Monday, March 18, 2013

மத்தள ராஜபக்ச விமானநிலைய திறப்பு விழாவில் பௌத்த மத வழிபாடுகள் மட்டும்! ஏனைய மதங்கள் புறக்கணிப்பு


மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைக்கும் வைபவத்தில் அனைத்து மத குருமார்கள் அழைக்கப்பட்டிருந்த போதும் பௌத்த மத வழிபாடுகள் மட்டுமே இடம்பெற்றன. ஏனைய மத வழிபாடுகளுக்கு நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்கப்படவுமில்லை, இடம்பெறவுமில்லை.
ஐனாதிபதியின் இந்து மத மற்றும் இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களின் ஆலோசகர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இவ் வைபவத்திற்கு அழைக்கப்பட்டும் அவர்களுக்கென பௌத்த மத தேரர்கள் வரிசையில் அமர முடியாது எனத் தெரிவித்தும், அவர்கள் சாதாரண பிரமுகர்கள் ஆசனத்தில் ஒதுக்குப்புறமாக அமர்த்தப்பட்டனர்.
 பௌத்த மத வழிபாடுகள் ஆசீர்வாதம் மட்டுமே இடம்பெற்றன என்று ஐனாதிபதியின் இஸ்லாமிய மத விவகார ஆலோசகர் ஹசன் மெளலானா தெரிவித்தார்.
கடந்த 3 வருடங்களாக அரசின் தேசிய வைபவங்களில் 4 மத நிகழ்வுகளும் ஆசீர்வாதமும் நடைபெற்று வந்தன.
முதன்முறையாக இவ் வைபவத்தில் மட்டும் பௌத்த மத நிகழ்வுகளும் ஆசீர்வாதமுமே நடைபெற்றன.
இதற்காக 500 க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அழைக்கப்பட்டு விசேட மேடையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அவர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர்.
ஆனால் கடந்த வருடம் கொட்டாவ, காலி வீதி அதி வேக பாதை திறக்கும் வைபத்தில் சகல மத நிகழ்வுகளும் நடைபெற்று பௌத்த மதத் தலைவர்கள் அமரும் வரிசையில் எங்களுக்கு ஆசனமும் ஒதுக்கப்பட்டதோடு ஐனாதிபதியை ஏனைய மதத்தலைவர்களும் ஆசீர்வதித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் பொதுபல சேனவின் செயலாளர் ஞானதேரர் ஊடக மாநாட்டில் ஒன்றில் பின்வரும் கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அவற்றை அரசு ஏற்று இந்த நிகழ்வில் அமுல்படுத்தியுள்ளதாக தென்படுகின்றது.
பொது பல சேனவின் செயலாளர் தெரிவித்த கருத்தாவது:
இந்த நாடு பௌத்த நாடாகும்.
தேரர்கள் வரிசையில் ஒரே மேடையில் ஏனைய மதங்களின் இந்து மத குருக்களோ, மௌலவிகளோ, கிறிஸ்தவ மத பாதிரியார்களோ அமரக் கூடாது.
இந்த நாட்டில் நடக்கும் தேசிய வைபவங்களில் பௌத்த மத நிகழ்வுகள் மட்டுமே இடம்பெறவேண்டும். எனவும் தெரிவித்திருந்தார்.
அவரின் கருத்தை அரசு இன்று நிறைவேற்றியுள்ளது.
இவ் வைபவத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்கள் தமிழர்களைப் பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிறிஸ்தவ மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பீலிக்ஸ் பெரேரா போன்ற அமைச்சர்களும் மற்றும் முஸ்லிம் நாடுகளின் உயர் ஸ்தானிகர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று திறந்து வைக்கப்பட்ட ராஜபக்ச சர்வதேச விமானநிலையத்தில் துபாயில் இருந்து வந்த அரேபியன் விமானமே முதலில் தரையிறங்கியது.
அவ் விமானத்தில் அராபியர்கள் பெருந்தொகையினர் வந்திறங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.