தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக சுவிஸ் பிரஜை நடராஜா கருணாகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் பிரஜையும் பேர்ண் மாநிலத்தில் தாய் வீடு பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசுரிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்த்தையடுத்து நடராஜா கருணாகரனை விடுதலை செய்தார்.
நடராஜா கருணாகரன் இலங்கை வங்கியுடன் பணமாற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வங்கியின் வேண்டுகோளையடுத்து, இலங்கை வந்து இன்டர் கொண்டினன்ட் ஹோட்டலில் தங்கியிருக்கையில், 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட கருணாகரன் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா நடராஜா கருணாகரனின் கைதும் தடுப்புக் காவலும் சட்டரீதியற்றதென உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து, 2007ம் ஆண்டு தை மாதத்திற்கும் மார்கழி மாதத்திற்கும் உட்பட்ட காலப்பகுதியில் அரச விரோத எல் ரீ ரீ ஈ இயக்கத்திற்கு 228 மில்லியன் ரூபா நிதி உதவி பெற்றுக் கொடுத்து அவ் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு உடந்தையாய் செயல்பட்டதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கூடிய 2(1) (ஏ) பிரிவின் கீழ் குற்றச் சாட்டுப் பத்திரம் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2013ம் தை மாதம் 11ம் திகதி தாக்கல் செய்யப்பட்டது
2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28.29ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் சட்டமா அதிபரினால் அரச சாட்சிகளாக நடராசா கருணாகரனிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸ் அதிகாரி ஜகத் பொன்சேகா குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மொழி பெயர்த்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சியாப்டீன் பொலிஸ் தட்டெழுத்தாளர் லலிதா ஆகியோர் சாட்சியமளித்தனர்.
2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28.29ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் சட்டமா அதிபரினால் அரச சாட்சிகளாக நடராசா கருணாகரனிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸ் அதிகாரி ஜகத் பொன்சேகா குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மொழி பெயர்த்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சியாப்டீன் பொலிஸ் தட்டெழுத்தாளர் லலிதா ஆகியோர் சாட்சியமளித்தனர்.
இந்த சாட்சிகள் எதிரி தரப்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணியினால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நடராசா கருணாகரன் சுயவிருப்பத்தில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகாவிற்கு வழங்கியதாக அரசு தரப்பினால் முன் வைக்கப்பட்ட முக்கிய சான்றான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதா அல்லது பொலிஸ் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்புக் காவல் கைதியான நடராசா கருணாகரனின் சுயவிருப்பமின்றி பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலமா என்பதற்கான உண்மை விளம்பல் விசாரணையின் தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸ் அத்தியட்சகர் இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை எதிரி சுயவிருப்பத்தில் தனக்கு வழங்கியதாக சாட்சியமளித்துள்ள போதிலும் எதிரி தரப்பு சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையில் பொலிஸ் அத்தியட்சகரின் சாட்சியத்தில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படுவதற்கு முன்னரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னரும் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் சியாப்டீன் எதிரி தமிழில் கூறியதை சிங்களத்தில் பொலிஸ் அத்தியட்சகருக்கு; மொழி பெயர்த்ததில் பல குறைபாடுகள் காணப்படுகின்றமையை சுட்டிக்காட்டினார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னர் பதிவின் இறுதியில் மொழி பெயர்ப்பாளர் சியாப்டீன் மொழி பெயர்த்ததாக ஒப்புறுதிப்படுத்தி கையொப்பம் இடவில்லை என்பதையும் எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணையில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
15 வருடங்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவில் கடமையாற்றி 50 மேற்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய மொழிபெயர்ப்பாளர் சியாப்டீன் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மொழி பெயர்த்ததாக ஒப்புறுதிப்படுத்தி கையொப்பம் இடாமை சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
தட்டெழுத்தாளரான லலிதா குறுக்கு விசாரணையில் பொலிஸ் அத்தியட்சகர் கூறியவற்றை தான் தட்டெழுத்து செய்ததாக கூறியுள்ளாரேயன்றி எதிரி கூறியவற்றை தட்டெழுத்து செய்ததாக கூறவில்லை சட்டரீதியாக இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
அரச தரப்பு சாட்சிகளது சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றைவையாக காணப்படுகின்றமையால் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்து எதிரியை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
எல் ரீ ரீ ஈ இயக்கத்திற்கு நிதி உதவி அளித்ததாக இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் நிரபராதி என வாதாடப்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்த முதல் வழக்கு இந்த வழக்காகும்.


0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.