Friday, December 30, 2011

ஜெமினி நிறுவனம் யாருக்கு நண்பன்? ராஜபக்சவிற்கா? தமிழருக்கா

2008, 2009 ஈழமண்ணில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற உருக்கமான பதிவான உச்சிதனை முகர்ந்தால் என்ற படத்தை எவ்வாறேனும் முடக்கிவிடுவதென்ற முயற்சிகள் தமிழகத்தில் தொடர்கின்றன. இந்த முயற்சியில் படத்தை வெளியிடுவதாக ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கும் பங்கு இருக்குமோ என்ற ஐயம் இருக்கின்றது.

திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதிலும், ஊடகங்களில் அதை விளம்பரப்படுத்துவதிலும் படத்தின் விநியோகத்தினரான ஜெமினி நிறுவனம் செய்த குழறுபடிகள் முதற்சுற்று வெற்றியை கடுமையாக பாதித்திருப்பதாகத் தெரிகிறது. பல தொலைக்காட்சிகள் விளம்பரத்தை ஒளிபரப்ப மறுத்துவிட்டதாகவும், பல திரையரங்குகள் படத்தை திரையிட மறுத்து விட்டதாகவும் ஜெமினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகவில்லை. வெளியான திரையரங்குகளைப் பற்றி போதிய சுவரொட்டி விளம்பரம் கூட இல்லை. தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிடாத நிலையில் படம் வந்திருப்பது பலருக்கு தெரியவில்லை.
இந்த குழறுபடிக்கு வெளிச்சக்திகளின் தூண்டுதல் காரணமா? ஜெமினியின் திட்டமிட்ட (சதி)அலட்சியம் காரணமா என்பது புரியவில்லை, ஈழத் தாய் மண்ணின் துயரை சித்தரிக்கும் அற்புதமான படைப்பை தோல்வியின் விளிம்பிற்குத் தள்ள முயற்சித்ததைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் தலையில் தனது நண்பன் திரைப்படத்தைப் பலகோடி ரூபாவிற்கு கட்டுவது பற்றியே ஜெமினி முனைப்பாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.

ஊச்சிதனை முகர்ந்தால் வெளியாகாத சுமார் 100 முக்கிய மையங்களில் உரிய விளம்பரத்துடன் ஜெமினி வெளியிட முன்வரவேண்டும். இதை விட்டுவிட்டு நண்பன் திரைப்படத்தை விற்பதென்றால் ஜெமினி யாருக்கு நண்பன்? ஊச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் முறைப்படி வெளியாகி விடுமோ என்று அஞ்சும் சிறிலங்காவிற்கு நண்பனா?
இப்படிப்பட்ட நியாயமான கேள்விகள் எழும் நிலையில் ஜெமினி நிறுவனம் தாமதம் இல்லாமல் செயற்பட்டு உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை தமிழக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும். இனியும் அலட்சியம் தொடர்ந்தால் புலம்பெயர் தமிழ்க்குமுகம் நண்பன் படத்தை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கனடா, அமெரிக்கா, ஜெர்மனி,சுவிஸ், பிரான்ஸ், நோர்வே, டென்மாரக், அவுஸ்திரேலியா மற்றும் எங்கெல்லாம் புலம்பெயர் தமிழ்மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் நண்பன் வெளியாகவே கூடாது. இப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் இங்குள்ள எந்த விநியோகத்தர்களும் இறங்க முடியாதபடி ஒட்டு மொத்த தமிழ்ச்சமூகமும் உரிய நடவடிக்கையெடுத்து காரியம் ஆற்ற வேண்டும். அப்போது தான் தமிழ்த்தாய் மண்ணிற்கும் தமிழ்த்திரையுலகிற்கும் இடையிலான உறவை முறிக்க நடக்கும் முயற்சிகளைத் தகர்க்க முடியும்.

நண்பன் படத்தில் நடித்த மற்றும் பங்கேற்ற கலைஞர்களை நாம் வெறுக்கவில்லை ஆனால் தமிழர் அவலத்தை மழுங்கடிக்க முயலும் ஜெமினி, கலைஞர் தொலைக்காட்சி போன்ற நிறுவனங்களின் கீழ்த்தரமான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.