Wednesday, January 11, 2012

இறுதிப் போரில் பொதுமக்களின் இழப்புக்களை வெளியிடவுள்ளது பாதுகாப்பு அமைச்சு!

போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றிய முழுமையான விபரங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிடவுள்ளது.

இந்தத் தகவலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

“பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு பொறுப்புக் கூறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது- அபத்தமானது.

எந்தவொரு மோதல்களின் போதும் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படும். அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே.

எவ்வாறாயினும் சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற கொள்கையி்ல் தெளிவாக இருந்தது.

இதனாலேயே பொதுமக்களுக்கு குறைந்த இழப்புகளுடன் போரை வெற்றி கொள்ள முடிந்தது.

மோதல்களின் போது, குறிப்பாக மனித கேடயங்களாக பொதுமக்கள் பயன்படுத்தப்படும் போது, எந்தவொரு மோதல்களிலும் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படும்.

ஆனால் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் போரை நடத்துவது என்ற கொள்கையில் அரசாங்கம், தொடக்கத்தில் இருந்த இறுதிவரை தெளிவாக இருந்தது.

பல்வேறு குழுக்களும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன.

இதனை நிபுணத்துவ ரீதியாக தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

சனத்தொகைக் கணக்கெடுப்புத் திணைக்களத்தின் உதவியுடன் போரின் போது ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்தியுள்ளோம்.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றிய கணக்கெடுப்புகள் முடிவடைந்து விட்டன.
இறுதிஅறிக்கை தயாரிப்புப் பணி நடந்து வருகிறது. மிகவிரைவில் இந்த அறிக்கை வெளியிடப்படும்.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குற்றம்சாட்டப்படும் எண்ணிக்கைக்கு அருகில் கூட இல்லை என்பதை என்னால் கூறமுடியும்.

விடுதலைப் புலிகளால் அனைத்துலக அரங்கில் குற்றம்சாட்டப்படுவது போல இனஅழிப்புகள் ஏதும் நிகழவில்லை.

இந்தக் கணக்கெடுப்பில் இயற்கையாக மரணமானோர், மோதல்களின் போது விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தனிநபர்கள், கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டு போரில் மரணமான பொதுமக்கள், விடுதலைப் புலிகள், விபத்துகளில் மரணமானோர், நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறியோர் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்படாது.

இவற்றுக்கு சிறிலங்கா இராணுவம் பொறுப்பேற்க முடியாது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.