Tuesday, January 10, 2012

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைகளை முறியடிக்க திட்டம்!!

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைகளை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு, இதற்காக முஸ்லிம் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் நோக்குடன் இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தலையும் முன்னெடுத்து வருகிறது என நம்பகரமாகத் தெரியவருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு எதிராகக் கடும் போக்குடைய சில மேற்கத்தேய நாடுகள் தீர்மானமொன்றைக் கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ளன.

இந்த நிலையில், அவ்வாறு பிரேரணை வரும்பட்சத்தில் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஆபிரிக்க நாடுகளும் உள்ளூரத் தீர்மானித்துள்ளதால் கொழும்பு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது எனத் தெரியவருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் உட்பட முக்கியமான சில மாற்றங்களால் ஜெனிவாத் தொடரில் அந்த நாடுகளும் மேற்கத்தேய நாடுகளுக்கு ஆதரவாகவே செயற்படும் என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ள அரசு தனது இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளது என அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

“முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை சீர்குலைந்துவிட்டது. எனவே, ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகவே முஸ்லிம் நாடுகள் செயற்படும் என்ற போக்கிலேயே அதன் செயற்பாடுகள் உள்ளன” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.

முஸ்லிம் நாடுகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் காரணமாக சில நாடுகள் மேற்கத்தேய நாடுகளின் அடிவருடிகளாகச் செயற்படுகின்றன.

மேற்கத்தேய நாடுகளின் தாளத்திற்கு அரசியல் ஆட்டம் ஆடும் நிலையிலேயே அந்நாடுகளின் கொள்கை உள்ளது என்றும் அந்த அரசியல் பிரமுகர் எம்மிடம் தெரிவித்தார்.

கடாபி, சதாம் ஹுஸைன் உட்பட முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்ட போது முஸ்லிம் நாடுகளின் மௌனம் அவற்றின் ஒற்றுமையை சீர்குலைத்துவிட்டது.

எனவே, இந் நாடுகள் இலங்கை விடயத்தில் கைவிரிக்கும் நிலைப்பாட்டையே இனிவரும் காலங்களில் எடுக்கும் எனச் சுட்டிக்காட்டிய அரசியல் பிரமுகர், இதன் பின்னணியில் மேற்கத்தேய நாடுகள் உள்ளன என்றும் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறானதொரு நிலையாலேயே முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்றும், அதன் பொருட்டு இராஜதந்திர மட்டத்திலான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.