Sunday, January 08, 2012

தனியார் காணிகளை கையகப்படுத்த ஒட்டகப்புலத்திலும் படைகள் முயற்சி

வயாவிளான் கிழக்கு, ஒட்டகப்புலத்தை அண்டிய பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியைக் கையகப்படுத்த சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தப் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் 20 வருடங்களாக இருக்கின்றனர் என்பதால் அது படையினருக்கு உரிய காணி என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு, காணி அமைச்சிடம் உரிமை கோரி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து காணி அமைச்சினால் வருட இறுதியில் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், உடனடியாக அந்தப் பிரதேசக் காணிகளைப் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.

"ஒட்டகப்புலத்தில் உள்ள 20 ஏக்கர் காணியில் படையினர் கடந்த 20 வருடங்களாக நிலை கொண்டிருக்கின்றனர். அதனால், அது அரச காணியாகவே கருதப்பட வேண்டும். அந்த அரச காணியை உடனடியாகத் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் ஊடாகப் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கவும்" என்று காணி அமைச்சின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி அமைச்சு உரிமை கோரும் பிரதேசத்தில் உள்ள காணிகள் அனைத்தும் தனியாருக்கு தமிழ் மக்களுக்கு சொந்தமானவை என்பதை உதயன் உறுதி செய்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் வசித்த மக்கள் அனைவரும் 1990ஆம் ஆண்டு, இராணுவத்தினர் அந்தப் பகுதியை நோக்கி முன்னேறியதைத் தொடர்ந்து இடம்பெயர்ந்தனர்.

கடந்த 20 வருடங்களாக அந்தப் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி வைத்திருந்தது சிறீலங்கா அரசு. அதனால் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் இராணுவம் தடை விதித்திருந்தது.

இடம்பெயர்வதற்கு முன்னர் இந்தப் பிரதேசத்தில் 200க்கும் குறையாத தமிழ்க் குடும்பங்கள் இருந்தன என்பதையும் உதயன் உறுதிப்படுத்தி உள்ளது. இந்தப் பிரதேசங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள்தான் என்பதை பிரதேச செயலகப் பதிவுகளும் உறுதி செய்கின்றன.

தேசிய மொழிக் கொள்கை பெயரளவில்

ஒட்டகப்புலத்திலுள்ள 20 ஏக்கர் காணியையும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்குமாறு கோரி காணி அமைச்சு அனுப்பி இருந்த கடிதம் முழுக்க முழுக்க சிங்களத்திலேயே யாழ். செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சகல அமைச்சுக்களில் இருந்தும் தமிழ் மொழியிலேயே சுற்றிக்கைகள், கடிதங்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இருப்பினும் காணி அமைச்சின் கடிதம் முழுக்க முழுக்கச் சிங்களத்திலேயே வந்துள்ளது. இவ்வாறு சிங்களத்தில் வரும் கடிதங்களுக்கு திணைக்களங்கள் பதிலளிக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.