Tuesday, December 13, 2011

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் வெளியாக இன்னும் 72 மணித்தியலங்கள் !

உலகெங்கும் "உச்சிதனை முகர்ந்தால்" வெளியாக இன்னும் 72 மணி நேரம்தான் உள்ளது. ஒரு பேட்டியின்போது புனிதவதிக்கு என்ன நேர்ந்தது என்று சொன்னதைக் கேட்டு நீங்கள் சிந்திய கண்ணீர்த் துளியிலிருந்துதான் இந்தப் படத்தின் பயணம் தொடங்கியது. அன்புள்ள ஏகலைவன், வணக்கம்.
உலகெங்கும் "உச்சிதனை முகர்ந்தால்" வெளியாக இன்னும் 72 மணி நேரம்தான் உள்ளது. ஒரு பேட்டியின்போது புனிதவதிக்கு என்ன நேர்ந்தது என்று சொன்னதைக் கேட்டு நீங்கள் சிந்திய கண்ணீர்த் துளியிலிருந்துதான் இந்தப் படத்தின் பயணம் தொடங்கியது. இன்று, முன்னோட்ட (பிரிவியூ) காட்சிகளில் அந்தப் புனித நதியின் அமைதியான நகர்வைப் பார்த்துக் கண்ணீர் சிந்தும் ஒவ்வொருவரின் கண்ணீரிலும் உங்கள் கண்ணீரைத் தான் பார்க்கிறேன் ஏகலைவன்.

நேற்று, லண்டன் வானொலிக்காக சகோதரி ரூபிகுமார் எடுத்த பேட்டியின்போது, உரிமையோடு ஒரு வேண்டுகோள் வைத்தேன். "உச்சிதனை முகர்ந்தால் - மூலம் எங்கள் இனத்துக்குச் செய்யவேண்டிய கடமையை நாங்கள் செய்திருக்கிறோம். இந்தப் படத்தை முன்பதிவு (ரிசர்வ்) செய்து குடும்பத்தோடு சென்று பார்ப்பதன் மூலம், உங்கள் கடமையை நீங்கள் செய்யவேண்டும். இந்தப் படத்தின் வெற்றிதான் இதுபோன்ற இன்னும் நூறு படங்கள் வர வழிவகுக்கும்" என்று ரூபிகுமார் மூலம் நான் வைத்த வேண்டுகோள், உலகெங்கும் இருக்கிற தமிழ்ச் சொந்தங்களுக்கு மட்டுமல்ல ஏகலைவன், இங்கேயிருக்கிற தமிழர்களுக்கும் பொருந்தும்.

படம் வெளியாவதிலிருந்து முதல் பத்துநாட்கள் - டிசம்பர் 16 முதல் 26வரை - முன்பதிவு செய்து குடும்பத்தோடு படத்தைப் பார்ப்பதன் மூலம், குத்துப்பாட்டுகளிலேயே குடியிருக்கும் தமிழ் சினிமாவின் தலையில் ரெண்டு தட்டு தட்டவேண்டாமா தமிழினம்? இந்தப் படத்தை முன்பதிவு செய்து பார்க்காமல் வேறெந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் நம் சொந்தங்கள்! இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான தகுதியை - காற்றுக்கென்ன வேலி - எனக்குக் கொடுத்திருக்கிறது ஏகலைவன். அந்த உரிமையோடும் தகுதியோடும் தான் உலகெங்கிலும் இருக்கிற தமிழ்ச் சொந்தங்களுக்கும், இங்கேயிருக்கிற நம் தமிழ் உறவுகளுக்கும் இதைச் சுட்டிக்காட்டினேன். லண்டனிலிருந்தும் கனடாவிலிருந்தும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, புதன்கிழமையே முன்பதிவு செய்து விடுவதாக சொல்கிற உறவுகளின் குரலைக் கேட்கும்போது கண்கலங்கி விடுகிறேன் ஏகலைவன். அவர்கள் நேசிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன சம்பாதித்திருக்கிறேன்? இதுபோதும் ஏகலைவன்.

சென்ற வாரம் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அபஸ்வரம் மாதிரி ஒலித்த நக்கீரன் நிறுவன நிருபரின் குரல் கூட - உச்சிதனை முகர்ந்தால் - படத்துக்குத் தரப்பட்ட நற்சான்றிதழ் என்றே நான் நினைக்கிறேன் ஏகலைவன். "புலிகள் உங்களுக்கு 25 கோடி கொடுத்தார்களாமே" என்று அந்த அன்புத் தம்பி அதிமேதாவித்தனத்துடன் கேட்டபோது, காற்றுக்கென்னவேலி - நாட்களிலிருந்து தடம்மாறாமல் தடுமாறாமல் தெளிவான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்ற பெருமித உணர்வுதான் ஏற்பட்டதே தவிர, அந்தத் தம்பியின் மீது கோபம் வரவில்லை. "சொல்வதுதான் சொல்கிறீர்கள், 500 கோடி ஆயிரம் கோடி என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்" என்று சிரித்தபடியே நான் திருப்பிக் கேட்டபோது, அந்தப் பரபரப்புப் பத்திரிகைத் தம்பியின் முகம் போனபோக்கை நீங்கள் பார்த்திருந்தால் ரசித்திருப்பீர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் விட்டால் நமக்கு வேறென்ன அடையாளம் இருக்கமுடியும் ஏகலைவன்? எனக்கும் உங்களுக்க்கும் மட்டுமல்ல, நக்கீரன் நிறுவனத்தின் அந்தப் பரபரப்புத் தம்பிக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் அண்ணன் கோபாலுக்கும் அன்புத் தம்பி காமராஜுக்கும் கூட பிரபாகரனை விட்டால் வேறென்ன அடையாளம்? உச்சிதனை முகர்ந்தால் - படத்துக்காக விடுதலைப் புலிகள் கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்திருப்பார்கள் என்று அந்தப் பரபரப்புத் தம்பி நினைக்கிறாரென்றால் - உச்சிதனை முகர்ந்தால் - தன்னுடைய கடமையை நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கிறது என்றுதானே பொருள்! அதற்காகப் பெருமைப்படாமல் நாம் கோபப்பட முடியுமா?

பொழுதுபோக்க அல்ல... அழுது தீர்க்க... என்று தமிழக பண்பலை வானொலிகளில் உச்சிதனை முகர்ந்தால் பற்றிய விளம்பரத்தின்போது அறிவிக்கப்படுவதைப் பற்றியும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. அழுவதற்கு மட்டுமா - என்று கேட்கிறார்கள் நண்பர்கள். இல்லை ஏகலைவன்.. பெண் போராளிகளுடன் புனிதவதிக்கு இருக்கிற நட்பைப் பார்த்து மகிழ்வீர்கள். "எங்க அக்காமார் துவக்கு வைச்சிருப்பாங்க... அவர்களைப் பார்த்தால் ஆர்மி கூட நடுங்கும்" என்று அந்தக் குழந்தை சொல்வதைக் கேட்டு சிலிர்ப்பீர்கள். என்றாலும் படம் முடியும் போது புனிதவதி என்கிற குழந்தைக்காக அழுவீர்கள். அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் கோபாவேசத்தை எழுப்பும். இன்னும் 3 நாளில் உலகம் இதை உணரும் ஏகலைவன். அந்த நாளுக்காக - டிசம்பர் 16ம் தேதிக்காக உங்களைப் போலவே நானும் தவிப்புடன் காத்திருக்கிறேன்.

என்னுடைய படத்தைப் பாருங்கள் - என்று கெஞ்சிக் கேட்கவேண்டிய நிலைக்கு உங்களில் எவரும் என்னைத் தள்ளிவிடவில்லை ஏகலைவன். இந்தப் படத்தை முன்பதிவு செய்து பாருங்கள் - என்று உரிமையுடன் சுட்டிக்காட்டும் இடத்தில் வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த அன்பும் பாசமும்தான் என்னை இயங்கவைக்கிறது. அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நான் நன்றி சொல்லவேண்டியிருக்கிறது.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது ஏகலைவன். புனிதவதி என்கிற அந்தப் புனித நதி எவருடைய குழந்தையோ அல்ல.. நம் ஒவ்வொருவரின் குழந்தை. அந்தக் குழந்தை இங்கே வரும்போது ஒட்டுமொத்தத் தமிழகமும் அந்தக் குழந்தையை அன்புடன் அணைக்கும். அவளது கைகளைப் பற்றி நம்முடைய கண்களில் ஒற்றிக்கொள்ளும் போது, அந்தப் பிஞ்சுக் கரங்களை நம்முடைய கண்ணீர் நனைக்கும். அந்தக் கண்ணீர், 26 கிலோமீட்டர் இடைவெளியைக் கூட இணைக்கும். எந்தக் கனவையும் நிறைவேற்ற முடிகிற நம்மால் இந்தக் கனவை நிறைவேற்ற முடியாதா ஏகலைவன்?

- என்றும் அன்புடன்,
புகழேந்தி தங்கராஜ்
12.12.2011.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.