Monday, February 26, 2007

இராணுவ வெறித்தனப் போக்குக்கு எதிராகத் திரளும் சர்வதேச சமூகம்.

[திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007]
மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது இலங்கை இனப்பிரச்சினை. யுத்த நிறுத்த உடன்பாடு எந்நேரமும் முறிந்து போகலாம் என்ற நிலைமை. பிரகடனப்படுத்தப்படாத, "ஈழப்போர் ஐந்து' இப்போது நிழல் யுத்தமாகத் தீவிரமடைந்து வருகின்றது. அது எந்நேரமும் முழு அளவிலான பெரும் யுத்தமாக வெடிக்கலாம் என்ற ஏதுநிலை சூழ்ந்து வருகின்றது. இந்தப் பேரழிவு ஆபத்துத் தவிர்க்கப்படவேண் டும். நீதி, நியாயமான அரசியல் அதிகாரப்பகிர்வுத் திட்டம் ஒன்றை சிறுபான்மையினரான ஈழத் தமிழர் களுக்கு வழங்குவதன் மூலமே இந்தப் பேராபத்தைத் தவிர்க்க முடியும். இந்த உண்மை நிலையை மெய்மை யதார்த்தத்தை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்திருக்கின்றது. அதனால்தான், இனிமேலும் தாமதிக்காமல் நியாயமான தீர்வுத்திட்டத்தை நீதியான அரசியல் யோசனைகளை முன்வையுங்கள் என்ற கடும் அழுத்தத்தை சர்வதேச சமூகம் இலங்கை அரசுமீது செலுத்தத் தொடங்கியிருக்கின்றது. விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் வெல்லலாம் என இலங்கை அரசுத்தரப்பில் ஓர் எண்ணம் மேலோங்கி வருகின்றது. ஆனால் அது சாத்தியமேயல்ல என்ற யதார்த்தத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் புட்டுக்காட்டி யிருக்கிறார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன்மூலம் இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டலாம் என்ற இலங்கை அரசுத்தரப்புச் சிந்தனையோடு தாம் உடன்படவேயில்லை என்பதைத் தூதுவர் பிளேக் தெளிவுபடுத்தியிருக்கின்றார். புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற தென்னிலங்கையின் சிந்தனைப்போக்கு தமிழர்களுக்கு நியாயத்தை உரிய உரிமைகளை வழங்கத் தென்னிலங்கை தயாரில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என சர்வதேசம் கருதுகிறது. புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து, தமிழர்களின் பேரம்பேசும் வலுவை உடைத்த பின்னர், தான் விரும்பிய அரைகுறைத் தீர்வை தமிழர் மீது திணித்து, சர்வதேசத்தையும் ஏமாற்றி, தனது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தைத் தொடர்ந்தும் நிலைநாட்டலாம் எனக் கனவு காண்கிறது தென்னிலங்கை அரசுத் தலைமை. இத்தகைய நப்பாசையில் மாயச் சிந்தனையில் கனவுக்கற்பனையில் அது மூழ்கியிருப்பதால்தான் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு யோசனைத் திட்டம் ஒன்றை முன் வைப்பதை விடுத்து, இராணுவ நடவடிக்கைப் போக்கில் வெகு தீவிரமாக அது செயற்படுகின்றது. ஆனால், இந்தப் போக்கு சரிவராது, வெற்றி தராது என்பதை சூசகமாக உணர்த்துகின்றார் அமெரிக்கத் தூதுவர். சர்வதேசப் பொலிஸ்காரனாகத் தன்னை வரித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் பிரதிநிதி என்ற முறையில், வழமைபோல நியாயமான விடு தலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகளைக் கூட "பயங்கரவாத இயக்கங்களாக'சித்திரிக்கும் வல்லாதிக்கப் போக்கிலிருந்து ஏகாதிபத்தியச் சிந்தனையிலிருந்து தூதுவர் பிளேக்கால் வெளி வர முடியவில்லை. அதன் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை மோசமான பயங்கரவாத அமைப்பாக அவர் வழமைபோன்று விமர்சிக்கின்றார். அதற்கு அப்பால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தென்னிலங்கை கைக்கொள்ளும் அணுகு முறை குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகள் ஊன்றிக் கவனிக்கத்தக்கவை. "சமாந்தரமாக அரசியல் தந்திரோபாய நகர்வு இல்லாமல் இராணுவத் தீர்வு சாத்தியமாகும் என்று நான் நம்பவேயில்லை. பயங்கரவாத முறைகளைப் பயன்படுத்தித் தாக்குவதற்கு குறிப்பிடத்தக்களவு வலிமை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இருக்கின்றது. அதனை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. எனவே இராணுவத் தந்திரோபாயத்துக்காகப் பெரும் விலையைக் கூடக் கொடுக்கவேண்டியிருக்கும்'' என எச்சரித்திருக்கிறார் அமெரிக்கத் தூதுவர். தூதுவர் குறிப்பிடுவதுபோல தென்னிலங்கை தன்னுடைய இராணுவ வெறித்தனம் மிக்க இந்தத் தவறான அணுகுமுறைக்காகப் பெரும் விலையைக் கொடுப்பதற்குத் தயாரா என்பதே கேள்வி. தென்னிலங்கை அரசுத்தலைமையின் இத்தகைய இராணுவத் தீவிரப் போக்கு இப்பிராந்தியத்தின் வல்லாதிக்க சக்தியான இந்தியாவிலும் கடும் ஆட்சேபத்தையும், அதிருப்தியையும் கிளப்பியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து, இப்போது அமைச்சரவையி லிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கும் மங்கள சமரவீர எம்.பி., சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் தாம் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய விவரமான, விலாவாரியான கடிதத்தில் தெளிவாக விளக்கியிருந்திருக்கிறார். அரசியல் தீர்வில் நாட்டமின்றிச் செயற்படுதல், மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்தல், யுத்த தீவிரப்போக்கில் ஈடுபாடு காட்டுதல் ஆகிய காரணங்களினால் இலங்கை அரசு குறித்து புதுடில்லி ஆழ்ந்த அதிருப்தி கொண்டிருப்பதாகவும் இலங்கை அரசின் மேற்படி போக்கை ஆட்சேபித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்ற சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து, இந்தியாவும் இலங்கைக்கு எதிராக சில தடைகளை விதிக்க முற்படலாம் எனவும் கடந்த டிசம்பர் மத்தியில் தாம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்திருக்கின்றார். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் இப்போது பகிரங்கமாகியிருக்கின்றது. இவை சர்வதேச மட்டத்தில் சிந்தனைப் போக்கு, இலங்கை அரசின் யுத்த வெறித்தனத்துக்கு எதிராக ஒன்று திரண்டு வருவதையே காட்டுகின்றன. இராணுவ வெற்றி மாயையிலும்,அடக்குமுறைக் கனவிலும் மூழ்கிக் கிடக்கும் தென்னிலங்கை அரசுத் தலைமைக்கு,இவ்வாறு தனக்கு எதிராகத் திரண்டுவரும் சர்வதேச சிந்தனைப் போக்கின் தாக்கம் குறித்து புரிந்துகொள்ள உணர்ந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. Uthayan