Thursday, January 12, 2012

வீடுகள் கட்டித் தருகிறோம், வீதிகளை நிர்மாணித்துத் தருகிறோம் - இந்த வாக்குறுதிகள் மக்களை இனிமேலும் மகிழ்ச்சிப்படுத்தாது: கிருஷ்ணாவின் விஜயம் பற்றி மனோ கணேசன் கருத்து.

தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வரும் வட மாகாண தேர்தலுக்கு நாள் குறிக்கும் அதேவேளை, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்துவதற்கான வழிசமைத்துக் கொடுப்பதே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா செய்யவேண்டிய வேலையாகும்.

இதுவே இலங்கை தொடர்பில் இந்தியாவின் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும்' என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்றைய நிலைமையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு இதுதான்.

வீடுகள் கட்டித் தருகிறோம், வீதிகளை நிர்மாணித்துத் தருகிறோம் என்று வழமையாக வழங்கப்படும் வாக்குறுதிகள் தமிழ் மக்களை இனிமேலும் மகிழ்ச்சிப்படுத்தாது. இதை இந்திய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய இன பிரச்சினைக்கு மாகாணசபை என்பதே தீர்வு என்று நான் சொல்ல வரவில்லை. அதை அரசாங்கமும் வட கிழக்கின் தமிழ் தலைமைகளும் பேசி முடிவு எடுக்கட்டும். தற்சமயம் தமிழ் தேசிய இனத்திற்கான தீர்வு எத்தகையது என்பது தொடர்பில் கூட்டமைப்புக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்து பரிமாற்றம் நடைபெறுகிறது.

இது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. தீர்வு தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி கருத்து கூறாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிரணியில் இருக்கின்ற ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்து பேசும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் நாம் வலிந்து சென்று எமது கருத்துகளை முன் வைக்க விரும்பவில்லை.

ஆனால் 13ஆவது திருத்தம் என்பது இந்நாட்டு அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளது. அதுபோல் இந்நாட்டின் ஏனைய எட்டு மாகாணங்களிலும் மாகாணசபை ஆட்சி நடைபெறுகின்றது. இந்த அரசியலமைப்பு திருத்தமும் மாகாண சபையும் இந்திய அரசு பெற்று எடுத்த குழந்தைகள். எனவேதான் நாம் இலங்கை, இந்திய அரசுகளிடம் வட மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் என்றும், 13ஆவது திருத்தத்தை அமுல் செய்யுங்கள் என்றும் கோருகிறோம். இதுதொடர்பில் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி கண்டிப்பாக எடுத்து கூற வேண்டும்.

இன்று இங்கே சிலர் இந்தியா அதிகாரப்பரவலாக்கள் தொடர்பில் எமக்கு ஆணை இட முடியாது என கூக்குரல் இடுகிறார்கள். இலங்கையின் யுத்தத்தை முடித்து வைத்தது இந்தியாதான் என்ற உண்மையை வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

அத்துடன் இன்றும் உலக அரங்கில் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றிக்கொண்டு இருப்பதும் இந்தியாதான் என்பதை அமைச்சர் கிருஷ்ணா சிங்கள ஊடகங்கள் மூலமாக சிங்கள மக்களுக்கு கூற வேண்டும். எனவே இந்தியாவிற்கு அதிகார பரவலாக்கல் தொடர்பில் அழுத்தம் கொடுக்க அதிகாரம் உள்ளது என்பதை அறிவிக்க வேண்டும்.

இந்த உண்மைகளை பகிரங்கமாக கூறுவதால் தமிழ் மக்கள் கோபித்துக்கொள்ள போகிறார்கள் என இந்தியா கவலைப்பட தேவை இல்லை. அனைத்து உண்மைகளும் இன்று தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இந்திய அரசு இந்நாட்டில் வீடுகளை இழந்த இடம் பெயர்ந்த மக்களுக்கும்இ தோட்ட தொழிலாளர்களுக்கும் வீடுகள் கட்டி வழங்குவது தொடர்பிலும்இ வடக்கில் ரயில் பாதைகள் அமைப்பது தொடர்பிலும் தமிழ் மக்கள் அறிந்துள்ளார்கள்.

இந்திய, இலங்கை அரசாங்கங்கள் வடக்கு மாகாணத்தில் வீடு கட்டுவது வீதி போடுவது, தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது என கிளம்பி இருப்பது தமிழ் மக்களுக்கு இதுவரையில் செய்தியாகத்தான் இருக்கிறது.

இந்த திட்டங்கள் நடைபெறும் வேகத்தை பார்த்தால் தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைய கூடியதாக இல்லை. இது இன்று தமிழர் மத்தியிலே பேசப்படும் பகிரங்க ரகசியம். இந்திய அரசு முன்னெடுக்கும் இத்தகைய திட்டங்கள் விரைவில் சொல்லப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடையும் என எதிர்பார்க்கத்தான் எமக்கு முடியும். அவை எப்போது செய்து முடிக்கப்படும் என்பது கிருஷ்ண பரமாத்மாவிற்குதான் வெளிச்சம்.

ஆனால் இத்தகைய வளர்ச்சி திட்டங்களை கொழும்பிலும், புதுடில்லியிலும் திட்டமிட்டு தமிழ் பிரதேசங்களில் கொண்டு வந்து அமுல் செய்ய முயலுவதைவிட இத்தகைய வளர்ச்சி திட்டங்களை சொந்த ஊரிலேயே திட்டமிட்டு செய்வதற்கான அதிகாரங்களை தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கும் அதிகார பரவலாக்கலை தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.

இதற்குதான் இந்திய அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம். இதுதான் தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. வீடுகள் கட்டி தருகிறோம், வீதிகளை போட்டு தருகிறோம் என்ற வழமையாக வழங்கப்படும் வாக்குறுதிகள் தமிழ் மக்களை இனிமேலும் மகிழ்ச்சிப்படுத்தாது. இதை இந்திய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.