Wednesday, March 14, 2012

இலங்கைக்கெதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் மார்சுகி தருஸ்மன்

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவலைகளைத் திரட்டி, அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதற்கு ஜெனிவா இராஜதந்திரக் களத்தில் அதிரடியாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ள ஐ.நா. நிபுணர்கள் குழுவின் தலைவர் தருஸ்மன் முதற்கட்டமாக ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றார் என தெரியவருகின்றது.

மார்சுகி தருஸ்மனின் இந்த அதிரடியான நடவடிக்கையால் இலங்கைக்கு ஏற்கனவே ஆதரவைத் தெரிவித்துள்ள ஆசிய நாடுகள், தமது முடிவை மீள்பரிசீலனை செய்யக்கூடிய நிலை ஏற்படலாம் என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை எதிர்வரும் 22ஆம் அல்லது 23ஆம் திகதிகளில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இந்த நிலையில், தருஸ்மன் முன்னெடுத்துள்ள இந்த இராஜதந்திர நடவடிக்கையானது ஜெனிவாவிலுள்ள இலங்கை இராஜதந்திரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளது எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா விரைந்த கையோடு பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுகளை முன்னெடுத்த தருஸ்மன், இலங்கைக்கு எதிரான பிரேரணை, இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் கலந்துரை யாடியுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு அந்நாடுகளின் பிரதிநிதிகளிடம் கோரியுள்ள தருஸ்மன், அதற்கான காரணங்களையும் உரிய முறையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பையடுத்து மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாட்டு பிரமுகர்களுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளார் என ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற அனைத்துவிதமான சம்பவங்களின் உண்மைத்தன்மை, ஐ.நா. அறிக்கைக்கும், இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்குமிடையிலான வேறுபாடு, நம்பகத்தன்மை உட்பட முக்கியமான சில விடயங்களை எடுத்துக் கூறி அமெரிக்காவின் பிரேரணைக்கு அவர் ஆதரவைத் திரட்டி வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்த அறிக்கை முழுமையானதொன்றல்ல எனச் சுட்டிக்கட்டிய தருஸ்மன் குழுவினர், இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் எனக் கோரி கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆய்வுசெய்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், தருஸ்மன் தலைமையிலான மூவரடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமித்து அறிக்கை பெற்றிருந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.