Tuesday, February 27, 2007

தொடர் கிளைமோர் தாக்குதல்: நெடுங்கேணி பிரேதச செயலகத்தின் செயற்பாடுகள் முடக்கம்.

[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007] வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. அண்மையில் நெடுங்கேணி பிரதேச செயலர் பயணம் செய்த ஊர்தி மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதலை நடத்தினர். சாரதி உயிரிழந்ததுடன் பிரதேச செயலர் காயமடைந்தார். பின்பு பிரதேச செயலர் வழமைபோல் பிரதேச செயலகத்திற்கு பணிக்கு வருவதில்லை. இதன் காரணமாக நெடுங்கேணிப் பிரதேச செயலகத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீளக்குடியமர்ந்து வரும் மக்கள், தமது தேவைகளை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. 1997 ஆம் ஆண்டு சிறிலங்காப் படையினர் 'ஜெயசிக்குறு' படை நடவடிக்கை மூலம் நெடுங்கேணிப் பிரதேசத்தினை ஆக்கிரமித்தனர். நெடுங்கேணியை சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்ததால் மக்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர். நெடுங்கேணிப் பிரதேச செயலகமும் சிறிலங்காப் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு 'ஓயாத அலைகள் - 03' நடவடிக்கை மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நெடுங்கேணிப் பிரதேசம் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் நெடுங்கேணி மீட்டெடுக்கப்பட்ட பின்னர் பெருமளவு மக்கள் நெடுங்கேணியில் மீளக்குடியமர்ந்து வருகின்றனர். சிறிலங்காப் படையினரின் ஆழஊடுருவும் அணியினர் நெடுங்கேணிப் பிரதேசத்தில் அடிக்கடி மேறகொள்ளும் கிளைமோர் தாக்குதல் மற்றும் எறிகணை வீச்சுக்களினால் மீளக்குடியமர்ந்து வரும் மக்களின் செயற்பாடுகள் விவசாய முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதினம்.கொம்.