Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!

Sunday, June 16, 2013

இலங்கை வரலாற்றின் துன்பியல் கதையைச் சொல்லும் செய்மதி ஒளிப்படங்கள்


'ஒளிப்படம் ஒன்று ஆயிரம் அர்த்தங்களைக் கூறுகிறது' என்பது பழமொழி. Google Earth லிருந்து எடுக்கப்பட்ட இரு செய்மதி ஒளிப்படங்களைப் பயன்படுத்தி, சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை ஒரு ஊடகவியலாளரால் கூறமுடியும்.

Groundviews என்கின்ற இணையத்தளத்தின் நிறுவக ஆசிரியரான சஞ்சான ஹொற்றற்றுவ Sanjana Hattotuwa நவம்பர் 2012ல், பல்வேறு திகதிகளில் எடுக்கப்பட்ட செய்மதி ஒளிப்படங்களைக் காண்பிக்கின்ற Google Earth time slider ஐ பயன்படுத்தி, சிறிலங்காவில் அமைக்கப்பட்டு பின்னர் மூடப்பட்ட அகதி முகாங்களைக் காட்டுகின்ற ஒளிப்படங்களைக் கண்டறிந்தார்.


சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் உள்ள நீரேரி ஒன்றுக்கும் கடற்பகுதி ஒன்றுக்கும் இடையிலான பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்ததை இந்த இரு ஒளிப்படங்களும் காண்பிக்கின்றன.

இதில் ஒரு ஒளிப்படமானது சிறிலங்காவில் போர் முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் அதாவது மார்ச் 2009ல் எடுக்கப்பட்டிருந்தது. இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியை 'ஒன்றுக்கும் பயனற்ற, தரிசான பாலைவனப் பகுதி' என ஆசிரியர் ஹொற்றற்றுவ விபரித்துள்ளார்.

"2009ன் முதல் ஐந்து மாதங்களில் இந்தப் பகுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மனித உரிமைக் கண்காணிப்பகம் அல்லது அனைத்துலக மன்னிப்புச் சபை போன்றவற்றால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலம் அறிந்துகொள்ள முடியும். இதேபோன்று இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட செய்மதி ஒளிப்படங்களைப் பயன்படுத்தி போரின் போது என்ன நடந்தது என்பதை தெளிவாகப் பார்க்க முடியும். இதனை 'கூகிள் ஏர்த்தில்' பார்க்கும் போது மனம் சில்லிடுகிறது. இது பயங்கரமானது" என ஹொற்றற்றுவ Journalism.co.uk இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் தொடர்பாக காணொலி ஒன்றை வெளியிட்டு விருது பெற்ற சனல் 04 தொலைக்காட்சி சேவையின் ஆவணத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த ஒளிப்படங்கள் மிகப் பரிச்சயமாக இருக்கும்.

கடந்த வாரம் பாங்கொங்கில் நடைபெற்ற 'உலக ஊடக ஆசிரியர் சங்கத்தின் - World Editors Forum கருத்தரங்கின் போதே ஹொற்றற்றுவவிடம் நேர்காணல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கூகிள் ஏர்த்தைப் பயன்படுத்தி ஒளிப்படங்களைத் தேடிய போது சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான நான்கு சம்பவங்களை அறியமுடிந்ததாகவும் இதனால் தான் அதிர்ச்சியுற்றதாகவும் 'உலக ஊடக ஆசிரியர் சங்கத்தின்' கருத்தரங்கில் உரையாற்றிய ஹொற்றற்றுவ தெரிவித்திருந்தார்.

"இவ்விரு செய்மதி ஒளிப்படங்களில் ஒன்றில், போர் இடம்பெற்ற பிரதேசத்தில் குண்டுகள் துளைக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்த ஒளிப்படத்தை வைத்து யார் இதற்குப் பொறுப்பு என்பதை தெளிவாக வரையறுக்க முடியாது. அதாவது யார் யாரை எப்போது சுட்டார்கள் என்பதை தெளிவுபடுத்துவது சாத்தியமற்றதாகும்" என ஹொற்றற்றுவ மேலும் தெரிவித்துள்ளார்.

"ஒரு நாட்டின் அண்மைய வரலாறு தொடர்பான உண்மையை கூகிள் ஏர்த் தெளிவுபடுத்துகின்றது. இது மிகவும் பயன்பாடான கருவியாக உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.

"இரண்டாவது செய்மதி ஒளிப்படத்தில், போரால் இடம்பெயர்ந்த பெருந்தொகையான மக்கள் ஒடுங்கிய நிலப்பகுதியில் தஞ்சம்புகுந்துள்ளதை காணலாம். இதன் மூலம் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தை ஆவணப்படுத்த முடியும்" என ஹொற்றற்றுவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"இவ்விரு செய்மதி ஒளிப்படங்களும் எனது நாட்டின் வரலாற்றுப் பதிவுக்கு ஆதாரமாக உள்ளன. இது மிகவும் வியத்தகு ஆவணமாக உள்ள போதிலும், எதிர்கால சந்ததியினர் இதனைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது போய்விடுமோ என நான் அச்சம் கொள்கிறேன்" என ஆசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செயற்பாட்டாளரும், மக்களுக்கான ஊடகவியலாளரும் எனத் தன்னை விபரிக்கும் ஹொற்றற்றுவ, சிறிலங்காவின் அண்மைய வரலாறானது 'ருவிற்றர்' சமூகத்தளத்தில் ஆவணமாக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார்.

"ருவிற்றரில் நாங்கள் தகவல்களை சேகரிக்கிறோம். ஆனால் அவற்றை நீண்ட காலத்தின் பின்னர் தேடும்போது கண்டுபிடிக்க முடியாதுள்ளது. எடுத்துக்காட்டாக, 2010ல் இடம்பெற்ற ஹெய்ற்றி பூமியதிர்ச்சி தொடர்பான செய்திகளை ருவிற்றரில் இன்று பார்க்க முடியாது. இதனைக் கண்டறிவது பெரும்பாலும் சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது" என ஆசிரியர் ஹொற்றற்றுவ சுட்டிக்காட்டியுள்ளார்.

"இவ்வாறான முக்கிய ஆவணங்களை நாம் சேகரித்து நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தும் விதமாக ஆவணப்படுத்தாவிட்டால், எமது நாட்டின் வரலாறு தொடர்பான தகவல்களை நாம் இழக்க வேண்டியேற்படும். செயற்பாட்டாளன் என்ற வகையில் இவ்வாறான தகவல்களையும், செய்திகளையும் ஆவணப்படுத்த வேண்டியது மிக முக்கியமானதாகும்" எனவும் ஹொற்றற்றுவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Twitter Archiving Google Spreadsheets என்கின்ற கருவியைப் பயன்படுத்தி ஹொற்றற்றுவ சில ருவிற்றர் கலந்துரையாடல்களை ஆவணப்படுத்தியுள்ளார். "இந்தக் கருவியானது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்தக் கருவி மூலம் நாங்கள் ருவிற்றரில் சேகரித்த விடயங்களை ஆவணப்படுத்தி, தேடுதல் மூலம் மீளப்பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் தரவுகளை காட்சிப்படுத்தி வைக்க முடியும். யார் யாருக்கு, எப்போது, ஏன், எதனைக் கூறினார்கள் என்பதை இந்தக் கருவி மூலம் அறிந்து கொள்ள முடியும்" என ஹொற்றற்றுவ விபரிக்கிறார்.

"விமர்சிப்பவர்களை எதிர்க்கின்ற, சுயாதீனமாகச் செயற்பட முடியாத, சகிப்புத் தன்மையற்ற ஒரு நாட்டில்" 2006ல் நிறுவப்பட்ட தனது Groundviews எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பாக இதன் ஆசிரியர் ஹொற்றற்றுவ விளக்கினார். 2013 ஊடக சுதந்திரச் சுட்டியில் 179 நாடுகளில் சிறிலங்காவானது 162வது இடத்தில் உள்ளது.

"இவ்வாறான ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் சிக்கலான விடயங்களை செய்தியாக்கி வெளியிடுவது எவ்வளவு கடினம் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும். தனியொரு குரலாக, ஊடக செயலகம் எதுவுமின்றி, விளம்பரப்படுத்தலின்றி செய்திகளை வெளியிடுவது எனக்கு சற்று இலகுவாக உள்ளது" என ஆசிரியர் ஹொற்றற்றுவ தெரிவித்துள்ளார்.

"இவ்வாறான அண்மைய வரலாற்றுப் பதிவுகளைக் கூறும் கதைகள் தெரியப்படுத்தப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆவணப்படுத்தப்பட வேண்டும். இந்தக் கதைகள் வெளியில் கூறப்படக் கூடிய விதமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்" என ஆசிரியர் ஹொற்றற்றுவ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.