Thursday, December 01, 2011

லண்டனில் வணிக நிலையம் ஒன்றில் பணியாற்றிய சிறிலங்கா இளைஞர் குத்திக்கொலை! முகமூடி நபர் கைவரிசை

லண்டனில் வணிக நிலையம் ஒன்றில் பணியாற்றிய சிறிலங்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். லிவர்பூல், ஹேட்டன் பகுதியில் உள்ள கிங்ஸ்வே என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரான்லி நியூஸ் அன் வைன்ஸ் என்ற வணிக நிலையத்தில் பணியாற்றிய இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இந்த இளைஞர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பிரித்தானிய காவல்துறையினரால் மீட்கப்பட்டார். உடனடியாக வைஸ்ரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிறிது நேரத்தில் மரணமானார்.

கொல்லப்பட்ட இளைஞர் சிறிலங்காவைச் சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ள போதும், அவர் யார் என்று அடையளம் காணப்படவில்லை. அவரை அடையாளம் காணும் முயற்சியில் பிரித்தானியக் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கொலைக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து கிங்ஸ்வே மற்றும் வைற்லொட்ஜ் அவென்யூ பகுதியில் காவல்துறையினர் வீடு வீடாக விசாரணைகளை நடத்தி வருவதுடன், சில இடங்களில் தேடுதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

கண்காணிப்பு காணொலிப் பதிவு கருவியில், கொலையாளி முகமூடி அணிந்து கொண்டு வணிக நிலையத்தில் இருந்து தப்பி ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. கொல்லப்பட்ட இளைஞர் லண்டனில் 12 மாதங்களாக வசித்து வந்துள்ளார். சிறிலங்காவைச் சேர்ந்த குடும்பம் ஒன்றினால் நடத்தப்பட்ட, மதுபான மற்றும் நாளிதழ் முகவர் நிலையத்திலேயே இவர் ஒரு பணியாளராக இருந்துள்ளார்.

"கொலையாளியான ஆண் தன்னை அடையாளம் காணமுடியாவாறு கறுப்பான ட்ரக்சூட் அணிந்திருந்தார். முகத்தை மறைத்திருந்தார். அவரைக் கண்டுபிடிக்க தடயவியல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். திருட்டுக்காக இந்தக்கொலை இடம்பெறவில்லை. அதேவேளை இனவெறி நோக்கிலும் இடம்பெறவில்லை. திறந்த மனதுடன் விசாரணைகளை நடத்துகிறோம்" என்று கூறியுள்ளார் பிரித்தானிய காவல்துறையின் பிராந்திய கண்காணிப்பாளர் டரன் மாட்லன்ட்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.