Wednesday, November 16, 2011

வாய்ப்புப் பறிபோனதற்கு இந்தியாவே காரணம் – குற்றம்சாட்டுகிறது சிறிலங்கா

2018ம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு சிறிலங்காவுக்குக் கிடைக்காமல் போனதற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா எழுப்பியுள்ளது.கடந்த ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற கொமன்வெல்த் போட்டிகளில் இருந்த குறைபாடுகளும், பிரச்சினைகளும் சிறிலங்காவுக்கான வாய்ப்பு பறிபோனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

“புதுடெல்லியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கொமன்வெல்த் போட்டியானது, இந்தியாவில் இடம்பெற்ற மிக வெற்றிகரமான போட்டி என்று எமக்குத் தெரிந்திருந்தாலும், அந்தப் போட்டி தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் எமது வாய்ப்புகளை பாதித்திருக்கக் கூடும்“ என்று சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா இந்தப் போட்டிகளை சரியாக நடத்தவில்லை என்ற ஒரு பிரேரணையை கனடா கொண்டு வந்தது.

புதுடெல்லிப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்படவில்லை என்றும், சிலருக்கு இன்னமும் பணம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியது.

அதற்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், அது வாக்களிக்கும் மற்ற நாடுகளிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியது’’ என்று கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சென்.கிட்ஸ் தீவுகளில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், அவுஸ்ரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகருக்கு ஆதரவாக 43 வாக்குகளும், அம்பாந்தோட்டைக்கு ஆதரவாக 27 வாக்குகளும் கிடைத்தன.

“புதுடெல்லி போட்டிகள் சரியாக நடத்தப்படவில்லை என்ற வாதத்துக்கு ஆதரவு தெரிவித்த நாடுகள், ஆசிய நாடுகள் சிறப்பானமுறையில் போட்டிகளை நடத்த முடியாதவை என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும் அஜித் நிவாட் கப்ரால் மேலும் கூறியுள்ளார்.

புதுடெல்லிப் போட்டி குறித்த ஆய்வை மேற்கொண்ட குழுவினர், போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் ஏற்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தனர்.

போட்டிகளை நடத்தும் அமைப்பில் பெரும் குறைபாடுகள் இருந்தன எனவும், அவர்கள் தமக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக நடத்து கொண்டனர் எனவும் ஆய்வுக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

2018ம் ஆண்டு போட்டிகளை நடத்த விண்ணப்பித்திருந்த இரு நகரங்களினதும் ஏற்பாடுகள் குறித்த மதிப்பீட்டை செய்த குழுவினர், அம்பாந்தோட்டையில் பாதுகாப்புடன் கூடிய அமைதியான ஒரு போட்டி நடைபெறும் என்பதில் தாங்கள் திருப்தி அடைவதாக கூறியிருந்தனர்.

ஆனால் அந்த நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த குறிப்பிடத்தக்தளவு முதலீடுகள் தேவை என்றும் கூறியிருந்தது.

அந்த மதிப்பீட்டுக் குழுவினர் அம்பாந்தோட்டை நகரை விடவும், போட்டிகளை நடத்துவது குறித்த ஆபத்துகள் கோல்ட்கோஸ்ட் நகருக்கு குறைவாக இருந்தையும் சுட்டிக்காட்டிருந்தனர்.

இதனிடையே, போட்டி நடத்தும் வாய்ப்பு யாருக்கு என்று தீர்மானிக்கும் விதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, ''இப்படியான போட்டிகளை நடத்த சிறிய நாடுகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது நியாயமற்ற ஒரு செயல்“ என்று கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.