Sunday, March 04, 2012

மார்ச் 05, தமிழீழ விடுதலைப் போரின் இன்னொரு ஓயாத அலை!

புலி வாலைப் பிடித்த கதையாக உள்ளது சிறிலங்கா அரசின் நிலை. தொடர்ந்தும் பிடித்துக்கொண்டிருந்தால் அதன் சினத்திற்கு ஆளாகவேண்டும். அல்லது, எப்போ கையை விட்டாலும் அதன் சீற்றத்திற்குப் பலியாகவேண்டும்.

அதைவிடவும் கொடூரமான நிலை மகிந்தருக்கு. அமெரிக்கா முதல், அவுஸ்திரேலியா வரை உலகின் மனிதாபிமானம் மிக்க நாடுகள் எல்லாம், ஈழத் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வழங்கியே ஆகவேண்டும் என்ற கடுமையான நிலையை எடுத்துள்ளன. உலகின் நம்பிக்கையான பல நண்பர்களைத் தொடர்ந்து இழந்துவரும் சிறிலங்காவுக்கு, தற்போது தன்னைக் காப்பாற்றுவதே பெரும் சுமையாக உள்ளது.

சீனாவின் ஆதரவுக் கரம் மட்டும் போதாது என்பதைப் புரிந்து கொண்டு, இந்தியாவையும் சமாதானம் செய்ய வேண்டி இன்னொரு இக்கட்டும் சிங்கள தேசத்திற்குப் பெரும் திருகுவலியாக உள்ளது. தனது பொருளாதார பலத்தினூடாக சிங்கள தேசத்தில் ஆழ ஊடுருவியுள்ள சீனாவின் செல்வாக்கு எல்லை தாண்டுமானால், இந்தியா ஈழத் தமிழர் விவகாரத்தைத் தனக்கு எதிராகத் திருப்பிவிடும் என்ற அச்சமும் சிங்கள தேசத்தை அலைக்களிக்கின்றது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் மெல்ல மெல்ல ஆதிக்க வியூகம் வகித்துவரும் சீனாவின் முத்துமாலைத் திட்டம் அமெரிக்க - மேற்குலக நாடுகளுக்கு இலங்கைத் தீவின்மீதான அக்கறையை அதிகரிக்க வைத்துள்ளது. சிங்கள தேசம் முழுமையாக சீனாவின் செல்வாக்கினுள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கமும் ஈழத் தமிழர்கள்மீதான மேற்குலகின் அக்கறையை அதிகரிக்கச் செய்துள்ளது.

சிங்கள ஆட்சியாளர்களது தூர நோக்கற்ற கணிப்பீடு, இப்போது அதனை உலக நாடுகள் அத்தனையின் கால்களிலும் வீழ்ந்து 'காப்பாற்றுங்கள்' என்று கதறும் நிலையை உருவாக்கியுள்ளது. உலகின் மூலை முடுக்கிலுள்ள சிறிய நாடுகளுக்கும் தனது தூதுவர்களை அனுப்பி, ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் தன்மீது கொண்டுவர உத்தேசித்துள்ள கண்டனத் தீர்மானத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மன்றத்தில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே, சிங்கள தேசத்தின் அமைச்சர்களும், ராஜதந்திரிகளும் ஜெனிவாவில் முகாமிட்டு, தமக்கான ஆதரவினைக் கோரி அனைத்துலக நாடுகள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டுவிட்டனர்.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தொடர்ச்சியான ராஜதந்திர நகர்வினை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் திங்கட்கிழமை (05-03-2012) ஜெனிவா முன்றலில் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்படவுள்ள நீதிக்கான ஆர்ப்பாட்டம் சிங்கள தேசத்தின் அத்தனை நகர்வுகளையும் முறியடிக்கப் போகின்றது. பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த ஆர்ப்பாட்டம் தமிழீழ விடுதலைப் போரின் இன்னொரு ஓயாத அலையாகப் பதிவாகப் போகின்றது.

இந்த நிலையில், தமிழீழ மக்களது அரசியல் சக்தியாகக் கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தவறான முடிவு தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கண்டனங்களைப் பெற்று வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள், ஜெனிவா மாநாட்டில் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என்று வெளியிட்ட அறிக்கை, அவர் குறித்த விம்பங்களைத் தமிழ் மக்கள் மத்தியில் தகர்த்தெறிந்துள்ளது. அவரது வயதுக்கான மரியாதையை வழங்கிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அவருக்குப் பதிலாக சுமந்திரனின் கொடும்பாவியைத் தூக்கில் தொங்கவிட்டு, எரித்திருக்கிறார்கள்.

இந்தியாவினால் வழிநடாத்தப்படும் சம்பந்தன் ஈழத் தமிழர்களுக்குத் தலைமை தாங்கத் தகுதியானவர் இல்லை என்ற முடிவுக்கே தமிழ் மக்களைக் கொண்டு சென்றுள்ளது. இந்தியா செய்த துரோகங்களையும், நிகழ்த்திய கொடூரங்களையும், வழங்கிய தண்டனைகளையும் மறக்க முடியாத தமிழ் மக்களுக்கு சம்பந்தன் அவர்களது நடத்தை சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி யுத்த காலம் முதல், இன்று வரையான காலம் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடத்தை கேள்விக்குரியதாகவே உள்ளது. மிகக் கொடூரமான இன அழிப்புப் போரை எதிர்கொண்ட ஈழத் தமிழினத்தின் அவலங்கள் தீர்வதற்கான ஆக்கபூர்வமான எந்த முயற்சியிலும் இதய சுத்தியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடவில்லை என்பது, இப்போது பலராலும் புரியப்பட்டு வருகின்றது. அதற்கு, ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் அமர்வு வகை செய்து கொடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தெரிவு என்ற ஒரே காரணத்தால், தமிழீழ மக்களால் உயரத் தூக்கி நிறுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னொரு வெற்றிடத்தை ஈழத் தமிழர்களுக்கு உருவாக்கியுள்ளது. விடுதலைப் புலிகளது பிரசன்னமில்லாத தற்போதைய தமிழீழ மண்ணில் நேர்மையான, துணிச்சலுள்ள, விலைபோகாத ஒரு அரசியல் தலைமை ஒன்றின் அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது. அது ஒன்று மட்டுமே அடுத்த சந்ததியையாவது தமிழீழத் தனியரசில் சுதந்திரமாக வாழ வைக்கும்.

- ஈழநாடு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.