Monday, March 25, 2013

மாணவர் புரட்சி – விடுதலையை வென்றெடுக்கும் ,தோற்கடிக்கும் தந்திரங்களும்.


எந்த விடயத்தை யாரின் கையில் கொடுப்பது என்பதை காலமே தீர்மானிக்கின்றது. அந்தவகையில் தமிழ் மாணவர்களின் கையில் காலம் கொடுத்திருப்பது ஒரு சாதாரண பொறுப்பு அல்ல.
அது ஒரு வரலாற்றுப் பொறுப்பு. அந்தப் பொறுப்பு எந்த ஒரு காரணத்தினாலும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் போய்விடக்கூடாது. அவ்வாறான ஒரு வரலாற்றுத் தப்பு நடந்துவிடக்கூடாதென்ற கரிசனையில் இந்தக்குரல் உங்களை நோக்கி வருகின்றது.

ஒரு தீர்மானகரமான இலக்கோடு புறப்படும் போராட்டம் தன்னகத்தே காலவரையறையை துல்லியமாகக் கணக்கிடமுடியாவிட்டாலும் எதிர்நோக்க இருக்கும் சவால்களை உய்த்து உணர முடியும். வரலாற்றுப் பாடத்தையும் யதார்த்த புறநிலைகளையும் குறிப்பெடுத்து ஒரு மாதிரி திட்டவரைபையும், மாற்றுவழிகளையும் கையில் வைத்துக்கொண்டு தடம்புரளாமல் நகரமுடியும்.

இங்கு மாணவர்களின் இலக்கு என்பதும் அவர்கள் சுமக்கத்தயாராகியிருக்கும் பொறுப்பு என்பதும் மிகவும் தெளிவானது. சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. அவசியமானதும் அவசரமானதும் கூட.

1. தமிழ் ஈழ விடுதலையை வென்றெடுப்பதனூடாக உலகில் உள்ள ஒடுக்கப்படும் ஒவ்வொரு இனங்களுக்குமான உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் பங்களித்தல்.

2. தமிழ் இனப்படுகொலையாளிகளை தண்டிப்பதனூடக இன்னுமொரு இனப்படுகொலை உலகில் எந்த மூலையிலும் நடந்துவிடாமல் மனித விழுமியங்களை பாதுகாப்பதில் பங்களித்தல்.
என்ற இரண்டு பூகோளப் பரிமாணங்களைக் கொண்டதாக கவனம்பெற வேண்டியது.
வெறுமனே தமிழ் மாணவர்கள் ஆரம்பித்த தமிழர் உரிமைக்கான போராட்டம் என்று மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் நாளைய உலகை ஆழப்போகும் இளம் சமுதாயம் ஒவ்வொன்றின் முன்னும் உள்ள போராட வேண்டிய தேவைக்கும், நன்கு திட்டமிட வேண்டிய கட்டாயத்திற்குமான போராட்டமாக பரப்பப்பட வேண்டியது.

இத்தகைய கனதியான போராட்டத்தின் கொதிநிலை மையமாக தமிழ்நாடு இருக்கின்ற போதும் அதன் நகர்வுப்புள்ளிகளில் அநேகமானவை பல் இன மொழிவாரியான மாநில ஆட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்திய மத்திய ஐனநாயக மன்றத்தின் நாற்காலிகளில் உள்ளது. மிகுதிப் புள்ளிகளில் சில ஈழத்தீவிலும் ஏனையவை சர்வதேசத்திலும் உள்ளன.

இந்தப் பகுத்தறிவு போராட்டத்தின் திட்டமிடலுக்கும் வெற்றிக்கும் இன்றியமையாதது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் மாநில அரசுகளிற்கு எப்போதும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மத்திய அரசு தலையிடும் என்ற பயமும், மத்திய அரசிற்கு தங்களது பாரபட்சமான செயற்பாடுகளால் மாநிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாது சென்றுவிடும் என்ற பயமும் பரஸ்பரம் உள்ளபடிதான் ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு அஸ்தமனமும் நகர்ந்துகொண்டிருக்கிறது.

இத்தகைய பிண்ணனியில் போராட்டங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து உடனடியாக அதிகரித்த ஆதரவு வரும் என்று எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. அதே நேரத்தில் ஆங்காங்கே மட்டுப்படுத்தப்பட்ட சில வேளைகளில் அதிகரித்த கட்டுப்படுத்தல்களை கூட காவல்துறை மேற்கொள்ளும் என்பதில் எந்த ஆச்சரியமும் இருக்கவேண்டியதில்லை.
அதே நேரம் மத்திய அரசில் இருந்தும் மாணவர் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது போன்ற தோற்றமும் அவ்வப்போது ஏற்படுத்தப்படுவதும் இயல்பானதே.

இந்தியாவைப் பொறுத்தவரை மாணவர்களின் போராட்டம் அடுத்த கட்டத்தை அடையும் வரைக்கும் இந்தக் கண்டும் காணாததுமான போக்கு மத்தியிலும் மாநிலத்திலும் தொடரத்தான் செய்யும்.

அத்துடன் அடுத்தகட்டத்திற்கு போராட்டம் நகராமல் தடுப்பதிலும் அதனை இல்லாது ஒழித்தலிலும்; மாணவர் போராட்டத்தை விரும்பாத சக்திகள் ஒவ்வொன்றும் தங்கள் காய்களை நகர்த்திய வண்ணமே இருக்கும்.
எனவே இக்காலம் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான செம்மையான திட்டமிடல்களிலும் தீவிரமான செயல்ப்பாடுகளிலும் ஈடுபடவேண்டிய பொற்காலம்.

போராட்டத்தைத் தடுக்க நினைக்கும் சக்திகள் மேற்கொள்ளச் சாத்தியமான செயற்பாடுகளையும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு கவனிக்க வேண்டிய விடயங்களையும் மையமாக வைத்து சில விடயங்களை சுருக்கமாக குறிப்பிட விரும்புகிறேன்.

1. தன்னொழுக்கம், கட்டுப்பாடு, நெறிப்படுத்தலுடன் கூடிய மாணவர்களுக்காண கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படல்.
இக்கட்டமைப்பு பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்திலும் இருந்து அனைத்து மாணவர்களையும் உள்வாங்கியதாக ஊர்கள், பிரதேசங்கள், மாவட்டங்கள் ரீதியாக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வினைத்திறன் மிக்க கட்டமைப்பாக உருவாக்கப்படவேண்டும்.
இது மாணவர்களை ஐhதி மத கட்சி அரசியலிற்குள் வீழ்ந்துவிடாமல் பாதுகாக்கவும், அன்றாட தொடர்பாடலோடு கூட்டுச்சக்தியாக நின்று தற்காத்துக்கொள்ளவும், சினம் கொண்டு எழுந்துநிற்கும்; மாணவர் போராட்டம் எரிப்பு, உடைப்பு என வன்முறைக்குள் சென்று வழிதவறிவிடாமல் ஜனநாயக வரம்பிற்குள் உறுதியாகவும் தொடர்ந்தும் போராட அவசியமாக விளங்கும்.

2. தமிழக அரச இயந்திரத்தினதும் அரசு சாராதவர்களினதும் ஊடகங்களினதும் மக்களினதும் மனங்களை முழுமையாக வெல்லும்படியான திட்டங்களும் நடவடிக்கைகளும்.
கல்வித்துறையினருடனோ, காவல்துறையினருடனோ வேறு எந்த அரச தமிழக அரச துறையினருடனும் மோதிக்கொள்ளும் படியாக அமைந்துவிடாமல் சகல அரசியல் கட்சிகள் திரைப்படத்துறையினர் ஊடகத்துறையினர் தொழிலாளர்கள் என தமிழகத்தின் அனைத்து தரப்பினரது ஆதரவையும் பெருக்கி உங்கள் கோரிக்கையை தமிழக சட்டசபையில் தீர்மானமாக கொண்டுவர அழுத்தம் கொடுக்க வேண்டும்.

3. ஏனைய மாநிலங்களின் மாணவர்களினதும் அரச இயந்திரங்களினதும் அரசு சாராதவர்களினதும் ஊடகங்களினதும் மக்களினதும் மனங்களை முழுமையாக வெல்லும்படியான திட்டங்களும் நடவடிக்கைகளும்.
தமிழ் நாட்டில் உள்ள ஏனைய மாநில மாணவர்க@டாகவும் பிற சாத்தியமான வழிகளிலும் உங்கள் கோரிக்கையை அவர்களது கோரிக்கையாகவும் போராட்டமாகவும் மாற்றும்படியான ஒளிப்பதிவுகள் கோரிக்கை மனுக்கள் போன்றவற்றை தயார்செய்து ஏனைய மாநிலங்களிற்கும் உங்கள் போராட்டத்தைப் பரவச்செய்து மாநில அரசுகளினதும் மத்திய அரசினதும் நிலைப்பாட்டை மாற்றச்செய்து பாரதப்பாராளுமன்றில் உங்கள் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றுதல்.

4. சர்வதேச ரீதியாக உள்ள மாணவர்களினதும் அரசுகளினதும் மக்கள் மற்றும் ஊடகங்களினதும் ஆதரவை பெறுவதற்காண திட்டங்களும் நடவடிக்கைகளும்.
ஈழத்திலும் சர்வதேசமெங்கும் இயங்கிவரும் தமிழ் மாணவர் அமைப்புகளுடன் இணைந்து ஏனைய பல்லின மாணவர்களையும் அவர்கள் சார்ந்த மாணவர் அமைப்புகளையும் ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் உள்ளடக்கிய தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச மாணவர் பேரவையாக பலம்பெற்று போராட்டத்தை விரிவுபடுத்துவதுடன் உலகப்பரப்பில் எங்கேனும் போராடும் மாணவர்களது உரிமை மறுக்கப்பட்டாலோ மீறப்பட்டாலோ உலகம் முழுவதிலும் இருக்கும் மாணவர்களினதும் சர்வதேச அமைப்புகளிதும் கண்டனங்களும் கரிசனையும் உங்களைப்பாதுகாக்கவும் உங்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் செய்தல்.மாணவர்களே, வெறுமனே வீதியிறங்கிப் போராடுவதால் மட்டும் ஆட்சியாளர்களால் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிடும் என்றால் உலகில் தோன்றிய அத்தனை புரட்சிகளுமே வென்றிருக்கும் என்ற பேருண்மையை நாம் புரிந்துகொண்டு மதிநுட்பமாக திட்டமிடவேண்டும் என காலம் நமக்கு கட்டளையிடுகின்றது.விரைவில் தமிழக மாணவர் புரட்சி மற்ற மாநிலங்களுக்கு உங்கள் கோரிக்கைகளை தாங்கியவாறு பரவவேண்டும். அங்கே தங்கள் பிள்ளைகள் ஒரு கோரிக்கையை வைத்து போராடும் போது பெற்றவர்கள் உணர்வுரீதியாகவும் அறிவுரீதியாகவும் அதற்கு கட்டுப்படுவார்கள். அதுவே மத்தியில் உங்கள் கோரிக்கைகளிற்கு அனைத்துக்கட்சிகளிலும் இருந்தான ஆதரவை உறுதிப்படுத்தும். உலகம் முழுவதும் நடைபெறப்போகும் மாற்றத்துக்குமான உந்துதலாகவும் அமையும்.

இதற்கு தமிழ் நாட்டில் நடந்த ஒரு சிறு உதாரணத்தை குறிப்பிட விரும்புகின்றேன்.
ஒரு பல்கலைக்கழக வளாகம், தொண்டை வறண்டு போகுமளவுக்குக் கடுமையான முழக்கங்கள் இட்டபடி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள்.இடைவெளியில் சில மாணவர்கள் தேநீர் அருந்துவதற்காக அருகில் இருக்கும் கடைக்குள் நுழைகிறார்கள்.பாதுகாப்புக்காக அங்கு வந்திருந்த தலைமைக் காவலர் அங்கு நின்று கொண்டிருக்கிறார்.மாணவர்கள் உள்ளே நுழையத் தயங்கியபடி வெளியே நின்றபடி தேநீர் சொல்கிறார்கள்.
தலைமைக் காவலர் முழக்கங்கள் இட்டுக் களைத்திருந்த மாணவர் ஒருவரை அழைக்கிறார்.
“ஏலே, காலைல இருந்து எதாச்சும் சாப்டியாலே”.
“கண்ணெல்லாம் உள்ள கூடி போயிட்டு”.
“உயிர விட்டுக் கத்தாதலே”
“வயித்துக்கு எதாச்சும் சாப்பிடு”
காவலரின் திடீர்ப் பாசம் கண்டு மருள்கிறார்கள் மாணவர்கள்.
தலைமைக் காவலர் கடைக்காரரிடம் சொல்கிறார், “யோவ், கோட்டிப் பயலுகளுக்கு என்ன வேணுமோ கொடும், துட்டு நான் குடுக்கேன் என்ன???”
எனக்கும் இவங்களப் போல ஒரு மகன் இருக்காம்ல, மூணு நாளா எங்;க ஊருல பட்டினியாக் கிடக்கான், செத்தாலும் பரவாயில்லப்பா, இப்போ விட்டா எப்பவுமே நாம ஜெயிக்க முடியாதுன்னு போன்ல சொல்றான். என்ன செய்றது, நாங்க பாக்குற வேலை அப்பிடி, போலீஸ்காரனும் மனுசன் தாம்ல, எம்மக்களப் போலத் தான் உங்களைப் பாத்தாலும் தெரியுது, நல்லா வயித்துக்குச் சாப்பிடுங்க, அப்புறமா போராட்டம் பண்ணுங்க”.
“வேண்டாம்னு தடுக்கவும் முடியல, பண்ணுங்கன்னு ஆதரிக்கவும் முடியல, போலீஸ்காரன் பொழப்பு ஒரு சாபக்கேடு கண்ணா”,
பக்கத்தில் இருக்கும் காவலரிடம் புலம்பி விட்டு மாணவர்கள் கொடுக்க முயன்ற பணத்தைத் தடுத்து தனது காக்கிச் சட்டையின் ஈரத்தில் இருந்து நூறு ரூபாய்த் தாளை எடுத்து கடைக்காரரிடம் கொடுக்கிறார் தலைமைக் காவலர். அவர் ஒரு போராடும் மாணவனின் அப்பா.
இவ்வாறு இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு காவல்துறையினதும் அரச அதிகாரிகளினதும் ஊடகவியலாளர்களினதும் பிள்ளைகள் உங்களுடன் போராட்டக்களத்தில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு புறம் உங்கள் போராட்டத்தின் சூடு தணியாமல் இருக்க தற்போது நடாத்திக்கொண்டிருக்கும் போராட்டங்களை அறவழியில் உங்கள் உயிர்களைப் பாதுகாத்தபடி தொடருங்கள்.
மறுபுறம் உங்கள் போராட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த கச்சிதமாக திட்டமிடுங்கள்.
மாணவச் செல்வங்களே!
தோல்வியிலும் வெற்றியிலும் அறுவடைசெய்யக்கூடிய பொது விடயம் அனுபவம் மட்டும் தான். அனுபவத்தில் இருந்து வென்றவர்கள் தமது அடுத்த வெற்றிகளை விரைவுபடுத்துவதிலும் வீரியம் கொள்ளவைப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். தோற்றவர்கள் தங்கள் அடுத்தமுயற்சி வெற்றியாக அமைய அனுபவப்பாடத்தை சற்றும் பிசகாமல் பயன்படுத்திக்கொள்வார்கள்.

உலக மாணவர் போராட்டங்களிற்கு பல நூறாண்டுகள் வரலாறும் தமிழக மாணவர் போராட்டத்திற்கு அறுபது ஆண்டுகளிற்கு முந்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் அனுபவம் உண்டு.
புரட்சி என்பது ஒரு பெரும் புயலுக்கு நிகரான சக்தியை தரவல்லது. ஆனால் அதை பாதுகாத்து பலன்பெறுதல் என்பது அதே புயலில் ஒரு சிறு தீபத்தை பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்கு சமமானது.
மாணவச் செல்வங்களே எங்கள் மொழியும் வலியும் உங்களுக்கு புரியாதது அல்ல.
வெல்லட்டும் மாணவர் புரட்சி! மலரட்டும் சுதந்திரத் தமிழீழம்!

ஈழத்திலிருந்து பிரம்மாதவன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.