Sunday, February 25, 2007

பிராந்தியங்களின் அடிப்படையிலான அரசியல் தீர்வே உகந்தது: இந்தியா.

[ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2007]

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவினால் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திர்வுத்திட்டத்தின் பல முன்னேற்றங்களுடன் கூடிய திட்டத்திற்கு இந்தியா ஆதரவு தர முன்வருவதாக மகிந்த ராஜபக்ச அரசிற்கு இந்தியா தெரிவித்துள்ளது.

சந்திரிகா, அரசினால் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டத்தில் இறைமையுள்ள நாட்டிற்குள் பிராந்தியங்களுக்கு இடையிலான அதிகாரப்பகிர்வு பிரேரிக்கப்பட்டு இருந்தது.

இதில் வாக்கெடுப்புக்களின் அடிப்படையில் வடக்கு - கிழக்கு இணைப்பும் குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்துக்கட்சி குழு கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்வுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் இந்தியா இந்தக் கருத்தை கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

மேலும் அனைத்துக்கட்சி குழுவின் பொரும்பாலான கட்சிகளின் தீர்வுத்திட்டத்தை இந்தியா ஆதரித்த போதும், திஸ்ஸ விதாரனவின் அறிக்கை அதன் வலிமையை குறைத்திருந்தது. மேலதிகமாக குறைக்கப்படும் அதிகாரங்களும் எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் அரசினால் சமர்ப்பிக்கப்படும் தீர்வுத்திட்டத்திற்கு இந்தியாவினதும் அனைத்துலக சமூகத்தினதும் ஆதரவுகள் கிடைக்க வேண்டுமாயின் அது 2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டத்திலும் கூடியதான அம்சங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் என அரசுக்கு கூறப்பட்டுள்ளது.

எனினும் தம்மால் கொண்டுவரப்படும் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.