Saturday, September 14, 2013

அரசினது அழுத்தங்களிற்கு அடிபணியாதீர்கள்! அரச பணியாளர்களிடம் சுரேஸ் கோரிக்கை!!


வடக்கு மாகாணசபைத்தேர்தலில் ஆளும் தரப்பின் நிர்ப்பந்தங்களிற்கு அடிபணிந்து அரச பணியாளர்களை சோரம் போகவேண்டாமென கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தினில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் அவர் தெரிவிக்கையினில் வடக்கு மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறப்போவது நிச்சயமானது.அவ்வகையினில் தற்போது தேர்தல் மோசடிகளினில் ஈடுபடுபவர்கள் பகிரங்கமாகவே அடையாளப்படுத்தப்பட்டுவருகின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் மீது வடக்கு மாகாணசபையின் துறைசார் விசாரணைகள் நடைபெறும்.இதனை நான் அவர்களை மிரட்டுவதற்காக சொல்லவில்லை.ஆலோசனையாகவே கூறுகின்றேன்.இன்று யாழ்.மாநகரசபையின் ஈபிடிபி முதல்வர் யோகேஸ்வரியினது பணிப்பின் பேரினில் பெருமளவிலான பணியாளர்கள் கடமை நேரம் தேர்தல் கடமைகளினில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று ஈபிடிபி வேட்பாளர்களிற்கு ஆதரவு கோரும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். நல்லூர் மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் இவர்கள் பிரச்சாரங்களினில் ஈடுபட்டிருந்தனர்.

அதே போன்று தெற்கிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள அதிகாரிகள் மேற்பார்வையினில் உள்ளுர் சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் அண்மையினில் நியமனம் செய்யப்பட்ட பயிலுநர் பட்டதாரிகள் கல்வி அமைச்சின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் சிற்றூழியர்களென பலரையும் அச்சுறுத்தி தேர்தல் பிரச்சாரத்தினில் ஈடுபடுத்த முயற்சிகள் நடக்கின்றன. அரச பணியாளர்கள் என்ற வகையினில் தங்களிற்கென ஒதுக்கப்பட்ட கடமைகளையே நீங்கள் முன்னெடுங்கள்.ஆளுநரோ அமைச்சரோ பணித்தாலும் நீங்கள் பயம் கொள்ள தேவையில்லை.உங்களது கடமைகளிற்கு மேலதிகமாக பணிக்கப்படும் கடமைகளை ஆற்றாது விடுவதன் ஊடாக நீங்கள் தண்டிக்கப்பட்டால் அதனை நீதிமன்றினுடாகாப்பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

பத்திரிகையினில் செய்திக்கதையொன்றிற்காக பிரபாகரனது படம் பிரசுரிக்கப்படுவது குற்றமல்ல. புலிகளிற்குத்தான் தடை. பிரபாகரனது படத்திற்கல்ல. அரச பத்திரிகைகள் எவையுமே பிரபாகரனது படம் அச்சிடாது வெளிவருதில்லையென தெரிவித்த அவர் குறித்த பத்திரிகை கட்சிப்பத்திரிகையல்ல எனவும் குடாநாட்டு நாளிதழொன்றினது இலவச இணைப்பேயெனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட 40 இளைஞர்களினில் 36 பேர் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் நால்வர் நீதிமன்றினில் ஆஜர்படுத்த தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.