[ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2007] வெள்ளவத்தையில் சம்பவம்,-கே.பி.மோகன்- தன்னை குற்றப் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி.) பொலிஸ் என அறிமுகப்படுத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒருவர் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தையில் இடம் பெற்றுள்ளது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இந்த நபர் வடபகுதி மக்களை இலக்கு வைத்து சி.ஐ.டி. பொலிஸ் எனக் கூறி நீண்ட காலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.கடந்த 16 ஆம் திகதி இவர் வெள்ளவத்தையில் வைத்து வடபகுதி இளைஞர் ஒருவரை வழி மறித்து தன்னை சி.ஐ.டி. பொலிஸ் எனக்கூறி விசாரித்து சோதனை செய்வது போல் பாசாங்கு செய்துவிட்டு இளைஞனிடமிருந்து 70 ஆயிரம் ரூபா பணத்தையும் அவரிடமிருந்த பெறுமதியான நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதே நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் வெள்ளவத்தை வந்து எவராவது சிக்குவார்களா எனக் காத்திருந்தபோது அவ்வழியில் சென்று கொண்டிருந்த பாதிக்கப்பட்ட இளைஞன் இந்த ஆசாமியை அடையாளம் கண்டு தனது நண்பனுடன் சேர்ந்து அவரைப் பிடித்து நையப்புடைத்த பின்னர் வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்து நடந்தவற்றை கூறி தனது பணத்தையும் நகைகளையும் பெற்றுத்தருமாறு பொலிஸாரிடம் கூறியுள்ளார். குங்குலசூரிய காமினி பெரேரா என்ற இச் சந்தேக நபரை பொலிஸார் இன்று கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிலுள்ள விசேட விசாரணை பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸாரிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சித்தபோதும் பலனளிக்கவில்லை





