மரணங்கள் வலி மிக்கவை, வேதனைகள் நிறைந்தவை, குடும்பத்தில் பலத்த இழப்புக்களை உருவாக்குபவை. ஆனாலும் சிலரது மரணம் அவரது உறவுகளையும், நட்பு வட்டத்தையும் தாண்டிப் பல அதிர்வுகளை உருவாக்கி விடுகின்றன.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனுக்கான ஆசைகளே விஞ்சியிருக்கும். இறுதியாக என்ன ஆசை என்று கேட்டாலும், தனக்குப் பின்னரான தன் உறவுகளுக்காகவே அவனுக்குக் கேட்கத் தோன்றும். ஐயா மணிவண்ணன் அவர்கள் தனக்கான ஆசையாகத் தமிழினத்தின் விடுதலையையே யாசித்துள்ளார். தமிழீழத் தேசியக் கொடியினைத் தன்மீது போர்த்தச் சொல்லிச் சென்றுள்ளார்.
ஈழத் தமிழர்கள் தங்கள் தேசியக் கொடியினை மனப் பிரமிப்பின் உயரத்தில் எப்போதும் பறக்கவிட்டுள்ளார்கள். உலகத் தமிழினத்தின் அடையாளமாகவே புலிக்கொடி புனிதம் அடைந்துள்ளது. அதனால், ஐயா மணிவண்ணன் அவர்கள் தான் போகும் தருணத்திலும் புலிக்கொடியுடனேயே புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐயா மணிவண்ணன் அவர்களது தமிழ்ப் பற்றும், தமிழ்த் தேசிய உணர்வும் பிரமிக்கத் தக்கது. அவர் தமிழீழ விடுதலைக்கான பல கனவுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தார். அதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தியும் வந்துள்ளார். விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்கால் களத்தில் வீழ்ச்சியுற்றபோது அவர் நொருங்கியே போனார்.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் பலரும் முகம் மாறி, திசைக் குருவிகளாகப் பறந்த போதும் ஐயா மணிகண்ணன் அவர்கள் தமிழ்த் தேசியத்தின் தலை மகனின் பாதையில் தொடர்ந்து பயணித்தவர். ஒரு சமூகப் போராளியாக உருவானவர், ஒரு விடுதலைப் போராளியாகத் தன் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்.
அவரது மறைவு உலகத் தமிழர்களை உலுக்கியது போலவே எம்மையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், தமிழீழ வரலாற்றில் ஆழமான பதிவினை உருவாக்கியுள்ள அந்த மாமனிதனின் கனவினை நோக்கிய எமது பயணத்தை அவரது நினைவுகளுடன் தொடர்வதே அவருக்கான எமது அஞ்சலியாக அமையும்.
அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த கவலையினைத் தெரிவிப்பதுடன், அவரது வாழ்தலைத் தலை சாய்த்து வணங்குகின்றோம்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழீழ மக்கள் பேரவை- பிரான்சு


0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.