Wednesday, February 28, 2007

அலரி மாளிகை அருகே கருணா குழுவின் புதிய மறைவிடம்? பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணை.

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007] அதி உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் அமைந்திருப்பதும் ஜனாதிபதியின் வாசஸ்தலமாகப் பேணப்பட்டு வருவதுமான அலரி மாளிகைக்கு அண்மையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றைக் கடந்த வாரம் விலைக்கு வாங்கியுள்ளவர்கள் கருணா குழுவினர் எனவும் இவ்வாறான நிலைமை அலரி மாளிகையின் பாதுகாப்புக்குக் குந்தகமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் தொடர்ந்து இது பற்றி சிங்கள பாதுகாப்புத் துறையினர் பரந்த அளவிலான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அலரி மாளிகைக்குச் சுமார் 500 மீற்றர் தூரத்தில் பாதுகாப்பு முக்கியத்துவமுள்ள பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றையே மேற்படி சர்ச்சைக்குரிய நபர்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விடயம் பற்றி ஞாயிறு லங்காதீபவுக்குத் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்பஇ இவ்வாறு அலரி மாளிகைக்கு வெகுதூரமில்லாத பகுதியில் 100 பேர்ச் நிலப்பரப்புக்கு மேற்பட்ட விஸ்தீரணத்தில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தை கருணா குழுவினர் கடந்த வாரம் விலைக்கு வாங்கிவிட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விமர்சகர்கள் தெரிவிக்கையில்; மேற்படி கட்டிடம் தலைநகரின் பாதுகாப்பு என்ற முறையில் பார்க்கும் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரகசிய நிலையமாகக் கருதப்படலாம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும்இ குறித்த கட்டிடம் எந்த அளவில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி பாதுகாப்பு விமர்சகர்கள் குறிப்பிடுகையில்; தற்போது பாவனையிலிருக்கும் அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட "எலெக்ரோனிக் ஈவ்ஸ் ட்றொப்பின்" எனப்படும் தொலை அவதானிப்பு உபகரணம் ஒன்றை மேற்படி கட்டிடத்திலிருந்து ஏற்ற முறையில் செயற்படுத்தப்படுமானால் அதன் மூலம் குறித்த கட்டிடத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள அலரி மாளிகையில் நடத்தப்படும் பாதுகாப்பு சபைக் கூட்ட நிகழ்வுகள்இ அமைச்சரவைக் கூட்ட நிகழ்வுகள் போன்ற இரகசிய பேச்சுவார்த்தைகளின்போது பேசப்படும் விவகாரங்களை இரகசியமாகவும் தெளிவாகவும் ஒட்டுக் கேட்க முடியுமெனவும் எடுத்துக் காட்டியுள்ளனர். இவை தவிர மேற்படி கட்டடத்திலிருந்து அலரி மாளிகை அமைந்திருக்கும் பகுதியில் எந்தவொரு நிலையத்தை நோக்கியும் இலக்கு எடுக்க முடியுமெனவும் குறித்த பாதுகாப்பு விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மேற்படி சர்ச்சைக்குரியவர்களாகக் கருதப்படும் குழுவினர் அந்தக் கட்டிடத்தை கொள்வனவு செய்துள்ளது சம்பந்தமாக மேலும் வெளியாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப அவர்கள் அதனை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ரூபா 100 மில்லியன் பணத்தொகை கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டு குறித்த கட்டிடம் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. கிழக்கில் மக்கள் ஒரு நேர கஞ்சிக்கு வசதியில்லாத நிலையில் கொழும்பில் கருணா குழுவால் வாங்கபட்ட 4வது வீடு இதுவாகம். நிதர்சனம்