சிறிலங்கா அரசாங்கமானது, தன்மீதான போர்குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், ஆவணப்படம் ஒன்றினை இன்று புதன்கிழமை (08-02-2012) வெளியிட்டுள்ளது.

தமிழினத்தின் மீதான, சிங்கள அரச படைகளது போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியற்றை மூடிமறைக்கும் நோக்கில், இந்த ஆவணப்படத்தினை சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளால், பொதுமக்கள் மீதும், போராளிகள் மீதும், குற்றச் செயல்களை இழைக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தினை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உண்மை நிலை பற்றி அறியாமல், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்தள்ளது.

தமிழினத்தின் மீது, சிங்கள அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்த அநீதிகளை, இத்தகைய செயற்பாடுகள் ஊடாக, சிறிலங்கா அரசாங்கம் நியாயப்படுத்தி விடமுடியாதென மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைத்தீவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்குற்றச்சாட்டுக்கள் குறித்து, ஒரு அரசென்ற வகையில் சிறிலங்கா அரசானது பொறுப்புக் தவறியுள்ளதென, சர்வதேச சமூகம் ஏற்கனவே குற்றஞ்சாட்டி வருகின்றமையையும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மறுதரப்பின் மீது யுத்த குற்றங்களை முன்னிறுத்தி, ஒரு அரசாங்கம் யுத்த குற்றங்களில் ஈடுபட முடியாதென, கொழுப்பு இராஜதந்திரியொருவர் இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.