[செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2007]
விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் மட்டக்களப்பில் சிறீலங்கா இராணுவத்தின் 23-3 வது பிரிகேடின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஓடுபாதையில் வெளிநாட்டு இராஐதந்திரிகளை அவர்களது பாதுகாப்பு தொடர்பில் விடுதலைப்புலிகளுடன் எதுவித இராஐதந்திர தொடர்புகளை ஏற்படுத்தாது அவர்களை இராணுவ வலயத்தினுள் கொண்டு சென்றதால் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தனது ஆழ்ந்த கவலையையும் மனவருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசின் இச் செயலை அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
அங்கு சென்ற ஐநா சபையின் அலுவலர்களின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.மரியன் டின் அவர்கள் வெளிநாட்டு இராஐதந்திரிகள் ஆட்டிலறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்ததையடுத்து நாம் எமது ஆட்டிலறி தாக்குதல்களை உடன் நிறுத்தியுள்ளோம்.
வெளிநாட்டு இராஐதந்திரிகளை ஆட்டிலறி வீச்செல்லை கொண்ட பகுதிகளில் எதுவித முன்னறிவுப்பின்றி கொண்டு சென்றமை இராஐதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்கா அரசு கொண்டுள்ள அசமந்தப்போக்கு எம்மை மிகவும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வழமையில் வெளிநாட்டு இராஐதந்திரிகள், மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இவ்வாறான யுத்த வலயங்களுக்குள் செல்லும்போது விடுதலைப்புலிகளின் ஐநா மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் விடயங்களுக்கு பொறுப்பானவர்களடம் தெரிவிப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இதனை மட்டக்களப்பில் அசட்டை செய்தள்ளது.
மிகவும் எளிய நடைமுறை சிறீலங்கா இராணுவத்தினரால் மட்டக்களப்பில் அசட்டை செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுடன் வெளிநாட்டு இராஐதந்திரிகளுடனான நல்லுறவை சிதைவடையச் செய்யும் சிறீலங்கா அரசின் இந்த நாசகார செயலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா இராணுவத்தால் வழமையான இந்நடைமுறையை யுத்தப்பிரதேசத்தில் கைக்கொள்ளாமை பாரிய குற்றச்செயலாகும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் செவ்வாய் காலை சிறீலங்கா இராணுவத்தினரின் மீது பதிலடி எறிகணைத்தாக்குதலை நிகழ்த்தியிருந்தனர்.
இதேவேளை அத்தருணத்தில் இரு உலங்குவானூர்திகளில் வெளிநாட்டு இராஐ தந்திரிகள் மட்டக்களப்பின் பிரதான இராணுவ முகாமினுள் தரையிறக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது அமெரிக்க மற்றும் இத்தாலிய தூதுவர்கள் சிறு காயமடைந்தள்ளதாக தெரியவந்துள்ளது.சிறீலங்கா காவல்துறையினர் தரப்பில் ஏழு காவல்துறையினரும் இரு விமானப்படையினரும் காயமடைந்தள்ளனர்.





