ப்பில் தமது படையினரின் பங்களிப்பு குறித்து வெளிப்படையான விசாரணைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று யூனிசெஃப் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இது தொடர்பில் யுனிசெஃப் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்திருப்பதாவது:

"சிறிலங்காவில் தற்போதும் சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அது தொடர்பான உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு விடுதலைப் புலிகள் உறுதியளித்துள்ளனர். அவர்கள் இன்னும் சில நாட்களில் தங்களின் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

நாம் சில தீர்மானங்களை முன்வைத்துள்ளதுடன் இறுதியான முடிவுக்கும் காத்திருக்கின்றோம். நாம் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறார்களின் படைச்சேர்ப்பை எதிர்க்கிறோம்" என்றார் அவர்.

இது தொடர்பில் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்ததாவது:

"அரசு மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு அரசு திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தமது பிடியை இழந்து வருவதால் அனைத்துலக சமூகத்தை தவறாக வழிநடத்த பல வழிகளை கையாண்டு வருகின்றனர்.

அவர்கள் சில பெண்களை அழ வைத்து தமது பிள்ளைகளை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றுவிட்டதாக வழமை போல் கதைகளை கட்டுவதுடன் படையினரையும் குற்றம் சாட்டுவார்கள்" என்றார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான சு.ப.தமிழ்ச்செல்வனை கடந்த வாரம் கிளிநொச்சி சென்றிருந்த யுனிசெஃப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.