Monday, April 02, 2012

சாவுகள் நிறைந்த சமர்களமான ஆனந்தபுரத்தின் நினவுகள்! - சுபன்

பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன் பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் ஆதவன் உள்ளிட்ட பல தளபதிகளின் வீரவரலாறு ஆனந்தபுர மண்ணில் பதிந்த நினைவு நாட்கள் என்றும் எங்கள் மனதில் பதிந்தவைகள்.

மார்ச் 29,30,31, ஏப்ரல் 01,02,03,04 ஆகிய நாட்களில் நடந்தேறிய அக்கினி சமர்தான் அந்த ஆனந்தபுரத்து மண்ணில் நடந்த விடுதலைப் புலிகளின் வீரச்சமர். எதிரியானவன் நேரடியாக மோத வலுவிழந்த நிலையில் பன்னாடுகளினால் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசி அந்த ஆனந்தபுர மண்ணினையே அழித்தான். இன்றும் அந்த மண்ணில் அந்த வரலாற்றில் தடயங்கள் காணப்படுகின்றது.

அன்று 2009 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் இறுதி நாட்கள் ஆனந்தபுர மண்ணில் அக்கினி சுவாலை மூண்ட தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான தாக்குதல்களுக்கு விடுதலைப்புலிகளின் போராளிகளை அழிக்கவென்று சிங்களப் படையினர் தடைசெய்யப்பட்ட நச்சுக் குண்டுகளை களமுனையில் பயன்படுத்துகின்றார்கள்.

மணித்துளிகள் நகர தாக்குதல்களும் உச்சம் பெறுகின்றது. ஆனந்தபுர மண்ணில் இருந்து தலைவர் அவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு செல்கின்றார்கள் சிறப்பு போராளிகள். இந்நிலையில்தான் ஆனந்தபுரம் மண்ணில் நின்று போராளிகள் சமராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களை மீட்டெடுக்கமுடியாத நிலையில் எதிரியின் இறுக்கமான சூழ்நிலை.

காயம் அடைந்த பிரிகேடியர் தீபன் அண்ணாவினை பின்தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய தேவை. அங்காங்கு சிறீலங்காப்படையினர் ஊடுருவி விட்டார்கள். தீபன் அண்ணா காயமடைந்த நிலையில் ஒருநாள் அதிகாலை கொண்டு செல்லப்படுகின்றார். அன்று செல்லும் வழியில் சிறீலங்காப்படையினரின் பாரிய தாக்குதல் ஒன்றிற்கு முகம் கொடுத்து, அந்த உக்கிர தாக்குதலில் பிரிகேடியர் தீபன் அண்ணா அந்த மண்ணினை முத்தமிடுகின்றார். தீபன் அண்ணா உள்ளிட்ட போராளிகளை அழிக்க எதிரியவன் பயன்படுத்திய நச்சுக்குண்டுகள் என்பதை இன்றும் உறுதிசெய்கின்றோம்.



தடைசெய்யப்பட்ட பல்வேறு குண்டுகளையே சிங்கள படையினர் களமுனையில் பயன்படுத்தி இந்த இனவழிப்பு போரினை நடத்தினார்கள். இவ்வாறு அன்று ஆனந்தபுரம் மண்ணில் பல வீரத்தளபதிகள் வரலாறாகின்றார்கள். ஆனந்தபுரத்தில் இருந்து தலைவர் சென்ற பிறகு அந்த மண்ணில் முன்நூறு வரையான போராளிகள் நின்று தாக்குதல்களை தொடுக்கின்றார்கள். அவர்களுக்கான இறுதி கட்டளை நீங்கள் உடைத்துக்கொண்டு வரமுடிந்தால் வாருங்கள், என்றதுதான் அந்த கட்டளை காயமடைந்த போராளிகளை காப்பாற் முடியாது இறந்தவர்கள் அந்தந்த இடங்களில் விடப்படுகின்றார்கள்.

இதில்தான் எதிரியின் முற்றுகை வலயத்தினை ஊடறுத்து நூறுவரையான போராளிகள் தாக்குதலை நடத்திக்கொண்டு அந்த இடங்களை விட்டுவெளியேறுகின்றார்கள். அதாவது சிறு சிறு அணிகளாக அந்த போராளிகள் களமுனையினை விட்டு வெளியேறுகின்றார்கள். ஏனைய போராளிகள் எதிரியின் தொடர் எறிகணை மழையிலும் நச்சுக்குண்டு வீச்சிலும், வீரச்சாவினை அடைகின்றார்கள். அவர்களது உடலங்கள் எதிரியினால் கைப்பற்றப்படுகின்றது. அவைதான் ஆனந்தபுரம் மண்ணில் எதிரியால் சிதைக்கப்பட்ட உடலங்கள். இதில் இன்னும் ஒரு நிகழ்வு நடந்தேறுகின்றது. இந்த பகுதியில் இறுதியில் காயம் அடைந்த நிலையில் இருந்த போராளிகளை சிறீலங்காப்படையினர் உயிருடன்பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள். இதிலும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தன.
இவ்வாறு ஆனந்தபுரம் மண் சிறீலங்காப்படையினரின் நெருப்பு மழையினால் நனைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்தான் படையினர் பலத்த இழப்புக்களுக்கு மத்தியில் ஆனந்தபுரம் மண்ணினை பிடிக்கின்றார்கள். தீபன் அண்ணா எத்தனையோ களங்களை கண்ட தளபதி மட்டுமல்ல, எத்தனையோ பெயர்குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் நடத்தப்பட்ட தாக்குதல்களின் வெற்றிகளுக்கு பின்னாலும் அவரது கரங்கள் இருக்கின்றன. வடபோர்முனையின் கட்டளைத் தளபதியாக இருந்து அவர் ஆற்றிய சாதனைகள் சாதராணமானவையல்ல. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அவருக்கென்றொரு தனி வரலாறு எழுதும் அளவிற்கு அவரது திறமைகள் எதிரியினால் கூட வியந்துபாக்கப்பட்டவை. அந்த சிறப்புமிக்க தளபதியின் வீரச்சாவு நிகழ்வு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அன்று நிகழ்தேறுகின்றது. அந்தநினைவுகளை என்றும் மறக்கமுடியாது.

வீரத்தளபதி பிரிகேடியர் ஆதவன் அவர்கள் அன்று ஆனந்தபுரமண்ணில் உக்கிரமான சமர்க்களம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற காலட்டத்தில் தலைவர் அவர்களை பாதுகாப்பதில் உறுதியாக நின்று போராடினார். அன்றைய நாட்கள் அதாவது ஏப்ரல் மாதம் 2ம் நாள் கடாபி அண்ணாவிற்கு காலில் 50கெலிபர் துப்பாக்கியின் ரவை பட்டு படுகாயம் அடைகின்றார். அவரது கால் சிதறுகின்றது அவரை கொண்டு செல்வதற்காக பின்னகர்த்துகின்றார்கள். ஆனால் அன்று அந்த ஆனந்தபுர மண்ணில் நின்ற தாக்குதல் படகு ஒன்றின்கீழ் அவரையும் அதில் காயம் அடைந்த பல தளபதிகளையும் பாதுகாப்பாக வைக்கின்றார்கள். களமுனையில் நின்ற போராளிகளுக்கு 360 பாகையில் இருந்தும் தடைசெய்யப்பட்ட குண்டுகளின் தாக்குதல்கள் உக்கிரம் பெறுகின்றன. அன்று அந்த மண்ணில் கடாபி அண்ணாகூறிய இறுதி வார்த்தை 'போறவர்கள் தப்பி போங்கள் என்னை பாக்காதீர்கள் விடிகாலை ஆகின்றது என்னையும் சுட்டுப்போட்டுபோங்கள்' என்றுகூறிய வார்த்தைதான் காடபி அண்ணாவின் இறுதி வார்த்தைகளாக காணப்படுகின்றது.

இவ்வாறே பிரிகேடியர் விதுசா, பிரிகோடியர் துர்க்கா, ஆகியவர்கள் தளபதி லோறன்ஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முற்றுகையினை உடைத்துக்கொண்டு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். அன்று ஏப்ரல் 2ம்நாள் அதிகாலை. ஆனந்தபுர மண்ணில் நடந்தேறிக்கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் அனைத்து தாக்குதல் திட்டங்களையும் தளபதி பானு அவர்கள் புலனாய்வுத்துறைப் ;பொறுப்பாளர் பொட்டு அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் ஏனைய தளபதிகளுக்கான கட்டளைகளை வழங்கிக்கொண்டிருக்கின்றார். இறுதியில் அவரின் கட்டளையினைகூட செயற்படுத்தமுடியாத நிலையில் களமுனையில் நின்ற தளபதிகள் தாங்கள் தாங்கள் நிலமைகளுக்கு ஏற்றவகையில் நடவடிக்கையினையும் தங்கள் பாதுகாப்பினையும் மேற்கொள்கின்றார்கள்.

இதில்தான் பிரிகோடியர் விதுசா அக்கா அவர்கள் காலில் காயமடைய களமுனையில் உள்ள மகளீர் போராளிகள் அவரை தூக்குவாதற்காக அந்த இடத்திற்கு விரைய, அவர்களை எதிர்தாக்குதல் நடத்துமாறு கூறிவிட்டு அந்த இடத்திற்கு பிரிகோடியர் துர்க்கா அவர்கள் விதுசா அக்காவினை காப்பாற்ற விரைகின்றார். இந்நிலையில்தான் விதுசா அக்காவிற்கும் வயிற்றில் எதிரியின் குண்டுபட்டு படுகாயம் அடைகின்றார். இருவரும் இருக்கும் இடத்திற்கு நகரமுடியாத அளவிற்கு எதிரியின் தாக்குதல் உச்சம் பெறுகின்றது. இரு தளதிகளுடனும் நின்ற போராளிகளுக்கு தங்களை சுட்டுப்போட்டு போங்கள் என்று கட்டளை இடுகின்றார்கள். அந்த கட்டளைக்கு அமைவாக அந்த போராளி செயற்படுகின்றார்.

எதிரியானவன் அன்றைய களமுனையில் நின்ற போராளிகளை சுற்று வட்டமாக நின்று எதிர்தாக்குதல்களை நடத்திக்கொண்டு நின்றார்கள். இந்நிலையில் எதிரியின் ஒருவகையான இரசாயன குண்டுத்தாக்குதல்களின் புகை முகத்தில் பட்டவுடன் முகத்தின் தோல் எல்லாம் உரிந்துவிடும் அவ்வளவு இரசாயன குண்டுகள்தான் ஆனந்தபுரமண்ணில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள்.

அன்று அந்த ஆனந்தபுர மண்ணில் காயம் அடைந்த ஏராளமான போராளிகள் இடத்தைவிட்டு நகரமுடியாத நிலையில் காணப்பட ஏலக்கூடியளவிலான போராளிகள் இடத்தனை விட்டு நகரும் போது அவர்களின் கழுத்தில் கிடந்தகுப்பிகளை கழட்டி காயம் அடைந்த போராளிகளுக்கு கொடுக்கும் போது அந்த போராளிகளின் நெஞ்சின் வலிகள் எவ்வாறு இருக்கும் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இவ்வாறுதான் அந்த களமுனையில் நடந்தேறிய பலநிகழ்வுகள் இன்றும் அந்தபோராளிகளின் மனதில் இறுகப்பற்றி நிற்கின்றது.

போராடிய இறுதிக் களமுனைகளில் நின்றபோராளிகளுடன் களத்தில் போராடிய வீரத்தளபதிகள் எத்தனை போர் என்பதை எண்ணில் அடக்கிவிடமுடியாது. தளபதிகள் களத்தில் நிற்பதை விட தலைவர் அவர்கள் களத்தில் நிற்பதில் உறுதியாக இருந்தார். இதனை அவதானித்த தலைவர் அவர்களின் பாதுகாப்புத் தளபதிகள் தலைவர் அவர்களை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தார்கள்.

அந்தவகையில்தான் தலைவர் அவர்களை எப்படியாவது ஆனந்தபுர களமுனையில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்ற துணிச்சலான நடவடிக்கையினை, தலைவர் அவர்களின் வளர்ப்பில் உருவான போராளிகள் துணிகர மீட்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு பத்திரமாக மீட்டுச் செல்கின்றார்கள்.

இவ்வாறு அந்த ஆனந்தபுர மண்ணில் வீரவரலாறான வீரத்தளபதிகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுகபற்றுகின்றோம்..

 சுபன்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.