Tuesday, October 15, 2013

மாவீரர் துயிலுமில்லங்கள் மீண்டும் வேண்டும்! வலுக்கின்றன மக்கள் குரல்கள்!!

வடக்கில் படையினரால் அழிக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக மீள அமைக்கவேண்டும் என்ற கோசம் வடக்கினில் என்றுமில்லாதவாறு ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளது.ஏற்கனவே வடக்கு மாகாணசபை தேர்தலினில் முக்கிய பிரச்சார பேசுபொருளாக இவ்விடயமே இருந்திருந்தது.அத்துடன் வெற்றியின் பின்னரான முதலாவது கூட்டமைப்பின் பத்திரிகையாளர் மாநாட்டினில் இவ்விடயம் ஊடகவியலாளர்களினால் கேள்வியாக எழுப்பப்பட்டுமிருந்தது.அப்போது மக்களது மன உணர்வுகளிற்கு மதிப்பளிக்கப்போவதாக சம்பந்தன் கூறியுமிருந்தார்.வடக்கு மாகாணசபை பதவியேற்பிலும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனை சுட்டிக்காட்டியுமிருந்தார்.

இந்நிலையினில் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட  சாவகச்சேரி பிரதேச சபையில் வடக்கில் படையினரால் அழிக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக மீள அமைக்கவேண்டும்  எனும் தீர்மானம் அதிரடியாக நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சபை அமர்வுகள் ஆரம்பமானபோது , குறித்த பிரேரணையை சபை உறுப்பினர் சிறிரஞ்சன் முன்மொழிந்தார்.

“எமது விடுதலைக்காக போராடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வித்தாக வீழ்ந்தபோது அவர்களின் நினைவாகவும் வித்துடல்களை விதைக்கவும் உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை இறுதியுத்தத்தின் பின்னர் படையினர் அழித்து, அவற்றின் மேல் முகாம்களை அமைத்துள்ளனர்.தற்போது எங்களுக்கென வடமாகாண அரசு அமைந்துள்ள நிலையில் எமது இளைஞர்களின் உயிர்த்தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை மீள அமைக்கவேண்டும்” என்று தெரித்தார். இந்தப்பிரேரணைக்கு ஈ.பி.டி.பி உறுப்பினரான ஞானலிங்கம் என்பவர் மட்டும் எதிர்ப்புத்தெரிவித்தார். ஆயினும் மற்றவர்கள் எல்லோரும் ஆதரிக்க தீர்மானம் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.