Monday, March 12, 2012

இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை – பிரித்தானிய ஏடு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று வெளியாகியுள்ள ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் சனல்- 4 ஆவணப்படத்தை தயாரிக்கும் Callum Macrae எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தரையில் கிடக்கும் - இரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளையும் சனல்-4 வெளியிடவுள்ளதாக Callum Macrae கூறியுள்ளார்.

இதுபற்றி ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் அவர் கூறியுள்ளதாவது,

“12வயது சிறுவன் தரையில் கிடக்கிறான். இடுப்பில் சுடப்பட்டுள்ளது., அவரது மார்பில் 5 துப்பாக்கிச் சூட்டுத் துவாரங்கள் காணப்படுகின்றன. அவரது பெயர் பாலச்சந்திரன் பிரபாகரன்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான இவர் நீதிக்குப்புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு அருகே ஐந்து ஆண்களின் சடலங்கள் கிடக்கின்றன. அவர்கள் அவரது மெய்க்காவலர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவர்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உடைகளும் தரையில் கிடக்கின்றன. அவர்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது.


மேலதிகமாக, சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பல விடுதலைப் புலிப் போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட, சிறிலங்கா அரசபடைகளால் முறைப்படியான கொள்கையின் அடிப்படையில் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாகிறது.

இந்த ஒளிப்படத்தில் மே-18ம் நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. 12 வயதான பாலச்சந்திரன் மரணம் தொடர்பான புதிய ஆதாரங்கள் அழுத்தங்களை அதிகரிக்கும்.

பாலச்சந்திரன் அவரது மெய்க்காவலர்களின் சடலங்கள் கிடக்கும் மிகத்தெளிவான - உயர் துல்லியம் கொண்ட ஒளிபடங்களை சனல்-4 பெற்றுள்ளது.

இவை மதிப்புமிக்க தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெரிக் பௌண்டர் மூலம் ஆராயப்பட்டது.

கண்கள் கட்டப்பட்டிருந்த அவரது மெய்க்காவலர்கள் பார்க்கும் படியாக பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் கருத்துக் கூறியுள்ளார்.

முதலாவது சூடு சிறுவனின் மீது சுடப்பட்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பௌண்டர் நம்புகிறார்.

பொட்டுப் போன்ற துவாரப் பகுதியில் பச்சை குத்தப்பட்டது போன்ற அடையாளம் உள்ளது.

அதனால், சிறுவனின் நெஞ்சில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது.

சிறுவன் கையை நீட்டித் துப்பாக்கியை தொடும் நேரத்தில் சுடப்பட்டிருக்கக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்காப் படையினரால் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் முதல்முறையாக வரும் புதன்கிழமை இரவு சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ என்ற பெயரில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

இது கடந்த ஆண்டு ஒளிப்பரப்பப்பட்ட சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகும்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.