Wednesday, February 15, 2012

அரசாங்கத்திற்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் 17 ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுங்கள்: மனோ கணேசன் பகிரங்க அழைப்பு

அரசாங்கத்திற்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் 17 ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுங்கள் இதொகா, மமமு, திகாம்பரம், ஸ்ரீரங்கா ஆகியோருக்கு மனோ கணேசன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 17 ம் திகதி ஐக்கிய எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய எதிர்ப்பு போராட்டத்தில் இன, மத, அரசியல் பேதங்கள் இல்லாமல் அனைவரும் கலந்துகொண்டு அநீதிகரமான எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கொழும்பு எதிர்கட்சிகளின் ஊடக நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மங்கள சமரவீர, ஜயலத் ஜயவர்தன, விக்கிரமபாகு, சிறிதுங்க, சரத் மனமேந்திர ஆகியோரும் கலந்துகொண்ட இந்த மகாநாட்டில் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,

நடுத்தர வர்க்க மக்கள் தலைகளில் இந்த வரலாறு காணாத விலையேற்றம் பேரிடியாய் விழுந்துள்ளது. குடும்ப தலைவிகள், பஸ் பயணிகள், முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், பாடசாலை வாகனங்களை பயன்படுத்துவோர் மற்றும் மலையக தோட்ட தொழிலாளர்கள், வட கிழக்கின் இடம் பெயந்த மக்கள் ஆகிய மக்கள் பிரிவினர் பெரும் பொருளாதார பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இந்நிலையில் ஏற்கனவே அரசியல் கட்சிகளுக்காக காத்திருக்காமல் நீர்கொழும்பு முதல் சிலாபம் வரை வாழும் மீனவர்கள் எரிபொருள் விளைஎற்றத்திட்கு எதிராக பாரிய போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள்.

கொழும்பு - 17 ம் திகதி மாலை 3 மணிக்கு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெறும். கொழும்பு மாவட்டம் மற்றும் மேல் மாகாணத்தில் வாழும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

கொழும்பில் வாழும் நடுத்தர மக்கள், பின்தங்கிய தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் ஆகியோர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை நாளாக வேண்டும்.
 
மலையகம் - மரத்தில் இருந்து விழுந்துள்ள தோட்ட தொழிலாளர்களை மாடு முட்டிய கதையாக மண்ணெண்ணெய் விலை உயர்வு அமைந்துள்ளது. ஏற்கனவே தோட்ட தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்த குழப்பத்தால், தினசரி பறிக்கும் கொழுந்து நிறை தொடர்பில் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். இதனால் உழைக்கும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி தவிக்கிறார்கள. இந்நிலையில் தோட்ட தொழிலாளர்கள் தலைகளில் இந்த மண்ணெண்ணெய் விலை ஏற்றம் இடியாக விழுந்துள்ளது.

இந்த எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 17 ம் திகதி வெள்ளிகிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளுவதற்கு ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, விவசாய தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் மலையக தொழிலாளர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டும் முகமாக இந்த ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இணைந்து கொள்ளும்படி இதொகா, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர தேசிய முன்னணி தலைவர் திகாம்பரம், பிரஜைகள் முன்னணி தலைவர் ஸ்ரீ ரங்கா ஆகியோருக்கு பகிரங்கமாக நான் அழைப்பு விடுக்கிறேன். அரசாங்கத்திற்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் தமது அங்கத்தவர்களையும், ஆதரவாளர்களையும் பங்குபற்ற செய்யும்படி பகிரங்க கோரிக்கை விடுக்கின்றேன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.