Sunday, March 17, 2013

சுப்பிரமணியம் சுவாமியை களமிறக்கி விட்டது யார்?


இந்தியாவில் அரசியல் கோமாளி என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடந்த மாத இறுதியில் திடீரென கொழும்புக்கு வந்திருந்தார். 
அண்மைக்காலத்தில் அவர் கொழும்பு வந்தது இரண்டாவது முறை.
கடந்த ஆண்டு இலங்கை இராணுவம் நடத்திய போர்க் கருத்தரங்கிற்கு சுப்பிரமணியம் சுவாமியை முதல் முறையாக அழைத்து வந்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.
அதன் பின்னர் கடந்த 28ம் திகதி அவர் மீண்டும் கொழும்பு வந்தார்.
அவரை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகமவும் அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவர் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார்.
அதன் பின்னர் தான், சுப்பிரமணியம் சுவாமி இலங்கை வந்த விபரமே வெளியே தெரிய வந்தது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரும் போராட்டங்கள் தீவிரம் பெறத் தொடங்கிய காலகட்டம் அது.
எதற்காக சுப்பிரமணியம் சுவாமி கொழும்பு வந்தார், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் என்ன பேசினார் என்ற விபரங்கள் எதுவுமே அப்போது வெளியிடப்படவில்லை.
மொட்டையாக இருதரப்பு ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக மட்டும், ஜனாதிபதி செயலகம் செய்திக் குறிப்பையும், படங்களையும் வெளியிட்டது.
அப்போது ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.
இலங்கையை சர்வதேச அழுத்தங்களில் இருந்து மீட்பதற்கான ஒரு திட்டம், சுப்பிரமணியம் சுவாமியை மையப்படுத்தித் தயாராகிறது என்பதே அது.
கொழும்பில் இருந்து தமிழகம் திரும்பிய சுப்பிரமணியம் சுவாமி, திருச்சியில் நடந்த விஸ்வ இந்து பரிசத் மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது தனது கொழும்புக்கான பயணம் குறித்த சில விபரங்களை வெளியிட்டார்.
மகிந்த ராஜபக்சவுடன் தன்னால்' மட்டுமே பேச முடியுமென்றும் அவருடன் பேசி தமிழருக்கான தனியான மாநிலத்தை உருவர்க்கி தர முடியுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ராஜீவ் காந்தி - ஜே.ஆர். ஜெயவர்த்தன உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அந்தச் சந்திப்பில் சோனியா காந்திக்கு ஊழல்களில் மிகப் பெரிய பங்கு இருப்பதாக சுப்பிரமணியம் சுவாமி கடுமையாக குற்றம் சாட்டியிருந்ததால் தமிழ்நாட்டு ஊட்கங்கள் அவரது கொழும்பு பயணத்தை அவ்வளவாகக் கணக்கில் எடுக்கவில்லை.
அதன் பின்னர் சுப்பிரமணியம் சுவாமி திடீரென அமெரிக்காவுக்கு போயுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
அவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காகவே வாசிங்டன் சென்றார் என்பது பின்னர்தான் தெரியவந்தது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொபர்ட் பிளேக்கை சந்தித்த சுப்பிரமணியம் சுவாமி சுமார் ஒரு மணி நேரம் பேசியிருந்தார்.
அவரது அந்தச் சந்திப்பின் அடிப்படை நோக்கம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை நீர்த்துப் போக வைப்பதுதான்.
முக்கியமாக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்தக் கூடாது என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.
அதற்கான நியாயங்களை அவர் பிளேக்கிடம் முன்வைத்திருந்தார்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா விரும்பாது என்றும், காஷ்மீர் விவகாரம் தனக்கெதிரான திரும்பும் என்பதால் இந்தியா அதை ஏற்காது என்று ஒரு நியாயத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்து எந்த விசாரணையாக இருந்தாலும் அது உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்கு வசதியாகி விடும் என்றும் அவர் அமெரிக்காவுக்கு பூச்சாண்டி காட்டியிருந்தார்.
இதனால் இலங்கையுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு தீர்மானத்தை முன்வைக்குமாறு அவர் பிளேக்கிடம் கேட்டுக்கொண்டார்.
இவ்வளவு கோரிக்கையையும் இலங்கை அரசின் சார்பிலேயெ முன்வைத்த சுப்பிரமணியம் சுவாமி இவையெல்லாம் தனது தனிப்பட்ட கோரிக்கைகள் என்று குறிப்பிடவும் தயங்கவில்லை.
அசர் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்திருக்காமல் அமெரிக்கா போயிருந்தால் அது உண்மையென்று நம்பலாம்.
காரணம் எதுவும் கூறப்படாத ஒரு சந்திப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நடத்திவிட்டு அவசரமாக அமெரிக்கா போய் இலங்கை அரசுக்கு சார்பாக வேண்டுகோள் விடுத்ததை சுவாமியின் தனிப்பட்ட விருப்பாக கொள்ள முடியாது.
அவர் இலங்கை அரசின் தூதுவர் போன்றே செயற்பட்டுள்ளார். இலங்கை அரசின் சார்பிலேயே பேசியுள்ளார்.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இலங்கை எதிர்க்கும் என்றும் அது குறித்து அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்காது என்றும் இலங்கை கூறிய நிலையில் தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
அரசியல் இராஜதந்திர மட்டங்களில் இவ்வாறு இரட்டை நாக்கு, அல்லது இருநிலை தந்திரோபாயம் கடைப்பிடிக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல.
வெளிப்படையாக பேச முடியாது என்று கூறிக்கொண்டே பின் கதவு வழியாக இணக்கப்பாட்டை எட்ட முயற்சிப்பது வழக்கமான தந்திரம் தான்.
இலங்கை அரசாங்கமும் சுப்பிரமணியம் சுவாமி மூலம் அதையே தான் செய்ய முனைந்தது.
சுப்பிரமணியம் சுவாமி வாசிங்டனில் பிளேக்கை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் அமெரிக்கா தீர்மான வரைபின் பிரதியை வெளியிட்டது.
அதில் அவரது பரிந்துரைகள் ஏதம் இருக்கவில்லை.
ஆனால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் நெருக்கமான அதிகாரிகளுக்கும் இடையில் இதுபற்றி பேச்சுகள் தொடர்வதாகவும் இதில் சுமுக இணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் சுப்பிரமணியம் சுவாமி கூறியிருந்தார்.
தனிப்பட்ட ரீதியாக சுப்பிரமணியம் சுவாமி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தால் இத்தனை விபரங்கள் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
இலங்கை அரசின் விருப்பத்துடன் தான் அவர் வாசிங்டன் சென்றுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
திடீரென சுப்பிரமணியம் சுவாமி இந்த அரங்கினுள் எப்படி இழுத்து வரப்பட்டார். அவரை இழுத்து வந்தது யார்? இந்தக் கேள்விகள் இப்போது எழுகின்றன.
ஜெனிவாவில் முன்வைக்கும் தீர்மான வரைபு குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேசவேண்டும். இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருந்தார்.
இது குறித்து அவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உடன் தனிப்பட்ட முறையிலும் அதிகார பூர்வமாகவும் கலந்துரையாடியுள்ளார்.
கடந்த முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியாவே தலையிட்டு பலவீனப்படுத்தியது.
ஆனால் இம்முறை அவ்வாறு நேரடியாகச் செய்ய முடியாத நிலையொன்று இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் அதற்கேற்றவாறு இலங்கை நடந்து கொண்டிருக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.
அதைவிட வெளிப்படையாக இலங்கைக்குச் சார்பாக நடந்துகொள்ள முடியாத உள்ளக அழுத்தங்களையும் இந்தியா சந்திக்கிறது.
இந்த நிலையில் எப்படியாவது அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு நடத்தி ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றது இந்தியா.
ஆனால் இலங்கையோ நேரடியாக அமெரிக்காவின் காலில் விழத் தயாராக இல்லாத நிலையில் தான் சுப்பிரமணியம் சுவாமி களமிறக்கப்பட்டள்ளார்.
அவரை இந்தக் களத்திற்கு இலங்கை இழுத்து வந்திருக்க வேண்டும் அல்லது இந்தியா கொண்டு வந்திருக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தை விட அமெரிக்காவுடன் இணக்கத்தை ஏற்படுத்தப்படுவதை இந்தியாவே அதிகம் விரும்பிய சூழலில் தான் அவர் உள்நுழைந்தார்.
சோனியா காந்தி மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சுப்பிரமணியம் சுவாமி, மன்மோகன் சிங் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக அதன் சார்பில் இந்த முயற்சியில் ஈடுபட முன்வந்திருப்பாரா என்ற கேள்வி உள்ளது.
மன்மோன் சிங் அரசை ஊழல் அரசு என்று அவர் விமர்சித்தாலும் சோனியா காந்திக்கு ஊழலில் பங்கிருப்பதாக குற்றஞ்சாட்டி வந்தாலும் தீவிர இந்திய தேசிய வாதம் என்று வரும்போது சுப்பிரமணியம் சுவாமி அதையெல்லாம் மறந்து விட்டிருக்கக்கூடும்.
அதைவிட சவுத்புளொக்கில் உள்ள புதுடில்லியின் கொள்கை வகுப்பாளர்களுடன் அவருக்கு நெருக்கம் அதிகம்.
மத்திய அரசில் பலமான தலைவர்கள் இல்லாத நிலையில் சவுத்புளொக்கின் சொற்படியே மன்மோகன் சிங் அரசு செயற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இந்திய அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றது.
சவுத்புளொக்கில் உள்ள கொள்கை வகுப்பாளர்களின் திட்டப்படியே சுப்பிரமணியம் சுவாமி இந்த விவகாரத்தில் தரகராக உள்நுழைக்கப்பட்டிருக்கலாம். 
எதற்காக சுப்பிரமணியம் சுவாமி தெரிவு செய்யப்பட்டார் என்றால் அவருக்கு அமெரிக்காவுடன் நெருக்கம் அதிகம்.
அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தான் அவர் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றிருந்தார்.
அது மட்டுமன்றி நியூயோர்க்கில் ஐநாவில் உதவிப் பொருளாதார அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
அமெரிக்கா உளவு அமைப்பான சிஐஏ யின் முகவர் என்றும் கூட ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டவர்.
அதைவிட விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரோதமான செயற்பாடுகளை இவர் மேற்கொள்பவர் என்பது இவரது மேலதிக தகைமை.
இந்தவகையில் தான் சுப்பிரமணியம் சுவாமி இந்தப் பணிக்க கொண்டு வரப்பட்டார்.
கொழும்புக்கு வந்து இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தி விட்டு அமெரிக்கத் தீர்மானத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்ட பின்னர் சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. அவரது அலுவலகம் உடைக்கப்பட்டது. இதெயெல்லாம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று கருத முடியாது. ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவரது கட்சி தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியையோ சட்டமன்றத் தொகுதியையோ கைப்பற்றக்கூடிய அளவுக்கு பகலமானதல்ல.
ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் பதவியைக் கூட அவரது ஜனதா கட்சியால் வெற்றி கொள்ள முடியாது.
எனவே அரசியல் செல்வாக்கு பறிபோகின்றதே என்று அவர் கவலைப்படப் போவதில்லை.
இன்னொரு விடயம் தமிழ் தேசிய வாதத்துக்கு முற்றிலும் எதிரானவர் என்பதுதான் பலருக்குத் தெரிந்த விடயம்.
ஆனால் அவர் ஒரு தமிழரே அல்ல என்பது பலருக்கும் தெரிந்திராத உண்மை.
இவரது தந்தையான சீதாராமன் சுப்பிரமணியம் மதுரையைச் சோ்ந்தவராக இருந்தாலும் தாய் கேரளா, திருச்சூரைச் சோ்ந்த ஒரு மலையாளி.
இவரது தாய்மொழி தமிழ் அல்ல மலையாளம் தான்.
இவர் திருமணம் செய்து கொண்ட றொக்ஸ்னா என்ற பெண் பார்ஷி இனத்தைச் சோ்ந்தவர்.
சிஎன்என், ஐபிஎன் தொலைக்காட்சியில் மூத்த ஆசிரியராக இருக்கும் சுப்பிரமணியம் சுவாமியின் இளைய மகள் சுகாஷினி ஹைதர், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சல்மான் ஹைதரின் மகன் நதீம் ஹைதரைத் தான் திருமணம் செய்துள்ளார்.
இவ்வாறு பல இனத் தொடர்புடையவரான சுப்பிரமணியம் சுவாமி தனது செயற்பாடுகளில் ஒரு தமிழராக காட்டிக் கொள்வதில்லை.
வேட்டி சட்டைக்கு மேலாக வட இந்தியர்கள் அணியும் அரை கோர்ட்டை அணிந்து தன்னை இந்தியத் தேசியவாதியாக உருவகப்படுத்திக் கொள்பவர் அவர்.
இவரது பல்வேறு செயற்பாடுகளும் இவரை ஒரு அரசியல் கோமாளியாக தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியுள்ள போதிலும், பல்வேறு விடயங்களில் குட்டையைக் குழப்புவதில் வல்லவர் என்பதையும் ஆட்சி மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு திடீர் திருப்பங்களுக்கு காரணமானவர் என்பதையும் மறந்து விட முடியாது.
ஆனாலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் வாசகங்களை அமெரிக்கத் தீர்மான வரைபில் இருந்து நீக்கும் இவரது முயற்சி கைகூடியதாகத் தகவல் இல்லை.
ஆனாலும் அவர், இணக்கப்பாடு ஏற்படும் என்று இன்னமும் நம்புவதாக கூறியுள்ளார்.
இவரை யார் இந்தப் பணியில் களமிறக்கினார்களோ அவர்களின் எதிர்பார்பபை அவரால் ஈடுசெய்ய முடிகிறதோ இல்லையோ, தமிழர்களுக்கு தனிமாநிலம் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறியதை மட்டும் அவரால் நிறைவேற்ற முடியாது.
ஏனென்றால், இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ எந்தவொரு நிர்வாக அலகுகளையும் உருவாக்க முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறிவிட்ட நிலையில் இவரால் எப்படி அதனை நிறைவேற்ற முடியும்?
ஹரிகரன்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.