Tuesday, March 06, 2012

கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனைச் சந்திக்க மன்மோகன்சிங் பின்னடிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் பின்னடித்து வருகிறார் என்று அறியவருகிறது. இந்த மாதம் முதல் வாரத்தில் கூட்டமைப்பின் தலைவர்களை மன்மோகன்சிங் சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன ஆனாலும் அதற்கான திகதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.
ஜெனிவாவில் இலங்கை மீது கொண்டு வரப்படவுள்ள பிரேரணையை ஆதரிக்குமாறு இந்தச் சந்திப்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்துவதெனக் கூட்டமைப்புத் தீர்மானித்திருந்தது. ஆனால், சந்திப்புக்கு இந்தியத் தரப்பு பின்னடித்து வருவது குறித்துக் கூட்டமைப்பு வருத்தமடைந்திருக்கிறது.

இது தொடர்பில் தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார் எனத்தெரியவருகிறது. கூட்டமைப்பின் தலைவரது கடிதம் இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை எடுத்துக் கொண்டு அவர் புதுடில்லிக்குப் பறந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்துக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, "அதைப் பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார் இருப்பினும் சந்திப்புக்காகத் தான் இந்தியா செல்வார் என்றும் அது எப்போது என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜெனிவா பிரேரணையில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஒட்டுமொத்தத் தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்தியா இலங்கைக்குச் சார்பாகச் செயற்படுமானால் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்படும்.

எனவே இலங்கை மீதான பிரேரணையை இந்தியா அதரிக்க வேண்டும். குறைந்தபட்சம் இதையாவது இந்தியா செய்யாவிட்டால் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அந்த நாட்டுக்கு உள்ள அக்கறை கேள்விக் குறியாகிவிடும் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.