Monday, February 26, 2007

முடங்கிப் போகும் நிலையில் குடாநாட்டு பத்திரிகைகள்.

[திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007]

யாழின்மைந்தன்-

ஒரு நாட்டின் அரசியல் சமூக பொருளாதார எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஆரம்பமாகவும் அடிப்படையாகவும் இருப்பது பத்திரிகைத்துறையாகும். யாழ்ப்பாணத்தில் பத்திரிகை படிக்கக் கூடியவர்கள் ஒரு இலட்சம் பேர் இருப்பதாக மத்திய வங்கியின் சமூக பொருளாதார தரவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு காலத்தில் `தீப்பொறி', சிறிமாவுக்கு வாச்சுப்போச்சு. மக்களுக்கு மூச்சுப்போச்சு அரிசி தந்த அம்மா வரியும் போட்டா சும்மா" என சிந்திக்கும் தலையங்கங்களைப் போட்டு உலகம் முழுவதும் பேசப்பட்டது. உலகின் முதல் தமிழ் பத்திரிகையாக வெளிவந்த உதயதாரகை 166 ஆண்டுகளாக வெளிவரும் யாழ்ப்பாணத்துக்கு அரசாங்கம் பத்திரிகை அச்சிடும் தாளை எடுத்துவர மறைமுகமாக தடை விதித்து வருகின்றது. இது குடாநாட்டில் பணி புரியும் 500 பத்திரிகைத் துறை சார்ந்த ஊழியர்கள் பட்டினிக்கு இட்டுச் செல்லும் செயலாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொண்ணூற்றைந்து சதவீதமான மக்கள் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாகவுள்ளனர். அவர்கள் தினமும் எதனையோ வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென ஆவல் கொண்டவர்களாக இருப்பதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை யாழ்ப்பாணத்தில் இருந்து 1841 முதல் 166 ஆண்டுகள் வரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் பிராந்தியப் பத்திரிகைகள் வெளியிடப்படும் ஒரே மாவட்டமாக யாழ்ப்பாணம் இருந்து வருகின்றது.

இலங்கையின் முதலாவது பிராந்தியப் பத்திரிகையான ஈழநாடு 1958 முதல் 1995 வரையான 37 ஆண்டுகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளிவந்திருந்தது. யாழ்ப்பாண மக்கள் "ஈழநாட்டு"க்கு வழங்கிய ஆதரவு காரணமாக ஆரம்ப காலங்களில் "ஈழநாடு" மனிதபலத்தைக் கொண்டு கையாளும் கால்களாலும் மிதித்து பத்திரிகையை வெளியிட்டிருந்த வரலாறுண்டு.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு காலகட்டத்தில் அந்தனி சிலை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "தீப்பொறி" அடுக்குமொழித் தலைப்புகளைக் கொண்டு தலையங்களை வெளியிட்டு இன்றும் பேசப்பட்டு வருகின்றன. சிறிமாவுக்கு வாச்சுப் போச்சு; மக்களுக்கு மூச்சுப் போச்சு, அரிசி தந்தா அம்மா, வரியும் போட்ட சும்மா" என போட்டு பலரையும் சிந்திக்க வைத்திருந்தன.

ஈழநாட்டின் வெற்றியை அவதானித்த பலர் 1985 க்குப் பின்னர் பல பத்திரிகைகளை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு இன்றைக்கு அது ஒரு தொழில் வழங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளது. தமிழ் மக்களின் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு வலுவூட்டும் ஊடக சாதனமாக உதயன் (1985), ஈழநாதம் (1990), வலம்புரி (1999), யாழ். தினக்குரல் (2002) ஆகிய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் பல்வேறு நெருக்கடிக்குள்ளாகியிருப்பதுடன் பத்திரிகைகளை தினமும் வெளியிட பத்திரிகை அச்சிடும் தாள்களுக்கும் பெரும் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. உண்மை நிலைமையை தெளிவுபடுத்தியும் அரசாங்கம் குடாநாட்டுக்கு பத்திரிகை அச்சிடும் தாளை எடுத்து வருவதற்கு அனுமதி வழங்கவில்லை. அத்தியாவசிய சேவைகள் நாயகம் முதல் பாதுகாப்பு அமைச்சு வரை ஒருவர் மாறி ஒருவர் மறைமுகமாக தடை விதித்து வருகின்றனர்.

தினக்குரல் பத்திரிகை கொழும்பில் வெளியிடப்பட்டபோது "ஆயிரம் மலர்கள் மலரட்டும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆசிரிய தலையங்கம் பத்து ஆண்டுகளைத் கடந்தும் எவ்வளவு பொருத்தம் என்பதை நினைவூட்டுகின்றது. சமாதானத்தையும் அமைதியையும் தேசியத்தையும் நாம் எல்லாம் இலங்கை மக்கள் என்ற உணர்வையும் இந்நாட்டில் வேரூன்றச் செய்ய எத்தனையோ காரியங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது. கால ஓட்டத்தில் இந்த நாடு அரிதான வாய்ப்புகளை தினமும் நழுவவிட்டுக் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சமாதானம் செத்துப்போய் ஜனநாயகம் குற்றுயிராகி ஊசலாடுகிறது. அராஜகங்களின் காரணமாக மக்கள் குரல் நசிந்து போயுள்ள நிலையிலே காலத்தின் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஒரு சுதந்திரமான தேசிய தினசரியாக தினக்குரலையும் கருத்துக்களமாக கணிப்புகளைக் கொண்டு வெளியாகும் வார இதழாகவே ஞாயிறு தினக்குரலையும் நிரம்பிய தேசிய உணர்வுடன் தமிழ் அன்னையின் மலர்க்கரங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

தினக்குரல் அன்று சொன்ன சாசனத்தில் இருந்து இன்றுவரை விலகவில்லை. மாற்றார் மனம் புண்படும் வரை யாரையும் தூற்றவில்லை. யோகர் சுவாமிகள் நான்கு சகாப்தங்களுக்கு முன்னர் கூறியதைப்போல உள்ளதை உள்ளபடியே எழுதுங்கள் ஒரு பொல்லாப்புமில்லை. ஏசுவார்கள் எரிப்பார்கள் அச்சம் வேண்டாம் என்ற தாரக மந்திரத்துடன் ஒரு சகாப்தத்தை கண்டு சேவையாற்றி வருகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தேசியப் பத்திரிகையொன்று தனது பிராந்தியப் பதிப்பை யாழ். தினக்குரல் என மகுடமிட்டு யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைத்தது. அதன் முதலாவது இதழில் உலகுக்குள் குடாநாடு குடாநாட்டுக்குள் உலகம் என்ற தலைப்பில் எழுதிய ஆசிரிய தலையங்கம், யாழ்ப்பாண சமூகத்தின் உணர்வலைகள் அரசியல் பேதங்களுக்கு அப்பால் தேச நலனை முன்னிறுத்தியிருந்தது.

இலங்கையின் பத்திரிகைத்துறை வரலாற்றை பொறுத்தவரை கொழும்பை மையமாகக் கொண்டு வெளிவருகின்றமையே தேசியப் பத்திரிகைகள் என்ற வரைவிலக்கணத்துக்குள் அடக்கப்பட்டு வந்திருக்கின்ற நிலைமைகளின் பின்னணியிலே யாழ். தினக்குரலுக்கு ஒரு தனித்துவம். இலங்கையின் தேசியப் பத்திரிகை ஒன்றின் முதலாவது பிராந்தியப் பதிப்பு என கூறியிருந்தமை பொருத்தமாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையில் இன்று எதைப்படித்தாலும் படிக்காவிட்டாலும் பத்திரிகையொன்றைப் படித்தேயாக வேண்டும் என்ற நிலையிலுள்ளனர். பத்திரிகையொன்றைப் படிக்கவில்லையென்றால் அந்தப்பொழுது இனிமையாக விடியாத பொழுதாகவே போய் விடுவதாக கருதுகின்றனர். 1984 ஆம் ஆண்டு ஈழநாடு வெள்ளிவிழாவையொட்டி வெளியாகிய பத்திரிகையாளன் சஞ்சிகையில் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் ஈழநாடு மக்களின் சர்வகலாசாலை, புதினப் பத்திரிகை புனிதப் பத்திரிகையாக வெளிவர வேண்டும். புதினப் பத்திரிகை மக்களின் சர்வகலாசாலை என்பர். அவர் கூறிய கருத்துகளையொட்டியே யாழ்ப்பாணப் பத்திரிகையாளர்கள் தமக்குத்தாமே சுயதணிக்கை வரம்புக்குள் பத்திரிகைகளின் புனிதத்தைப் பேணி வருகின்றனர். இப்படியாக யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஊறிய மக்களுக்கு உள்ளதை உள்ளவாறு கூறி உண்மையை நிலை நாட்டும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளுக்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் பல்வேறு நெருக்கடிகளையும் நெருக்குதல்களையும் ஏற்படுத்தி வருவது நீண்ட வரலாறாகவே இருந்து வருகின்றது.

ஈழநாடு ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை அது தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. முன்னைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் உள்ளூர் உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து "நியுஸ்பிரின்ட்" இறக்குமதியை தடை செய்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக ஈழநாடு ஸ்தாபகர் கே.சி. தங்கராசு கிழக்கிலங்கை கடதாசிக் கூட்டுத்தாபன தலைவராக இருந்தமையில் அவரது முயற்சியால் "ஈழநாடு" அச்சிடுவதற்கான "நியுஸ்பிரின்டை" கோட்டா முறையில் பெற்று அச்சிட்டு வந்தார். யாழ்ப்பாணப் பத்திரிகைகளுக்கு அடிக்கடி தணிக்கையும் அரச பயங்கரவாதமும் ஜே.ஆர்.ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றிருப்பதாக பத்திரிகை ஆசிரியர்கள் காரணகாரியமின்றி நாலாம் மாடியில் விசாரணைக்குள்ளாகியிருந்தனர். இக் கொடுமை 1977 - 1989 க்கும் இடைப்பட்ட காலத்திலே இடம்பெற்றிருந்தது.

ஈழமுரசும் முரசொலிப் பத்திரிகை நிறுவனமும் 08.10.1987 இல் அமைதிகாக்க வந்த இந்திய அமைதிக்காக்கும் படையினரால் குண்டு வீசி நிர்மூலமாக்கப்பட்டன. முரசொலி ஆசிரியரைத் தேடி வந்த ஆயுததாரிகள் அவரது ஒரே மகனான அகிலனை சுட்டுப் பொசுக்கினர்.

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்காவின் பணிப்புரைக்கமைய 31.05.1981 இல் ஈழநாடு நிறுவனம் எரியூட்டப்பட்டது. பின்னைய காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு பத்திரிகை அச்சிடும் தாள்களை குடாநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாதளவுக்கு தடை செய்யப்பட்ட பொருளாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது. உதயன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது.பல ஊடகவியலாளர்கள். ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்த நிலையிலும், அரசின் கொடுமைகளினால் யாழ்ப்பாணக்குடாநாட்டில் ஒரு நாளாவது பத்திரிகைகள் வெளிவராமல் இருந்ததாக சரித்திரமில்லை. யாழ்ப்பாணப் பத்திரிகைகள் எப்போதும் உண்மை ,நீதி,நியாயம் போன்றவற்றுக்கு துணை நின்று அரசியல் சமூகத் துறைகளில் எப்பக்கமும் சாராமல் நடுநிலைமை வகுத்து எல்லோருக்கும் சம சந்தர்ப்த்தை வழங்கி சமூக ஒற்றுமை நல்லுறவு நற்பணி வளர பணியாற்றி வருகின்றனர். இதனால் தான் எந்தச் சக்திகளாலும் அழிக்க முடியாததாகவுள்ளது.

ஆனால், பத்திரிகைச் சுதந்திரத்தை மதித்து வருவதாக கூறிக் கொண்டு ஆட்சி புரியும் அசாங்கம் யாழ்ப்பாண மக்களுக்கு உண்மை, நேர்மை, உழைப்பு என்ற தாரக மத்திரத்துக்கு கட்டுப்பட்டு செயல்பட்டுவரும் பத்திரிகை நிறுவனங்களுக்கு பத்திரிகைத் தாள்களை எடுத்து வர அனுமதிமறுக்கப்பட்டு வருகின்றது. சராசரியாக யாழ்ப்பாணத்தில் 35,000 தினசரிகளை வெளியிட்டு வரும் பத்திரிகை நிறுவனங்களுக்கு பத்திரிகை அச்சிடம் தாள்களை எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டால் அரச நிர்வாகத்தின் தகவல்களை கூட மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் நிர்வாக முடக்கல் நிலை உருவாகும். குறிப்பாக, குடாநாட்டில் பணியாற்றி வரும் 500 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்படுவர். இந்நடவடிக்கை திட்டமிட்ட மனித உரிமை மீறலாக சர்வதேசம் உணரும் நிலைக்கு தள்ளப்படாமல் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமென நம்புவோம்.