Wednesday, March 13, 2013

மீண்டும் சூடு பிடிக்கும் அரசின் கேலிக்கூத்துக்கள்!


இலங்கைத்தீவினுள் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது அரச மற்றும் அரச ஆதரவு குழுக்களின் கேலிக்கூத்துக்கள். வழமைக்கு மாறாக இந்தவருடம் சற்று தணிந்திருந்த இந்த கேலிக்கூத்துக்கள் மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட நிலையில் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படுள்ளது.

(12-03-2013) முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியினில் வழமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆள்பிடிக்கும் நடவடிக்கைகளை காலை முதல் படைத்தரப்பு மேற்கொண்டிருந்தது. வழமைபோன்று வீதியினூடாக செல்லும் வாகனங்கள் கூட வழி மறிக்கப்பட்டு பயணிகள் இறக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படனர்.

இந்நிலையில் எதிர்பார்த்த இலக்கினை அடைய முடியாத நிலையில் சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களை கொண்டுவரும் முயற்சில் இறங்கியது பாதுகாப்பு தரப்பு. அதன் பின்பு சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை அவர்கள் வேலை செய்யும் இடங்களில் இருந்து பேருந்துகளில் ஏற்றி கொண்டு சென்று கைதிகளைபோன்று நடாத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில்உள்ள மக்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எனினும் போதிய அளவில் ஆட்களை திரட்டமுடியாது போனமையினால் சிவில் பாதுகாப்பு படையினரை கிளிநொச்சிக்கு பஸ்களில் ஏற்றி சென்று போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவந்தவர்களில் பலருக்கு எதற்க்காக தாங்கள் அழைத்து செல்லப்படுகின்றார்கள் என்றுகூட தெரிந்திருக்கவில்லை. இதுவா அரசு கூறும் நல்லிணக்கம்? வார்த்தைகளில் மட்டும் தேசிய நல்லிணக்கம் என்று பேசிக் கொண்டிருப்பதால் மட்டும் நல்லிணக்கம் ஏற்படாது.

இப்போராட்டத்தினை கிளிநொச்சியின்சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கீதாஞ்சலி ஒழுங்கு செய்திருந்தார். எனவே இதன் தொடற்ச்சியாக ஏனைய அரச ஆதரவு குழுக்களும் தங்களின் அரச விசுவாசத்தை காட்டுவதற்காக இத்தகைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தமிழர் தாயகம் எங்கும் அவர்களினால் முன்னெடுக்கப்படலாம். இதனால் தொடர்ந்தும் சிவில் பாதுகாப்பு படையினர்தான் பாதிக்கப்பட போகின்றார்கள்
வயிற்று பிழைப்புக்காக சிவில் பாதுகாப்பு படையில் வேலைக்கு சென்று இப்படியான ஆர்ப்பாட்டங்களில் கட்டாயப்படுத்தப்பட்டு கலந்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்துள்ளோம் என்று பல இளைஞர் யுவதிகள் கூறியதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தொடர்ந்தும் இவர்கள்தான் பலிக்கடாவாக்கப்பட போகின்றார்கள்.

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களினால் கூறப்பட்ட கோசங்களில் “போர் நடைபெற்ற போது மக்களை அழிப்பதற்கு ஆதரவு வழங்கி விட்டு இப்போது எங்கள் மக்களை நிம்மதியாக வாழவிடாமல் தடுப்பதற்கு முயற்சிக்காதே” என்ற கோசம் முக்கிய இடத்தினை பிடித்ததுடன், பலரையும் திரும்பி பார்க்கவைத்தது. ஏனெனில் சுதந்திரக் கட்சியினரே பொது மக்களை போரின் போது அழித்ததை ஏற்றுக்கொண்டிருந்தனர் இங்கே. போராட்டத்தின்போது போது கலந்துகொண்டிருந்த சிவில் பாதுகாப்பு படையினரும் ஏனோதானோ என்ற மனநிலையில் வெறுப்புடன் காணப்பட்டதுடன் முன்தோன்ற பின்னடித்து கொண்டிருந்தனர்.

இலங்கை அரசு தப்புக்கு மேல் தப்பு செய்துகொண்டிருக்கின்றது. பொதுமக்களை பயமுறுத்தி, வற்புறுத்தி இப்படியான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்வதனால் மேலும் மேலும் நிலமை இறுக்கமடையுமே தவிர அரசின் மீதான அழுத்தங்கள் குறையபோவதில்லை. கடந்தவருடம் ஆரம்பத்திலே தொடங்கப்பட்ட இத்தகைய கேலிக்கூத்துக்கள் இந்த வருடம் சற்று தணிந்திருந்தது.
அதற்க்கான காரணம் அமெரிக்காவுடன் ஏற்ப்பட்ட நேரடி பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம். இலங்கை அரசு சார்பாக சுப்பிரமணியசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததுடன் தனது பழைய பல்லவியை பாட தொடங்கியுள்ளது அரசு.
வழமைக்கு மாறாக பெரும் எண்ணிக்கையில் மக்களை திரட்ட முடியாமல் போனது அரசின் துரதிஸ்டமே. மேலும் வரும் நாட்களில் இப்போராட்டம் என்னும் பெயர்களில் நடைபெறும் கேலிக்கூத்துக்கள் நாட்டின் பல பாகங்களிலும் நடாத்தப்படலாம்.

கடந்தவருடம் போன்று முஸ்லிம் மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்வதில் இம்முறை அரசுசிரமங்களை எதிர் கொள்ளவேண்டி ஏற்படும். ஏனெனில் கடந்த காலங்களில் அதுவும் குறிப்பாக கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களின் உரிமைகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை குறிப்பிடலாம். இருந்தபோதிலும் அரச ஆதரவு குழுக்களின் பண பலம் மற்றும் ஆயுத பலத்தின் மூலமாக நாட்டின் சகல பாகங்களிலும் அடுத்து வரும் சில நாட்களில் ஆர்ப்பாட்டங்களை எதிர்பாக்கலாம்.

தொடற்ச்சியாக நடைபெறும் முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களின் உரிமைகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக அவர்கள் அமெரிக்காவுக்கும் ஜெனீவாவுக்கும் எதிராக திரள்வதற்க்கான வாய்ப்புக்கள் குறைவு. இருந்த போதிலும் பெரும்பான்மை இனத்தினர் ஒன்று திரள்வார்கள்.

இனவாத அரசு அவர்களை இனவாதத்தை ஊட்டி ஊட்டி அவர்களை ஒரு மாயைக்குள் வைத்திருக்கின்றது. போர் குற்ற விசாரணையை பெரும்பான்மை இன மக்களிற்கு எதிரான ஒன்று என்ற மாயைக்குள் இவர்களை வைத்திருக்கின்றது. இப்போர் குற்ற விசாரணை பெரும்பான்மை இன மக்களிற்கு எதிரான ஒன்று அல்ல அது ஆட்சியாளருக்கு எதிரான ஒன்று என்ற உண்மை புரியும் வரை இது தொடர்கதையாக தொடரபோகின்றது.இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் இலங்கை அரசுக்கு கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிவதன் விளைவையே ஏற்படுத்தபோகின்றது.

இங்கு நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயமும் அரசுக்கு எதிராகத்தான் மாறிக்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தொடங்கியுள்ள மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக சர்வதேச ரீதியாக அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளது இலங்கை அரசு.
மாணவர்களின் போராட்டங்கள் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளைக் கூட மத்திய அரசுக்கு நெருக்கடிகளை வழங்கத் நிர்ப்பந்தித்துள்ளது. இந்நிலையில் இதனைத் தணிப்பதற்கு இலங்கைக்கு ஆதரவாக களம் இறக்கப்பட்ட சுப்பிரமணியசுவாமியின் முயற்சிகள் பிசுபிசுத்து போக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்தங்களை தாங்களே காப்பாற்றுவதற்காக எடுக்கும் இறுதி முயற்ச்சியாகவே இதனை அரசியல் விமர்சகர்கள் பாக்கின்றார்கள்.

-புலோலியூரான்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.