Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!

Friday, March 01, 2013

விடுதலைக் கனவுடன் இயங்கிய மூச்சை இன்று நாடு இழந்துவிட்டது -


கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தாயக விடுதலைக்கனவுடன் விடாமூச்சாக இயங்கிய எமது விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து விட்ட ஒரு விடுதலை விரும்பியை எமது நாடு இன்று இழந்து விட்டது. ஒரு அற்புதமான ஆளுமை நிறைந்த இனிய மனிதரை இழந்து உலகத்தமிழரெல்லோரும் சோகக்கடலிலே மூழ்கிக் கிடக்கின்றனர்.
மருத்துவர் என்.எஸ் மூர்த்தி என அனைவராலும் அறியப்படும் மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் நாட்டு நலனையே முன்னிறுத்தி வாழ்ந்தவர். பார்வைக்கும் பழக்கத்திற்கும் இனிமையானவர். அன்பான பேச்சும் அழகான சிரிப்பும் அவரின் ஆளுமையாக மெருகேறி மிளிர்ந்தன. வீண் பகட்டற்ற எளிமையும் அவருக்கேயுரிய உயர்தனிப் பண்புகளும் அவரை நோக்கி எல்லோரையும் ஈர்த்தன.

அவர் தனது இளமைக்காலத்திலேயே தமிழரசுக்கட்சியில் இணைந்து வாலிப முன்னணியின் பேச்சாளராகத் தனது விடுதலைக்கான குரலை ஒலிக்கத் தொடங்கினார். தமிழ் மாணவர் பேரவையின் இணைப்பாளராகிச் சிறிலங்கா அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சிறிலங்காக் காவற்துறையாற் காவலில் வைக்கப்பட்டார். மருத்துவக் கல்வியை நிறைவுசெய்த பின்னர் தனது பிறப்பிடமாகிய திருகோணமலையில் மருத்துவராகப் பணியாற்றிய அவர் 1983 யூலை இனக்கலவரத்தின் பின் மட்டக்களப்புச் சிறையில் இருந்து தப்பிய இளைஞர்களுக்கு மருத்துவ உதவி புரிந்ததற்காகக் கைது செய்யப்பட்டு வெலிக்கடையில் ஒரு வருடம் சிறை வைக்கப்பட்டார்.

சிங்கள அரசு தமிழ்மக்களை அவர்களின் தாய்மண்ணில் என்றுமே நிம்மதியாக வாழவிடப் போவதில்லை என்பதையும் தனது பேரினவாதக் கொள்கையைக் கைவிட்டு நீதியான ஒரு தீர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்கப் போவதில்லை என்பதையும் தனது பட்டறிவுகளால் நன்குணர்ந்த மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் விடுதலைக்கான வழியில் இறுதிவரை சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிரத் தமிழர்களுக்கு வேறெந்தத் தெரிவுகளுமில்லை என்று கண்டு கொண்டார். எமது விடுதலைக்கான பயணத்திற் தன்னையும் இணைத்துக் கொண்டு தமிழ் நாட்டில் நடாத்தப்பட்ட எமது பயிற்சி முகாம்களுக்கு மருத்துவராகினார். அக்காலத்திற் தமிழ் நாட்டிற் பல்வேறு அரசியற் தலைவர்களோடும் நாம் நல்லுறவினை வளர்க்கவும் அரும்பணியாற்றினார்.

1985ல் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதலாவது பொறுப்பாளராகி அதனை வளர்த்தெடுப்பதில் அயராது உழைத்தார். அதன் பின்னர் பிரித்தானியாவை வந்தடைந்து 1992ல் இருந்து 2001 வரை பிரித்தானியத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து பணியாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஐரோப்பிய மண்ணிற் சிறப்பாகச் செயற்படப் பல வகைகளில் ஆலோசனை வழங்கியும் ஊக்குவித்தும் வந்ததோடு அதன் பேச்சாளராகவும் விளங்கினார்.

2001ல் பிரித்தானியாவில் வெண்புறா அமைப்பை நிறுவிப் பல வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக நடாத்தினார். தாயகத்தின் பெரும்பகுதி ஆழிப்பேரலையாற் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது வெண்புறா நிறுவனத்தின் மூலம் பிரித்தானிய மக்களிடம் பெரும் நிதி திரட்டி அனுப்பினார். வெண்புறா நிறுவனத்தின் மூலம் செயற்கைக்காற் திட்டங்களுக்கும் பெருமளவில் உதவினார். வெண்புறா நிகழ்ச்சிகளுக்காகத் தாயகப்பாடற் போட்டிஇ தாயகப் பாடல்களுக்கான நடனப் போட்டிகளை நடாத்தி இளம் சந்ததியினர் மத்தியிற் தாயக உணர்வையும் அறிவையும் மேம்படுத்தினார்.

புலம் பெயர் வானொலிகளில் 'நாமும் நலவாழ்வும்' என்ற பயன்தரும் மருத்துவ நிகழ்ச்சித் தொடரைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்ததோடு சமகால அரசியல் ஆய்வுகளிலும் பங்கு கொண்டார். பிரித்தானிய மண்ணில் மாற்று மருத்துவத்தில் அவர் செய்த சேவைக்காக பிரித்தானிய அரச விருதான 'சுதந்திர மனிதன்' (FREE MAN) விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

சிறந்த மருத்துவரும் கலாரசிகரும் சிறந்த மேடைப் பேச்சாளரும் பண்பாளருமாகிய மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் மண்ணையும் மக்களையும் தேசியத் தலைவரையும் மாவீரர்களையும் வாஞ்சையுடன் நேசித்தவர் ஆவார். சிறீலங்காவின் சிறைகளிற் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த அவர் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஏற்பட்ட மனஅழுத்தங்களால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இன்று எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் இனப்பற்றுக்கும் விடுதலைப்பற்றுக்கும் மதிப்பளித்து அவரின் விடுதலைப் பணியைச் சிறப்பிக்குமுகமாக 'மாமனிதர்' என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம். தாயக விடுதலை எனும் சத்திய இலட்சியத்தை நெஞ்சில் வரித்து இறுதிவரை அதற்காகவே உழைக்கும் சாதனை மனிதர்களைச் சாவு என்றுமே அழித்து விடுவதில்லை. அவர்கள் நாட்டின் வரலாறாகி மக்களின் மனங்களிலே நீடித்து வாழ்வார்கள்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.