Thursday, December 15, 2011

சர்வதேச தலையீட்டை ஒருபோதும் ஏற்கப் போவதுமில்லை - சம்பந்தனின் கனவும் பலிக்காது: ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு

போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக விசாரிக்க அனைத்துலக ஆணைக்குழுவைக் கொண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சம்பந்தன், ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல போன்றோர் எமது வெளிநாட்டுக் கொள்கை பற்றிப் பேசுகின்றனர். அது தவறானது, நிராகரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். எமது வெளிநாட்டுக் கொள்கை எமது நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதாகவும், எமது மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவுமே இருக்க வேண்டும்.

இரா.சம்பந்தன் அறிவுபூர்வமாக பேசவில்லை. உணர்வுபூர்வமாகப் பேசுகிறார். பிரச்சினைகளுக்கு அறிவுபூர்வமாகப் பேச்சு நடத்தித் தான் தீர்வுகளைப் பெறமுடியும். கடந்த செப்ரெம்பரில் ஐ.நா மனிதஉரிமை பேரவை மாநாட்டில் சிறிலங்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஒரே ஒரு நாடு மட்டுமே எமக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்தது. அப்போது நான் சிறிலங்கா அதிபருடன் நியுயோர்க்கில் இருந்தேன். அங்கிருந்து கொண்டே சுமார் 15 நாடுகளின் அமைச்சர்களுடன் எம்மால் கலந்துரையாட முடிந்தது. இதனால் எமக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரே தமது அறிக்கையை விலக்கிக் கொண்டார்.

பின்னர் ஒக்டோபரில் கொமன்வெல்த் மாநாட்டின் போது அவுஸ்ரேலிய ஊடகங்கள் சிறிலங்காவை விமர்சித்து பரப்புரைகளை மேற்கொண்டன. 2013 கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு சிறிலங்காவுக்கு கிடைக்காது என்று சிறிலங்காவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் ஊடகங்கள் வெளியிட்டன.

இதன்போதும் நாம் பல நாடுகளுடன் நடத்திய பேச்சுக்களுக்கு வெற்றி கிடைத்தது. பெரும்பாலான நாடுகளின் ஆதரவு, எமக்குக் கிடைத்த போதும் ஒரே ஒரு நாடு எமக்கெதிராக செயற்பட்டது. இதன்போதும் மேலும் 15 நாடுகள் எமது நியாயத்தை, ஏற்றுக் கொண்டு ஆதரவளிக்க முன்வந்தன. முடிவில் 2013ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாடு எமது நாட்டுக்கு வழங்கப்பட்டது. இது எமக்கு கிடைத்த பெரியவெற்றி.

எமது வெளிநாட்டுக் கொள்கை தவறானதோ அல்லது நிராகரிக்கப்பட்டதோ அல்ல என்பதை எடுத்துக் காட்ட இவற்றை சிறந்த ஆதாரமாகக் காட்டலாம். விமர்சனங்கள் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு, இறைமை போன்ற விடயங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

போர்க்கால சம்பவங்களை ஆராய உள்ளக விசாரணைகளை நிராகரித்து விட்டு அனைத்துலக விசாரணைகளைக் கோருகிறார் இரா.சம்பந்தன். இதனை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது. லூயிஸ் ஆபர் அம்மையாரின் கருத்துக்களை அவர் ஆதரிக்கிறார். இது எமது நாட்டுக்கள் எந்த சர்வதேச அமைப்பும் பிரவேசிக்கலாம் என்பதையே கொண்டுள்ளது.

சர்வதேச தலையீட்டை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. அதற்கு இடமளிக்கவும் போவதில்லை. போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக விசாரிக்க அனைத்துலக ஆணைக்குழுவைக் சிறிலங்காவுக்குள் கொண்டு வரும் கூட்டமைப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது.

தருஸ்மன் அறிக்கையானது (ஐ.நா நிபுணர்குழு) யாரிடம் சாட்சிகளைப் பெற்று தயாரிக்கப்பட்டது என்பது எவருக்குமே தெரியாது. இந்தநிலையில் அது எப்படி உண்மைத்தன்மையானதாக இருக்க இருக்க முடியும்? அது அரசியல் இலாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று.

அனைத்துலக காவல்துறையிடம் எமது பிரச்சினைகளை ஒப்படைக்க நாம் தயாரில்லை. சில கொள்கைகள் எமது நாட்டுக்குப் பொருத்தமானதல்ல என்பதை ரணில் விக்கிரமசிங்கவும் உணர வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.