Wednesday, March 13, 2013

ஈழத்தமிழர்களின் உரிமையையும் இறைமையையும் வென்றெடுக்கும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது!


அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் நடாத்தப்பட்ட தமிழர் உரிமை மாநாடு, ஈழத்தமிழர்களின் உரிமையையும் இறைமையையும் வென்றெடுக்கும் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக மாற்றமடைந்து வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மார்ச் 1,2,3 ம் திகதி வரை ஜெனிவா நகரில் இடம்பெற்ற இந்த மாநாட்டில், தாயகத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் தமிழ் அரசியல்வாதிகள் கலந்து சிறப்பித்தனர்.
யேர்மனி, கனடா, மொறிசியஸ், தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ், நோர்வே, ஆஸ்திரேலியா, நியூ சீலந்து, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, பிரித்தானியா, பெல்யியம், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த அரசியல்வாதிகள், புத்துஜீவிகள், சிங்கள முற்போக்கு சக்திகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கெடுத்ததுடன், ஈழத்தமிழர்கள் அடக்குமுறையிலிருந்து விடுபட்டு சுதந்திரத்தையும் நீதியையும் பெற்றுக்கொள்வதற்கு தாம் தமது பூரண ஆதரவை வழங்குவோம் என உறுதியுரைத்தனர்.
இம் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாண்புமிகு பற்றிக் பிறவுண் மற்றும் ஜிம் கரியானிஸ் அவர்கள் இலங்கைத் தீவில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதை வலிந்துரைத்ததுடன், தமிழர்களது நீதிக்கான போராட்டத்திற்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் எனவும் தெரிவித்தார்.
உரிமைப் போராட்டத்தில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கும், மரணத்தின் போதும் தமது மண்ணோடு விதையாகிய மக்களுக்கும் அக வணக்கத்துடனும் ஆரம்பமாகிய இரு நாள் அமர்வுகளை கலாநிதி யூட் லால் பெர்னான்டோ நெறிப்படுத்தினார்.
இரண்டாம் நாள் நிகழ்வு மூன்று அமர்வுகளாக இடம்பெற்றது. முதலாவது அமர்வு போர்க் குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான சர்வதேச சுயாதீனா விசாரணை மீதானதாக அமைந்தது. களம், புலம், தமிழகம் மற்றும் சர்வதேச சமூகம் என்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி, அமர்வாளர்கள் பங்குபற்றினார்கள். சர்வதேச சுயாதீன விசாரணைக்கும் ஆதரவளித்தார்கள்.
இரண்டாவது அமர்வில், வெவ்வேறு வடிவங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் இன அழிப்பு தொடர்பாக ஆராயப்பட்டது. மே மாதம் 2009 ற்குப் பிற்பாடு அனைத்துலக சமூகத்தை சார்ந்தவர்களின் பிரசன்னத்துடன் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட் இன அழிப்பு தொடர்பாக ஆழமான கலந்துரையாடலாக இந்த அமர்வு அமைந்ததாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
முதல்நாளின் இறுதி அமர்வாக ஐ.நா சர்வசன வாக்கெடுப்பு: இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்திற்கான முன்னெடுப்பு என்ற விடயப் பொருளை முன்னிறுத்திய அமர்வில், ஈழத்தமிழர்களது உரிமையையும் அவர்களது இறமையும் அங்கீகரிக்கப்படுவதே இலங்கைத் தீவில் நிலையான அமைதிக்கான உறுதிப்பாடாக அமையும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் தமது அரசியல் வேணவாவை தாமே நிர்ணயிக்கும் முகமாக ஐநா கண்காணிப்பில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர்
இரண்டாவது நாள் அமர்வு, அமர்வாளர்களின் அங்கீகாரத்துடன், பங்குபற்றுனர்களினது ஆதரவுடன் ஈழத்தமிழர்களது உரிமையையும் இறைமையையும் நிலைநிறுத்துவதற்காக இறுதியில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் நிறைவடைந்தது.
மூன்றாவது நாள் அமர்வில், பூகோள அரசியல் நலனும் இலங்கைத் தீவும் என்ற விடயம் மையப்பொருளாக அமைந்தது. இதன்போது, பூகோள நலன்களுக்குள் சிக்காமல், ஈழத்தமிழர் உரிமையையும் சுதந்திரத்தையும் எவ்வாறு வென்றெடுப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளையும் சார்ந்தவர்களால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
அமர்வாளர்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மிக விரைவில் தமிழிலும் மற்றும் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும்.
மாநாட்டின் இறுதி நிகழ்வாக, முதலாவது நாள் அமர்வாளர்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாநாட்டில் கலந்து கொண்டோர் தமது நாடுகளில் எவ்வாறு அதற்கமைய அரசியல் வேலைத்திட்டங்களை முன்னகர்த்துவது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, சாதகமான உள்ளீடுகளுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
இம் மாநாட்டின் அமர்வுகளில் கலந்து கொண்டவர்களைத் தவிர, பதினொரு நாடுகளைச் சார்ந்த ஈழத்தமிழர் மக்களவை உறுப்பினர்கள், தாயக தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் GTF, BTF, USTPAC, ATC, Mauritius Tamil Temple Federation (MTTF), Tamil Relief Malaysia போன்ற அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.
மனிதவுரிமை அமர்வுகள் நடைபெறும் இவ் நாட்களில் ஜெனிவாவில் உள்ள அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை காரியாலயத்தில் பிரதிநிதிகள் தங்கி நின்று தொடர்ச்சியாக சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்கள் .
நன்றி
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
தொலைபேசி:NCCT 647 830 7703
Email: media@iceelamtamils.com

March 2013 Geneva conference
ICET_Conference_2013_02 (Small)
ICET_Conference_2013_03 (Small)
ICET_Conference_2013_04 (Small)
ICET_Conference_2013_05 (Small)
ICET_Conference_2013_06 (Small)

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.