Saturday, March 17, 2012

மக்கள் எழுச்சியை எந்த அடக்கு முறையாளர்களாலும், ஆயுதங்களாலும் தடுத்துவிடமுடியாது - தாயகத்தில் இருந்து வீரமணி

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தினார்கள் என்றும் பிதற்றிய அரசாங்கம், அவர்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் தாயகப் பிரதேசத்தில் முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரச்சாரத்திலும் ஈடுபடுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயக பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

இங்கு எவரும் எதையும் செய்யலாம் என்ற நிலை ஒன்று தோற்றம் பெற்றுள்ளது. யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பெண்கள் மீதான வன்முறைகள் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இன வன்முறையாளர்களான சிங்கள தேசத்திடம் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து தமிழீழ தேசியத் தலைவர் தமிழ் மக்களின் சகல விடயங்களிலும், அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்பட்டதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

மாற்று ஆயுதக் குழுக்களும் பல கட்சிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமகாலக் கட்சிகளாக இருந்த போதிலும் மேற்படிக் கட்சிகளின் தலைமையிலும் உறுப்பினர்களிடையேயும் ஒழுக்கநெறி காணப்படவில்லை.

ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களின் நிர்வாக நடவடிக்கைகளில் மேற்படி கட்சிகள் தலையிட்ட போதிலும் இவர்களிடம் இருந்த துர்நடத்தைகள் காரணமாக தமிழ் மக்கள் இவர்களை வெறுத்தொதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தலைவர் பிரபாகரனின் நேர்மை, நீதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தலைவரும் போராளிகளும் மக்களால் கவரப்பட்டனர்.



புலிகள் சொல்வதை மக்கள் தலைமேற் கொண்டு செயற்பட்டனர். இதனால் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழ் மக்கள் புலிகளை நேசித்தார்கள். மக்கள் மத்தியில் அவர்கள் சிறப்பான வகையில் நிர்வாகங்களை நடத்தினர்.

கிராமங்கள் தோறும் ‘சிற்றூர் சபை’ என்ற சிறு சிறு சபைகளை உருவாக்கிய புலிகள் அமைப்பு அந்தந்தக் கிராமங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட நற்குணம் உள்ளவர்களை அதற்குப் பொறுப்பாக நியமித்து பிரதேசங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களை தீர்த்து வைத்தது.

இதன் சிறப்பான செயற்பாட்டால் தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆழமாக நம்பிக்கை வைத்தனர். புலிகள் கெரில்லா அமைப்பாகச் செயற்பட்ட போதே தமிழர் தாயகப் பகுதியில் சிவில் நிர்வாக நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் குற்றச் செயல்கள் குறைவடைந்தன, இல்லாது ஒழிக்கப்பட்டன.

பின்னர் தமிழர் தாயகத்தின் குறிப்பிட்ட அளவான பிரதேசங்களை தக்கவைத்து மரபுவழிப் போரிடும் அமைப்பாக புலிகள் அமைப்பு வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து சிவில் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காக புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டிய தேவை தலைவருக்கு ஏற்பட்டது.



இதனால் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய காவற்துறை தோற்றுவிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்படும் வரை சிறப்பாக இயங்கிய தமிழீழ காவற்துறை இலஞ்சம், ஊழல், பக்கச் சார்பற்ற சிறந்த சேவையை தமிழ் மக்களுக்கு வழங்கியது. இதனால் தமிழர் தாயகப் பிரதேசத்தில் குற்றச் செயல் முழுவதுமாக இல்லாதொழிக்கப்பட்டது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் இல்லாமலுள்ள தற்போதைய காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் குற்றச் செயல்கள் பாரிய அளவில் தலைதூக்கியுள்ளன. தற்போது எவர் எதை நினைத்தாலும் செய்து முடிக்கக் கூடிய சூழலே யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது.

தமிழ் மக்களில் அக்கறையான நிர்வாகம் ஒன்று இதுவரை இங்கு ஏற்படுத்தப்படவில்லை. யுத்தம் நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழர் தாயகப் பிரதேசங்களில் பல்லினக் கலாசாரம் புகுந்து கொண்டதே இங்கு நடைபெறுகின்ற துர்நடைத்தைகளுக்கு காரணம் என்று பலரும் கூறுகின்றனர். ஏ-9 நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டதையும் அவர்கள் இதற்கு உதாரணமாகக் கூறுகின்றனர்.

ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதால் மட்டும் யாழ் குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் கலை, கலாசார விடையங்களைப் பாதுகாக்கக்கூடிய, அவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக்கூடிய அக்கறையான சிவில் நிர்வாகம் ஒன்று தமிழர் தாயகப் பகுதியில் அமுல்படுத்தப்படவில்லை. அவ்வாறான கட்டமைப்பு ஒன்று இருக்குமாயின் இந்தக் குற்றச் செயல்களையும் கலாசாரப் பிறழ்வுகளையும் நிச்சயம் தடுத்து நிறுத்த முடியும்.

ஏனெனில் கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. குறிப்பிட்ட சில வருடங்கள் நீடித்த இந்த ஒப்பந்த காலத்திலும் யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் பல்லினக் கலாசாரம் புகுந்து கொண்டது.

வெளித் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன, ஆனால் அந்தக் காலத்தில் கலாசாரப் பிறழ்வுகளே குற்றச் செயல்களோ அதிகரிக்கவில்லை. அதற்கு காரணம் தமிழ் மக்களில் அதிக அக்கறையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் இந்த அமைப்பின் நீதி நிர்வாக நடவடிக்கைகளும் தமிழர் தாயகப் பகுதியில் வலுவுடன் சிறந்து விளங்கியமையாகும்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக அடக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் தாயகத்தில் வலுவுடன் இயங்கிய அவர்களின் சிவில் நிர்வாக கட்டமைப்பும் சீர்குலைந்தது. இதனால் பொளத்த சிங்கள மேலாதிக்கம் தாயகத்தில் தலைதூக்கியது. குற்றச் செயல்களும் கலாசாரப் பிறழ்வுகளும் இங்கு அதிகரிக்கத் தொடங்கின. பெண்கள் மீதான வன்முறைகளும் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும் அதிகரிக்கத் தொடங்கின.

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற போதிலும் அண்மைக்காலச் சம்பவங்களாக வடமராட்சி குடத்தனையில் நிலக்ஷனா என்ற மாணவி கொல்லப்பட்டமை, நெடுந்தீவில் லக்ஷினி என்ற மாணவி கொல்லப்பட்டமை உட்பட பல இடங்களிலும் இடம்பெற்ற 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் மீதான வன்புணர்ச்சி சம்பவங்களைக் கூறலாம்.

யாழ்.மாவட்டத்திலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உட்பட தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் நடைபெறுகின்ற பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வுகள், களவு, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் ஈ.பி.டி.பி உறுப்பினர்களாகவும், அவர்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகின்றவர்களாகவுமே உள்ளனர்.

யாழ் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றிய காலத்தில் இருந்து இன்றுவரை யாழ் குடாநாட்டில் பல கொலைகளிலும் கொள்ளைகளிலும் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டு தண்டனைகள் வழங்கப்படவில்லை. இவர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

குறிப்பாக, ஊடகவியலாளர் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய கிருபா என்று அழைக்கப்படும் ஜெகதீஸ்வரன், தென்மராட்சியில் மாணவனின் கொலையுடன் தொடர்புடைய சாள்ஸ், குடாநாட்டில் இடம்பெற்ற பல கொலைகளுடன் தொடர்புடைய நெப்போலியன், காண்டீபன் ஆகியோர் உட்பட ஈ.பி.டி.பி யின் பல உறுப்பினர்கள் இன்றுவரை சுதந்திரமாக திரிகின்றனர்.

பல கொலைகளைச் செய்த இவர்கள் சிறீலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்ட போதும் அரசியல் செல்வாக்குடன் வெளியே வந்துள்ளனர். ஈழ யுத்தத்தில் ஏராளம் தமிழர்களை கொன்று சிங்களத் தரப்பிற்கு வெற்றிவாகை சூடிக் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோர் சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில், ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் மேற்படி உறுப்பினர்கள் மட்டும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இதில் இருந்து சிறீலங்கா நீதித்துறை எத்தகைய போக்கில் பயணிக்கின்றது என்ற உண்மை வெளிப்படுகின்றது. என்ன செய்தாலும் தமக்கு தண்டனை கிடைக்காது என்று வெகுவாக நம்புகின்ற மேற்படி ஒட்டுக் குழு உறுப்பினர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே யாழ் குடாநாடு உட்பட தமிழர் தாயகப் பகுதியில் தமது காடைத்தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த காடைக் கும்பலின் கோரப் பசிக்கு இறுதியாகப் பசியாகியவள் நெடுந்தீவைச் சேர்ந்த லக்ஷினி. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்ற பெயருடன் யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற சிறீலங்கா காவல்துறையினரும் இலஞ்சம் மற்றும் ஊழல் பெறுவதில் முனைப்புக் காட்டுகின்றனரே தவிர மக்களின் பிரச்சினைகளில் அக்கறை எடுப்பவர்களாக இல்லை.

கொலை செய்கின்ற குற்றவாளிகள் கூட, ஒரு போத்தல் மதுபானத்துடனும் ஒரு சிகரட் பெட்டியுடனும் காவல்துறையினரை தமது கைக்குள் போடக்கூடிய நிலையே இன்று யாழ். குடாநாட்டில் காணப்படுகின்றது. அந்தளவிற்கு யாழ் குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழ் காவல்துறை அதிகாரி எஸ்.இந்திரன் அரசியல் செல்வாக்குடன் தற்போது இடமாற்றப்பட்டுள்ளார்.

மேற்படிப் காவல்துறை அதிகாரி யாழ் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டமை தமிழ் மக்களால் வரவேற்கப்பட்டது. இவர் யாழ் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட சில தினங்களிலேயே யாழில் மிக இரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு பல பெண்களும் ஆண்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் பல இடங்களில் பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்த சிலரையும் இவர் கைது செய்திருந்தார்.

இது போன்று ஈ.பி.டி.பி என்ற அரசியல் கட்சியின் காடைத்தனத்தினையும் இவர் தட்டிக் கேட்க முற்பட்டார். இதனால் சினமடைந்த மகிந்த அரசு, இவரை தற்போது இடமாற்றம் செய்துள்ளது. இவரைத் தொடர்ந்தும் குடாநாட்டில் வைத்திருந்தால் யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளையும் மாணவர்களையும் சீரழிக்க வேண்டும் என்ற தமது இலக்கு நிறைவேறாமல் போகும் என்ற காரணத்தினாலேயே இவர் இடமாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழ்.குடாநாட்டில் இளைஞர், யுவதிகளிடமும் மாணவர்களிடமும் பாலியல் தொரடர்பான கலாசார சீரழிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை வேறு வழியில் பயணிக்க வைக்கலாம். அவ்வாறு செய்தால் தமிழ் மக்கள் தமக்கு எதிராக கிளந்து எழாமல் தடுக்க முடியுமென்று அரசாங்கம் நினைக்கின்றது. அரசு நினைப்பது போன்று தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்ல. குட்டக் குட்டக் குனிபவர்கள் அல்ல. உலகிலேயே சிறந்த கெரில்லா அமைப்பாகவும் மரபு வழிக்கட்டமைப்பை கொண்ட படைபலமாகவும் விழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தை எவருமே குறைத்து மதிப்பிட முடியாமல் இருந்தது.

இதனால் தான் உலகின் 10 இற்கும் மேற்பட்ட நாடுகளின் உதவிகளுடனும் அவர்களின் போர் உத்திகளுடனும் சிறீலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியாக தோற்கடித்திருக்கிறது. இத்தகைய வீரம் விளைந்த மண்ணில் வாழுகின்ற தமிழர்களைச் சிங்களம் சிறு துரும்பாக எடை போடுகிறது. அரசிற்கும் இராணுவத்திற்கும் அரச ஒட்டுக் குழுக்களுக்கும் எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதற்காக கட்டியம் கூறும் சம்பவங்கள் அண்மையில் வெளிப்பட்டன.

மர்ம மனிதர்கள் என்ற போர்வையில் இராணுவத்தினர் நிகழ்த்திய அட்டகாசங்களுக்கு எதிராக நாவாந்துறையில் மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவிற்கு எதிராக நெடுந்தீவு மக்கள் கிளர்ந்து எழுந்தனர். இதுபோன்று எதிர்காலத்திலும் மக்கள் கிளர்ந்தெழுவர். இதனை எவருமே தடுக்க முடியாது. தியாகி திலீபன் கூறியதைப் போல மக்கள் புரட்சி வெடிக்கும். அப்போது சுதந்திரத் தமிழீழம் மலரும்.

நன்றி : ஈழமுரசு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.