Saturday, August 31, 2013

வடமாகாணத்தில் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவ தலையீடு அதிகரித்துள்ளது!- கபே குற்றச்சாட்டு


வடக்கு மாகாணத்தில் அதிகளவான இராணுவத்தினரும், பொலிஸாரும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நிலைகொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே, தேர்தல் உள்ளிட்ட சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் தலையீடு அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
கபே அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.நகரில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
தேர்தல் உள்ளடங்கலான சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் பொலிஸார் மட்டுமே ஈடுபட முடியும். அதில் இராணுவத்தினர் ஈடபட முடியாது. அவர்களுக்கு அதிகாரமும் கிடையாது. ஆனால் இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவதாக நாம் அறிகின்றோம்.
மேலும் ஒரே நாளில் 3 மாகாணங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
இரு சம்பவங்கள் ஆயுத முனையில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
இந்தச் சம்பவங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நிலவியிருந்த அமைதியான சூழலை முழுமையாக சீர்குலைத்திருப்பதாக நாம் நம்புகின்றோம்.
வேட்பாளர்கள் ஆயுதங்களுடன் மக்களைச் சந்திக்கச் செல்ல முடியாது. அனுமதிப் பத்திரத்துடனும், அனுமதிப்பத்திரம் இல்லாமலும் வேட்பாளர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் அனைத்தும் களையப்பட வேண்டும்.
வேட்பாளர்கள் சட்ட ரீதியாக பெறக்கூடிய பாதுகாப்புடன் மட்டுமே மக்களைச் சந்திக்கச் செல்ல வேண்டும்.
சாவகச்சேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரை ஆயுதமுனையில் அச்சுறுத்தியதாக எமக்கும், பொலிஸாருக்கும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறு மேற் கொள்ளப்பட்டிருந்தால் சாவகச்சேரி சம்பவம் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை.
மேலும் சாவகச்சேரி சம்பவத்திலும் உரிய முறையில் நீதி விசாரணை நடைபெற்றிருக்கவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொலிஸார் நடந்து கொள்ளவேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் வடக்கில் போட்டியிடும் 4 பிரதான கட்சிகளும் தேர்தல் வன்முறையில், அல்லது தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
அவ்வாறு நடந்து கொண்டு வாக்காளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் வேட்பாளர்கள், கட்சிகள் ஈடுபடவேண்டாம் என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் வடக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் வேட்பாளர்களுக்கான சுவரொட்டி ஒட்டுதல், பதாகைகளை எழுதுதல் போன்ற நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளதுடன், வாக்காளர் பட்டியல்களுடன் இராணுவம் வீடுவீடாகச் செல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.