Saturday, May 18, 2013

மே 18 – தமிழ் இன அழிப்பு நாள் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)


icetதமிழர்களின் செங்குருதியில் தேசம் தோய்ந்த நாட்கள், தமிழர்களின் சிதறடிக்கப்பட்ட உடல்கள் வன்னியின் விளைச்சல் புமியில் வீசியெறியப்பட்டன! விசவாயுக்குண்டுகளில் எமது குழந்தைகளும் கருகின! நீதி படுகொலை செய்யப்பட சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்த்தது!
‘புட்டிய இறச்சிக் கடையின் கோரக்காட்ச்சியினைப்’ போல, தமிழர் தாயகத்தில் சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போரின் மனிதப்பேரவலம் காட்சிதருகின்றது என சர்வதேச ஊடகம் ஒன்று, உலகம் சொல்ல விரும்பாத உண்மையைக் கக்கியது. தன்னார்வத்தொண்டுப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஐ.நா பணியாளர்கள் என அனைவரையும் வெளியேற்றி, வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ஒரு சின்னஞ் சிறு நிலப்பகுதிக்குள் இலட்சக்கணக்கான தமிழ்மக்களை இராணுவ முற்றுகை;குள் இறுக்கிவைத்துக்கொண்டு சிங்கள பேரினவாத அரசினால் நரபலி வேட்டையாடப் பட்டார்கள்.
இந்தப் போர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்பை நோக்கமாகக் கொண்ட போரையே நிகழ்த்தி வருகின்றது என்ற உண்மையை விடுதலைப்புலிகள் உலகுக்கு இடித்து உரைத்தபோதும் யார் செவிகளுக்கும் அது விழவுமில்லை. அதனை அவர்கள் காதுகொடுத்துக் கேட்க விரும்பவும் இல்லை! சிங்கள அரசுடன் சேர்ந்து நின்றே ஐ.நாவும் ஒத்து ஊதியது. இழப்புக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துச் சொன்னது. முதலில்7000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊகம் வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபை, தமது கடமையினைச் செய்யத் தவறியதால் 100,000 வரையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
சிங்கள அரசினைப் பாதுகாத்ததில் ஐ.நாவுக்கும் பெரும் பங்குண்டு. இன அழிப்பைத் தடுத்திருக்க்கூடிய அத்தனை வாய்ப்புக்களையும் வேண்டுமென்றே அலட்சியம் செய்துவிட்டு, மனித குலத்துக்கே மாபெரும் தவறினை இழைத்துவிட்டு, இப்போது, தவறு செய்து விட்டோம் எனக் கூறி இனிவரும் காலங்களில் இவ்வாறு நடைபெறாமல் இருக்கப் பார்த்துக் கொளளப் போவதாக ஐ.நா உறுதி கூறுகின்றது.
அப்படியென்றால் அநீதி இழைக்கப்பட்ட எங்களுக்கான நீதி எங்கே?
உங்கள் ‘புகோள அரசியல் சதுரங்க பரிசோதனைக் கூடத்தில்’ பலிக்கடாவாக்கப்பட்ட விலங்குகளா தமிழர்கள்?
அல்லது தமிழர்களின் அழிவு ஒரு பொருட்டல்ல பிற இனமக்களின் உயிர்கள்தான் பெறுமதியானவை என்றா உங்கள் கூற்றை நாம் அர்த்தப்டுத்திக்கொள்வது?
சர்வதேசம் கூறும் வெறும்நம்பிக்கை தரும் வார்த்தைகளோ அல்லது ஐ.நா வின் மனிதவுரிமைகள் அவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களோ எமக்கான நீதியினையோ , விடுதலையினயோ பெற்றுத்தந்துவிடப்போவதில்லை, நாம்தான்அவற்றைப் போராடிப பெற வேண்டும்!
இப்போது நினைத்துப் பார்க்கின்ற போதும் நம்பமுடியவில்லை! 21 ஆம் நூற்றாண்டில் மானிடம் குறித்து உயர்ந்த சிந்தனைகள் செழித்து வளர்ந்த உலகிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? இலட்சக்கணக்கான தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படும் போது அலட்சியமாகவிருந்த ஈவிரக்கமற்ற உலகமா இன்றைய உலகம்? உலகே உனக்கு கண்ணில்லையா? என எம்மால் கதறத்தான் முடிந்தது தடுத்திட முடியவில்லையே?
‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’; என உலக மாந்தர்களையே தன் உறவாக நினைத்து மகிழ்ந்த இனமக்களல்லவா படுகொலை செய்யப்பட்டார்கள்? ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’என்று பாரினில் பசிபோக்கிடும் அறக்கருத்தினை உலகுக்கு கொடுத்த மக்களல்லவா இன்று பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்கிறார்கள்?
அகமும் புறமும் என வாழ்வுக்கு இலக்கணம் எழுதிய மக்களா இன்று நிலமிழந்து தவிக்கிறார்கள்?
புமிப்பந்தெங்கும் எட்டு கோடி தமிழர்கள் பரந்து வாழ்ந்தபோதும் எமக்கென ஒரு நாடு இல்லாமமைதான் இந்தப் பரிதாபநிலைக்கு – இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்ற தேசியத்தலைவரின் வார்த்தைகளை நாம் மறுக்க முடியுமா? ஈழத்தில் தமது தொப்புள் கொடி உறவுகள் படுகொலை செய்யப்படுவது தெரிந்திருந்தும் தமிழகச் சொந்தங்களால் அதனை தடுத்து நிறுத்திட முடியவில்லை. ஏனெனில் முடிவு எடுக்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. இறைமையுள்ள அரசின் சொந்தக்காரர்களாக அவர்களும் இல்லை!
உலகில் சிறுபான்மை இனமான சிங்கள இனம், இறைமையுள்ள அரசு என்னும் ‘உலகத் தகைமைச் சான்றிதளை’ கையில் வைத்துக்கொண்டே அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்துவிடுவதையும் இனப்படுகொலை செய்வதையும் யாரும் தட்டிக்கேட்க்க முடியாது என சவால் விடுகிறது! குற்றமிழைத்த பின்னும் தப்பிக்கொள்ளமுடிகிறது. ‘தமிழீழமே தீர்வு’ என தமிழகச் சட்டசபையில் ஒட்டுமொத்தமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னும் ஏன் நம்மால் அதனைச் செயற்படுத்த முடியவில்லை? ஏனெனில் மானில அரசு தன்னிச்சையாக செயற்படமுடியாது மத்திய அரசுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்கவேண்டும் என்பார்கள். அப்படியென்றால் கோடிக்கணக்கானவர்களாக நாம் இருந்தபோதும் எமக்கென குட்டி நாடொன்றேனும் இருந்தால் மட்டுமே எமது உரிமைகளை நாம் பாதுகாத்திட முடியும் என்ற உண்மையினை சிங்களத்திடம் இருந்து நாம் இனியாவது கற்றுக்கொள்ளவேண்டும்.
தமிழர் தாயகத்தில் தமிழர்களின் மொழி, நிலம் சார்ந்த அடையாளங்களை அழித்து, அபகரிக்கப்பட்ட நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை திட்டமிட்டு உருவாக்கியும் சிங்கள அடையாளங்களை நிறுவுகின்ற வேலைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இவை எல்லாமுமே தமிழர்களை இலங்கைத்தீவீல் இருந்து முற்றுமுழுதாக துடைத்தழிக்கும் இன அழிப்பு நடவடிக்கை என்னும் பெரும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே!
நிலமிழந்த மக்கள் அரசுக்கு எதிராக போராடவும் தலைப்பட்டுள்ளார்கள். வாழ்வதா? சாவதா? என்ற நிலையில் போராடிச்சாவதே மேலானது என்று அவர்கள் தீர்மானித்திருக்கக் கூடும். சுதந்திரதேசத்தின் கனவுகளோடு வாழந்த மக்கள் அடிமையாக எவ்வளவு காலத்துக்குத்தான் அடங்கி ஒடுங்கி வாழக்கூடும்?
2009 தமிழின அழிப்புப் பேரவலத்துக்குப் பின், ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது. ஆனால் ஈழ விடுதலைப்போராட்டம் உலக அரங்கிற்கு இன்னொரு வளர்ச்சி நிலைக்கு எடுத்துவரப்பட்டு உலகத்தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது கோரிக்கைகளை உலகத்தமிழர்கள் அனைவருமே கையில் எடுத்துப்போராடும் நம்பிக்கை தரும் காலமாக இன்று மாறியுள்ளது.
எம்மை படுகொலை செய்தாய் ஆனால் எமது கோரிக்கைகள் இன்னும் உயிர்ப்போடேயே உள்ளனவே அதனை என்ன செய்வாய்? எம்மை புதைகுழியில் புதைத்தாய் எம் தாய் நிலத்தை எங்கு கொண்டு போய்ப் புதைப்பாய்?
மே 18 என்பது மாபெரும்பேரவலத்தை தமிழினம் தன் வரலாற்றில் சந்தித்த நாள், உலகமெங்கும் இந்தத் தினத்தை தமிழின அழிப்பு நாளாக, உலகத் தமிழ் மக்கள், முள்ளிவாயக்கால் இனவழிப்பிலும், இதுநாள்வரையிலும் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவில் ஏந்தி, உலகத்தமிழர்களாகிய நாம் அனைவரும், தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுந்து போராடுவோம் என உறுதி ஏற்க்கும் நாள்!
சுயநிர்ணய உரிமைக்கான எமது அரசியல் போராட்டத்தையும், நீதி கேட்டுப் போராடுவதையும் அதன் இலக்கினை எட்டும்வரை சோர்வின்றி உறுதியுடன் எடுத்துச் செல்வோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக நின்று ஓரே குரலில் போராடுவோம். வீழ்வது அவமானமல்ல எழுந்திராமல் வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்! சுதந்திர தாகம் கொண்ட மக்களாக எழுச்சியோடு போராடுவோம்!
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.