Friday, February 10, 2012

விடுதலையை நேசித்த போராளிகளுக்கு மக்கள் கொடுக்கும் கெளரவம் என்ன? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

இந்த மண்ணில் மிகநீண்டதும், கொடியதுமான போரின் முடிவில் நிறைந்து கிடந்த வெறுமைக்கு அப்பால் போரின் வடுக்களாய், கடந்தகால வரலாற்றின் வாழும் சாட்சிகளாய் இன்று முன்னாள் போராளிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிந்துவிட்டது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றிபேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதே பாங்கில் முன்னாள் போராளிகளை முடக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றது.

அடிப்படைகள் எதுவுமில்லாமலும், யதார்த்தத்திற்குப் புறம்பாகவும், அரசாங்கத்தினாலும், அதனது படையினராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழர்களிடம் விடையில்லாத பல கேள்விகளை உருவாக்கியிருக்கின்றது. யுத்தத்தின் முடிவிலும், அதற்கு முன்னரும், புலிகளின் மிக முக்கிய புள்ளிகள் அரசாங்கத்துடன் இணைந்தார்கள். பின்னர் அவர்கள் ஜனநாயக நீரோட்டத்திலும் கலந்தார்கள்.

ஆகவே புலிகளின் தலைவர்களுடனும், புலிகளுடன் இருந்து செயற்பட்ட சில அரசியல் அடிவருடிகளுடனும் சமரசம் செய்துகொள்ள முடிந்த அரசாங்கத்தினால் சாதாரண போராளிகளுடைய உணர்வுகளைக் கூட மதிக்கத் தெரியவில்லை. இந்தக் கேள்வியை பலபேர் பலதடவை கேட்டிருக்கின்றார்கள். யார்? எத்தனை தடவை கேட்டாலும் இதுவொன்றே எப்போதும் இருக்க கூடிய நியாயம். யுத்தம் முடிந்த நிலையில், போரில் ஈடுபட்டதாக கூறி கைதுசெய்யப்பட்ட போராளிகள் சிறிது, சிறிதாக விடுவிக்கப்பட்டபோது உலகில் வேறெந்த நாடும் இவ்வாறான செயலை செய்ததில்லை என அரசு மார்தட்டிக் கொண்டது.

ஆனால் இந்த வார்த்தைகளுக்குப் பின்னாலுள்ள மறை பொருட்களை தமிழர்கள் உணரத்தவறியிருக்கின்றோம். சர்வதேசம் புரிந்தும் புரியாததுபோல பாவனை செய்து கொண்டது. அதாவது யுத்தத்தின் பின்னர் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் எத்தனைபேர் விடுவிக்கப்பட்டார்கள்? விடுவிக்கப்பட்டவர்கள் சமூக வாழ்வில் இணைந்திருக்கின்றார்கள், நண்டு வளர்க்கிறார்கள், என்றெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலிகள் சொல்லப்படாமலிருக்கின்றது. ஒரு முன்னாள் போராளி சமூகத்தில் இறங்கி பொது இடத்தில் நின்று நான்கு பேருடன் பேசினால் போதும். ‘மீண்டும் இரத்த சகதியை உருவாக்கப் போகிறீர்களா? மக்களுடைய உணர்வுகளை தூண்டுகிறீர்களா. அடங்கியிருங்கள்’ இப்படியெல்லாம் அச்சுறுத்தல் வருகின்றது.

யார் இந்த அச்சுறுத்தல்களை கொடுக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். இதேபோல் முன்னாள் போராளியா? வேலையில்லை, போராளி குடும்பமா? இருக்க நிலமில்லை. இவ்வாறான சமூக அடக்கு முறைக்குள்ளேயே இன்று முன்னாள் போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த சமூக அடக்கு முறைகளும், புறக்கணிப்புக்களும் கூட அரசாங்கத்தினதும், அதன் படையினரதும் நெருக்கு வாரங்களினாலேயே உருவாக்கப்படுகின்றது.

இதைவிடவும் மோசமான நிலை, யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகளுடைய குடும்பங்கள், மற்றும் யுத்தத்தில் அங்கவீனர்களாக்கப்பட்ட போராளிகளுடைய குடும்பங்களிற்கு நடந்து கொண்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னர் இந்தக் குடும்பங்களை தமிழர்களும் ஒரு வேண்டாப் பொருளாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இவ்வாறான குடும்பங்களில் வறுமையும் புரையோடிக் கிடக்கின்றது.

இது எங்கள் அரசியல்வாதிகளுக்கும் தெரியாது. எங்கள் சமூக அமைப்புக்களுக்கும் தெரியாது. யுத்தத்தை நீங்களே நடத்தினீர்கள், அதன் முடிவுகளை நீங்களே அனுபவித்துக் கொள்ளுங்கள் என்பதுபோல நாம் விலகிச் செல்ல முடியாது. இலங்கையில் இன முரண்பாடுகள் தோற்றம் பெற்றபோதும், அது ஆயுதப் போராட்டமாக முனைப்பு பெற்றபோதும் அதனை முழுத்தமிழர்களுமே ஆதரித்தார்கள்.

பின்னர் அதில் பலருக்கு உடன்பாடற்ற தன்மை ஏற்பட்டிருந்தாலும் கூட 30 வருடம் நடந்த யுத்தத்தின் விளைவுகளுக்கு அத்தனை பேரும் பொறுப்பாளிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. என்னுடைய கையில் இரத்தக்கறை இல்லை என யாரும் தூக்கிக் காண்பிக்க முடியாது. பலருடை கைகள் இரத்தக்கறையடைய நீங்களும் காரணமாகியிருக்கின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஜே.வி.பியினரின் கிளர்ச்சியின் பின்னர் கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் அத்தனைபேரும், எந்தவிதமான நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் யுத்தத்தின் பின்னர் சரணடைந்த 11 ஆயிரம் போராளிகளில் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டார்கள், அது விளப்பரப்படுத்தப்பட்டது. ஆனால் ஒவ்வொரு வாரமும் இராணுவ முகாமில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கிராமத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் போதும் உடனடியாக இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு, விசாரிக்கப்படுகின்றார்கள். அது போதாதென்று எங்கு கொள்ளை, கொலை, துஸ்பிரயோகம் எது நடந்தாலும், அது முன்னாள் போராளிகளாகவே இருக்கும் என கண்ணை மூடிக்கொண்டு காவல்துறையினரும், இராணுவத்தினரும் கூறிவிடுவார்கள். இந்த நிலையே இன்று முன்னாள் போராளிகளிற்கு ஈழத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.

பொருளை, பணத்தை, பதவிகளை, சொந்தபந்தங்களை, ஆசைகளை மறந்து கடைசி வரை தலைவன் சொன்ன ஒரே வார்த்தைக்காக சூடுகலன்களோடு மயிர்கூச்செறியும் களத்தில் நின்று இந்த மண்ணோடு, வீழ்ந்துபோன மாவீரர்களிற்கு நாம் கொடுக்கும் உன்னதமான மரியாதை போன்றே ஒவ்வொரு தமிழ் மகனும் சுதந்திரப் போராளிகளையும் மதித்து வந்த காலம் இன்று காற்றோடு போயிருக்கின்றது.

எங்கள் சுதந்திரத்திற்காக போராடியவர்கள், கடைசிவரை அண்ணன் சொன்ன வார்த்தைகளை மனதோடு தாங்கிய உண்மையான போராளிகள். கையை இழந்தும், காலை இழந்தும், மனைவியை பிள்ளையை தொலைத்துவிட்டு வீதியில் நிற்கின்ற பரிதாபம் உலகில் வேறு எந்த இனத்திற்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. யாழ்.தெல்லிப்பளை மனநோயாளர் வைத்தியசாலையில் மட்டும் 15 முன்னாள் போராளிகள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யுத்தத்தின் பின்னர் யுத்தம் அடைந்த நிலை, பெயரோடும், பெயரில்லாமலும், மாவீரர்கள் செய்த தியாகம், உன்னதமான தளபதிகளின் அர்ப்பணிப்பு அத்தனையும் வீண்போனது கண்டே இவர்களுக்கு மனோநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம். ஆனால் அவை எவையுமே தெரியாததுபோல் நாம் நடந்து கொண்டிருக்கின்றோம். குறைந்த பட்சம் எமக்காக வாழ்ந்தவர்களின் உணர்வுகளை மதிக்காவிட்டாலும், அவர்களது உணர்வுகளை மிதிக்காமல் நடந்தாலே போதுமானதாக இருக்கும்.

போராளிகள் யார்? மக்கள் யார்? என்ற அடையாளமே தெரியக்கூடாது என்பதற்காகவே மக்களைப் போராளிகளாகவும், போராளிகளை மக்களாகவும் மாற்றிட தலைவர் எண்ணியிருந்தார். அவருடயை தீர்க்க தரிசனங்கள் அவருக்கு சமகாலத்தை எப்போதோ சொல்லியிருக்கும் என்பதில் எமக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால் அதுவும் காட்டிக் கொடுப்பாளர்களாலும், துரோகிகளினாலும் சிதைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே எம் சொந்தங்களே, உண்மையாக தேசத்திற்காக வாழ்ந்து, அந்த நினைவுகளை நெஞ்சோடு இன்றைக்கும் சுமந்து கொண்டிருக்கும் சுதந்திரப் போராளிகளிற்கு கரங்கொடுங்கள், அவர்கள் துயரப்பாதையில் நடக்க ஒருபோதும் அனுமதி வழங்காதீர்கள், தலைவரின் பிள்ளைகள், காலத்தின் பிள்ளைகள், இனத்தின் பிள்ளைகள், காப்பாற்றுங்கள், கை கொடுங்கள், இது எம் வரலாற்றுக் கடமை.

நன்றி : ஈழமுரசு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.