Monday, March 18, 2013

ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள செந்தமிழன் சீமான் சுவிஸ் வருகை


ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோருவதற்காக நாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ் சென்றுள்ளார்.
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள் உற்சாகமாக மலர்ச்செண்டு, தமிழீழ தேசியக் கொடி போன்றவற்ற வழங்கி வரவேற்றனர்.
மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்க முன்மொழியும் சிறி லங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ள இந்தத் தருணத்தில் அவரின் சுவிஸ் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
அதேவேளை, குறித்த தீரமானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டுமெனக் கோரி தமிழக்கத்தில் மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இன்றைய தருணத்தில் சீமானின் வருகை இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் சீமான் அவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஜெனீவா நகரில் ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள மாபெரும் கவன ஈர்ப்பு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தக் கவன ஈர்ப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணி முதல் 5:30 மணிவரை நடைபெறும்.
முதற்தடவையாக சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்துள்ள செந்தமிழன் சீமான் அவர்களின் வருகை சுவிஸ் தமிழர் மத்தியிலே புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.