Monday, February 26, 2007

தவறு செய்தமை நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கோர தயார் இல்லையேல் ஜனாதிபதி என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்.!!

[திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007]

நான் தவறு செய்துள்ளேன் என்று ஜனாதிபதி நிரூபித்தால் அவரிடம் மன்னிப்பு கோர தயாராக இருக்கின்றேன். ஆனால் நான் தவறு செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்

என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மங்கள சமரவீர அரசியலில் கால் பதித்து 18 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மாத்தறையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பல எதிரிகளின் செயற்பாடுகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டு ஆட்சியை கொண்டு நடத்தினார். எவரையும் எந்த காலத்திலும் பதவி விலக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று சந்திரிகா யாரையும் பதவி நீக்கவில்லை என்பதை கூறிக்கொள்கிறோம்.

நான் பிரதமர் பதவியை விரும்பவில்லை. பிரதமர் என்ற பெயரில் அலரிமாளிகையில் சொகுசாக வாழ்ந்துகொண்டு பாரிய பாதுகாப்புக்கு மத்தியில் வாகனத்தில் பயணிப்பதற்கு நான் விரும்பவில்லை. பிரதமர் பதவி என்னும் போது சற்று அதிகாரங்கள் தேவை. உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பதவியிலிருந்தபோது தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். அதாவது, ஜனாதிபதியின் அதிகாரத்தைவிட பிரதமரின் அதிகாரம் அதிகமாக இருந்தது. வேண்டுமானால் அந்த வகையான நிலைமைக்கும் நாங்கள் முயற்சிப்போம்.

நான் என்ன தவறு செய்துள்ளேன் என்று ஜனாதிபதி எடுத்துக்கூறினால் நான் அவரிடம் மன்னிப்பு கோரத்தயாராக இருக்கின்றேன். ஆனால் நான் தவறு செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்.