Saturday, February 25, 2012

ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றம் சுமத்தவே கங்கை அமரன் மிரட்டப்பட்டார் _

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்காகவே இயக்குநர் - இசையமைப்பாளர் கங்கை அமரனை போலீசார் மிரட்டினார்கள் என்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சசிகலா தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இப்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று 3-வது நாளாக தனிக்கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் விசாரணை நடந்தது.

ஆட்சேபனை

அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யா வாதிடுகையில், "சசிகலா வலுவான குரலில் பதிலளிக்க வேண்டும். குறிப்பு எழுதி வைத்து கொண்டு பதிலளிக்க கூடாது. அவருக்கு மேஜை வழங்கியிருப்பது சரியல்ல'' என்றார்.

இதற்கு சசிகலா தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். "இது குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை. குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு அவருக்கு போதிய உரிமை உள்ளது. தேவைப்படும் நேரங்களில் பதிலை விரிவாக சொல்வது அவசியம்'' என்று அவர் வாதம் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, "ஏதாவது மறந்து இருந்தால் கோர்ட்டில் உள்ள ஆவணங்களை பெற்று பதிலளிக்கலாம்'' என்று உத்தரவிட்டார். இதனால் இரு தரப்பு வக்கீல்களின் ஆட்சேபனை விவகாரம் முடிவுக்கு வந்தது.

சசிகலாவிடம் கடந்த 2 நாட்களாக 63 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. நேற்று மட்டும் 40 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதுவரை 103 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.

சொத்து வாங்கிய விவகாரம் தொடர்பாகவே நேற்றைய கேள்விகள் இடம் பெற்று இருந்தன. அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு சசிகலா பதிலளிக்கையில், "சொத்துகள் வாங்கியதில் ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இல்லை. வேண்டுமென்றே அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கங்கை அமரன் மிரட்டப்பட்டாரா?

"செங்கல்பட்டு அருகே உள்ள பையனூரில், இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பண்ணை வீட்டை கட்டாயப்படுத்தி வாங்கினீர்களா?'' என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சசிகலா பதிலளிக்கையில், "கங்கை அமரனின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அந்த நிலம் வாங்கப்பட்டது. எங்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவதற்காக அவரை போலீசார் மிரட்டி பணிய வைத்து உள்ளனர்'' என்றார்.

இன்றும் (சனிக்கிழமை) வழக்கு விசாரணை நடக்கிறது. அப்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது.

சுதாகரன், இளவரசி ஆகியோரும் நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

கங்கை அமரன் விவகாரம் என்ன?

ஜெயலலிதா முதல்முறை பதவிக்கு வந்தபோது, தனக்கு சொந்தமாக பையனூரில் இருந்த 22 ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை மிரட்டி ஜெயலலிதாவும் சசிகலாவும் வாங்கியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து பேசியதற்காக தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.